நவீன நாட்குறிப்பு செயலிகள்

இன்று நாட்குறிப்பு  எழுதும் அனுபவத்தை முற்றிலும் மாற்றிவிட்டன திறன்கருவிச் செயலிகள். ஆப்பிள் தனது ஜர்னல் செயலியை 2023-ஆம் ஆண்டு அறிவித்தபோது, நாட்க்குறிப்பு எழுதும் பழக்கம் கொண்டோர் ஆவலுடன் எதிர்பார்த்தனர். தொடக்கத்தில், ஐபோன் பயனர்களுக்கு மட்டும் கிடைக்கப்பெற்ற இந்த செயலி, பின்னர் ஐபேட்ஒஎஸ் 26, மேக்ஒஎஸ் 26, ஐபேட், மேக் போன்ற பலவற்றிலும் ஒருங்கிணைக்கப்பட்டது. இப்போது, திறன்பேசியில் தொடங்கிய ஒரு பதிவை, மடிக்கணிணியில் முடித்து வைக்கலாம்; அனைத்தும் ஐகிளவுட் (iCloud) வழியாக இணைக்கப்பட்டிருப்பதால் தடையற்ற அனுபவம்  கிடக்கிறது.

ஆப்பிள் ஜர்னல் ஒரு சாதாரண நாட்குறிப்பு செயலி மட்டும் அல்ல. இதில் எழுதும் குறிப்புகளுடன் புகைப்படங்கள், காணொளிகள், இடத் தகவல்கள், இசைப்பட்டியல்கள், உடற்பயிற்சி விவரங்கள் போன்றவற்றையும் சேர்க்கலாம். தனியுரிமைக்கு ஆப்பிள் மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது; அனைத்து தகவல்களும் கருவியிலேயே பாதுகாப்பாக உருவாக்கப்படுகின்றன. வடிகட்டும் வசதி, முக்கியமான பதிவுகளை குறித்து வைக்கும் வசதி, வரைபடக் காட்சியில் இடத் தகவல்களைப் பார்வையிடுவது போன்ற அம்சங்கள் எழுதும் அனுபவத்தை மேலும் எளிமையாக்குகின்றன.

ஐபேட் கருவியில் ஆப்பிள் பென்சில் (Apple Pencil) கொண்டு கையெழுத்தில் எழுதும் வசதியும் இருக்கிறது. அண்மைகால மேம்பாடுகளில் தொடர்ந்து எழுதும் நாள்கள், பதிவுகளின் எண்ணிக்கை போன்ற புள்ளிவிவரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் வார்ப்புரு (Template), நிறம் மாற்றுதல், அலங்கார எழுத்துருக்கள் போன்ற அம்சங்கள் இல்லாதது ஒரு குறையாகவே பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் கூகுள், பிக்சல் ஜர்னல் (Pixel Journal) என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. ஜெமினி நானோ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படங்கள், இட வரலாறு, நாட்காட்டி நிகழ்வுகள் போன்றவற்றின் அடிப்படையில் எழுதுவதற்கான பரிந்துரைகள் தரும் இந்த செயலி, மனநிலை கண்காணிப்பு, வாரம்/மாத அடிப்படையிலான எழுதும் பழக்கப் புள்ளிவிவரங்கள் போன்ற கூடுதல் வசதிகளையும் வழங்குகிறது. ஆனால் இது தற்போதைக்கு பிக்சல் 10 கருவிகளில் மட்டுமே கிடைக்கிறது.

கூகுள் ஜர்னல் பிளேஸ்டோர் (Play Store) வழியாக நேரடியாகக் கிடைக்காது; பிக்சல் 10-ல் முன்கூட்டியே நிறுவப்பட்டிருக்கும். ஏபிகே (APK) தொகுப்பு வழியாக மற்ற ஆண்டிராய்டு கருவிகளிலும் நிறுவிக்கொள்ளலாம். ஆனால் பிக்சல் அல்லாத திறன்பேசிகளில் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் இல்லாத எளிய டைரி செயலியாக மட்டுமே இது செயல்படும். குரல் குறிப்பு (Voice Note), பழக்கக் கண்காணிப்பு போன்ற வசதிகள் இல்லாததால் பின்வரும் மாற்று செயலிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

ஹபிடிகா வேலைகளையும், பழக்கங்களையும் விளையாட்டு போல் எளிமையாக மாற்றி பயனர்களை ஊக்குவிக்கிறது. டெய்லியோ (Daylio) மனநிலையை மையமாகக் கொண்டு அன்றாட செயல்பாடுகளையும் மனநிலையையும் இணைக்கிறது. ஜர்னி (Journey), ஜர்னல் செயலியின் மேம்பட்ட வடிவமாகக் கருதப்படுவதால், டேக் (Tag), மனநிலை கண்காணிப்பு, பல்வேறு தளங்களில் பயன்பாடு போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. குடும்பத்துடன் கூட்டு நாட்குறிப்பு எழுத விரும்புவோருக்கு டே ஒன் (Day One) சிறந்த தேர்வாகும்; தனிப்பயனாக்கப்பட்ட வார்ப்புருக்கள், எளிமையான  இடைமுகம் ஆகியவை இதன் பலம்.

பிக்சல் 10 இல்லாவிட்டாலும் கூகுள் ஜர்னல் அம்சத்தை நிறுவிப் பயன்படுத்தலாம்; அடிப்படை நாட்குறிப்பு தேவைகள் நிறைவடையும். எதிர்காலத்தில் இந்த செயலியில் கூடுதல் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் வரும் என எதிர்பார்க்கலாம்.

  • அருட்செல்வம்
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now