நமக்குத் தெரியாத மொழியில் ஒருவர் பேசினால் அதை நமக்குத் தெரிந்த மொழிக்கு மாற்றும் நேரலை மொழிபெயர்ப்பு வசதியை ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிள் நுண்ணறிவு (Apple Intelligence) கொண்டு இந்த நுட்பம் இயக்கப்படுகிறது.

தொலைப்பேசி அழைப்புகள், FaceTime அழைப்புகள், குறுஞ்செய்திகள் போன்ற அனைத்திலும் இந்த நேரலை மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தலாம்.
தொலைப்பேசி உரையாடலில் எதிர்முனையில் பேசுபவரின் மொழி நமக்குத் தெரியாமல் நாம் மொழிபெயர்ப்பு வசதியைப் பயன்படுத்துகிறோம் எனில் தானாகவே அவர் பேசும் ஒலி குறைந்து மொழிபெயர்ப்பு ஒலி கூடுதல் ஓசையுடன் ஒலிக்கும். அவர் பேசப் பேச நமக்குத் தெரிந்த மொழியில் அந்த செய்தி உடனுக்குடன் நமக்குத் தெரிந்துவிடும். எதிர் முனையில் இருப்பவரின் பேச்சு ஒலி குறைந்து ஒலிப்பதால் சாதாரண உரையாடல் போலவே உடனுக்குடன் பதில் சொல்ல முடியும்.
பேஸ்டைம் அழைப்புகளில் பேச்சின் மொழிபெயர்ப்பு வடிவம் எழுத்துகளாகத் திரையில் தோன்றும். கூடவே மொழிபெயர்ப்பு காதிலும் ஒலிக்கும். குறுஞ்செய்திகளில் நாம் தட்டெழுதும்போதே நாம் குறிப்பிடும் மொழிக்குத் தானாகவே மொழிமாற்றம் செய்துவிடும். இதற்கெனத் தனியாக வேறு எந்தச் செயலியும் பயன்படுத்த வேண்டாம். நமக்குத் தெரிந்த மொழியில் தட்டெழுதினால் போதும், மற்றவற்றை ஆப்பிள் நுண்ணறிவு பார்த்துக்கொள்ளும்.
உரையாடும் இருவரும் ஆப்பிள் ஏர்பாட்3 பயன்படுத்துபவர் எனில் இன்னும் சிறப்பு. காதில் ஏர்பாட்3 காதணிபாடியை மாட்டிக்கொண்டு அவரவர் மொழியில் பேசலாம். நம் எதிரில் இருப்பவர் பேசப் பேச நம் காதில் நம் விருப்ப மொழியில் நேரலையாக மொழிபெயர்க்கப்பட்ட செய்தி வந்து சேர்ந்துவிடும். நாம் பதில் சொல்வது எதிரில் இருப்பவருக்கு அவர் மொழியில் சென்று சேரும். மிக இயல்பாக ஓர் உரையாடலை எந்தத் தடையும் இன்றி நிகழ்த்திவிடமுடியும்.
சுற்றுலா செல்லும் இடத்தில் உணவு வாங்குவது, ஆடைகள் வாங்குவது போன்றவற்றை செய்வது எளிது. ஆனால் கொஞ்சம் தனிப்பட்ட நட்பு, காதல் உரையாடல்களை இப்படித் தொழில்நுட்பத்தின் வசம் தரலாமா? அலுவலக உரையாடல் என்றாலும் பல மில்லியன் டாலர் புழங்கும் வணிக ஒப்பந்தங்கள் பற்றிப் பேசும்போதும் தகவல் பாதுகாப்பு அவசியமாகிறதே? ஆப்பிள் நிறுவனத்தின் ஆகப்பெரிய வலிமை அதன் தனியுரிமை பாதுகாப்பு அம்சம்தான். இதிலும் அது இருக்கிறது என்று வாக்கு தருகிறது ஆப்பிள்.
ஆப்பிள் நுண்ணறிவானது இம்மாதிரி மொழிபெயர்ப்புச் செயல்பாடுகளை நம்முடைய ஆப்பிள் திறன்கருவி உள்ளேயே செயல்படுத்தும்படி வடிவமைக்கப்படுகிறது. ஆப்பிள் சர்வர் வரைக்கும் நம் செய்திகளை அனுப்பி அதை வாங்கி நம்மிடம் கொடுப்பதில்லை. எனவே தனியுரிமை தகவல் பாதுகாப்பு பற்றிக் கவலை வேண்டாம் என்கிறது ஆப்பிள்.
ஆப்பிள் கருவிகளில்தான் இந்த நேரலை மொழிபெயர்ப்பு புதிது. ஆண்டிராய்டு கருவிகளில் கூகுள் இதை ஏற்கெனவே செயல்பாட்டுக்குக் கொண்டுவந்துவிட்டது. எனினும் கூகுள் மொழிபெயர்ப்புச் செயலி வடிவில் இச்சேவை கிடைப்பதால் ஒருவர் பேசுவதை செயலி உள்வாங்கி மொழிமாற்றி அதை ஒலிக்கவிட்டு அடுத்தவருக்குப் புரிய வைக்கும்படியாக இருக்கிறது. ஆப்பிள் நுண்ணறிவு இயல்பான உரையாடலைச் சாத்தியமாக்குகிறது.
இப்போதைக்கு இத்தாலி, ஜப்பான், கொரியா, சீனா உள்ளிட்ட சில மொழிகளில் மட்டுமே ஆப்பிள் இவ்வசதியைக் கொண்டுவந்துள்ளது. விரைவில் மற்ற மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். கூகுள், தமிழ் உட்பட 90 மொழிகளில் இச்சேவையைச் செயல்படுத்துகிறது. நாம் செல்லினம் செயலி வழியாக தமிழில் தட்டச்சு செய்தால் அப்படியே நாம் தேர்ந்தெடுக்கும் வேறெந்த மொழிக்கும் நம் செய்தி உடனுக்குடன் மொழிமாற்றம் செய்யப்பட்டுவிடும். கூடுதலாக மொழிகளைக் கற்பது அவரவர் ஆர்வத்தின் அடிப்படையில் மட்டுமே, கட்டாயத்திற்காக அல்ல எனும் நிலை வந்துவிடும்.
- செல்லினம் குழு
ஆப்பிள் நேரலை மொழிமாற்றும் காணொளி.
