iOS 26-க்கான செல்லினம் புதுப்பிப்பு

ஆண்டுதோறும் புதிய இயங்குதள புதுப்பிப்புகள் வரும்போது, அவற்றில் எந்த சிக்கலும் இல்லாமல் செயல்பட நமது செயலிகளையும் உடனுக்குடன் புதுப்பிக்க வேண்டியிருக்கும். அண்மையில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐ.ஓ.எஸ் 26-க்குப் புதுப்பித்த சில பயனர்கள், இயங்குதளத்தோடு வரும் குறிப்புகள் (நோட்ஸ்), மின்னஞ்சல் போன்ற முக்கியச் செயலிகளில் தட்டெழுதும்போது செல்லினம் விசைப்பலகைகளில் சிக்கல்கள் ஏற்படுவதாக கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்த புகார்களை முழுமையாக ஆராய்ந்து, சிக்கல்களைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்துவிட்டோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். புதுப்பிக்கப்பட்ட பதிப்பு தற்போது ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் பதிவேற்றப்பட்டுள்ளது.

சரிசெய்யப்பட்டவை:

  • iOS 26 முக்கிய செயலிகளில் விசைப்பலகை காட்சி சிக்கல்களைத் தீர்த்துள்ளோம்.
  • எல்லா செயல்களிலும் விசைப்பலகைத் தோற்றத்தைச் சீராக்கியுள்ளோம்.
  • iOS 26 புதிய அம்சங்களுடன் சிறந்த இணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம்.
  • சொல் பரிந்துரைகளும் தானியங்கி திருத்தங்களும் எல்லா செயலிகளிலும் சரியாக இயங்குவதை உறுதிசெய்துள்ளோம்.

இவற்றோடு ஐபேட் பதிப்பையும் புதுப்பித்து, விசைப்பலகையில் உள்ள எழுத்துக்களுக்கு நமது தமிழ் சங்கம் எம்.என். எழுத்துருவைப் பயன்படுத்தியுள்ளோம். அண்மைய ஐ.ஓ.எஸ்சில் இயல்பான தமிழ் எழுத்துருவை ஆப்பிள் மாற்றியிருந்தாலும், விசைப்பலகையிலவது ஏற்கனவே இருந்த எழுத்துருவை அமைக்குமாறும் பயனர்கள் கேட்டிருந்தனர். இது தெளிவான, அழகான தமிழ் தட்டெழுத்து அனுபவத்தை அளிக்கும் என்று நம்புகிறோம்.

ஐபோன் கருவிகளில் 2009ஆம் ஆண்டு iOS 3-இல் முதல்முறையாக செல்லினம் செயலியை வெளியிட்டோம். திறன்கருவிகளிலும் தரமான தமிழ் உள்ளிடு முறைகளை வழங்கவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். பயனர்களிடம் இருந்து தொடர்ந்து வரும் கருத்துகள், செல்லினம் செயலியில் உள்ள தமிழ்-99, அஞ்சல் உள்ளிடுமுறைகளை பராமரிக்கவும் மேம்படுத்தவும் பெரும் உதவியாக இருந்து வருகின்றன.

புதிய பதிப்பு ஆப்ஸ்டோரில் தயாராக இருக்கிறது. பதிவிறக்கிக்கொள்ளலாம். வழக்கம்போல அனைத்து பயனர்களுக்கும் இந்த புதுப்பிப்பு இலவசம்.

உங்கள் கருத்துக்களை தொடர்ந்து கூறிவாருங்கள். செல்லினத்தை இடைவிடாது மேம்படுத்தி வருவோம்!

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now