கூகுள் வரைபடத்தில் புது வசதி

கூகுள் மேப்ஸ் (Google Maps) பயன்பாட்டில் வரைபடங்களை தெருக்களாகப் பார்க்கும் கோணத்தில் இருந்து செயற்கைக்கோள் கோணத்தில் பார்க்கும் வசதி உண்டு. விரைவில் இதை எளிதாக்கும் புதிய அம்சம் வரவுள்ளது. Aerial எனும் புதிய பொத்தான் அறிமுகமாகவுள்ளது. இதன்மூலம், பயனர்கள் இரண்டு காட்சிகளுக்கு இடையே விரைவாக மாற முடியும்.

google maps

தற்போது கூகுள் வரைபடத்தின் தெருக்காட்சி அம்சம் தெருக்கள், சுற்றுப்புறங்களை மெய்நிகர் முறையில் பார்க்க உதவுகிறது. ஆனால் இதிலிருந்து செயற்கைக்கோள் கோணத்திற்கு மாறுவதை ஒரே சொடுக்கில் செய்ய இயலாது. பார்த்துக்கொண்டிருக்கும் வரைபடத்தில் இருந்து வெளியேறி அடுக்குகள் பகுதிக்குச் சென்று அங்கே கோணத்தை மாற்றிவிட்டுப் பின்னர் எந்தத் தெருவைப் பார்த்துக்கொண்டிருந்தோமோ அதைத் தேடி எடுக்கவேண்டும். இது சமயங்களில் குழப்பத்தை உண்டாக்கி நேரத்தை வீணாக்குகிறது. இந்தச் சிக்கலுக்கு தீர்வாக புதிய ஏரியல் (Aerial) பொத்தான் அறிமுகமாகிறது.

கூகுள் வரைபடப் பதிப்பு 25.39.07-ல் இந்த அம்சத்துக்கான குறியீடு கண்டறியப்பட்டுள்ளது. தெருக்காட்சி படத்தின் கீழ் இடது மூலையில் இந்த பொத்தான் தோன்றும். இதைச் சொடுக்கினால், மேலிருந்து பார்க்கும் செயற்கைக்கோள் கோணக் காட்சிக்கு உடனடியாக மாற முடியும்.

இந்தப் பொத்தான் 2D, 3D ஆகிய இரண்டு செயற்கைக்கோள் வரைபடங்களிலும் செயல்படுகிறது. செயற்கைக்கோள் கோணத்தில் இருக்கும்போது மீண்டும் தெருக்காட்சிக்குத் திரும்பவும் இதே பொத்தானைப் பயன்படுத்தலாம். குறிப்பிடத்தக்க வகையில், தெருக்காட்சியில் நீங்கள் எந்தத் திசையை நோக்கி இருந்தீர்களோ, அதையே செயற்கைக்கோள் கோணக் காட்சியிலும் பராமரிக்கிறது.

புதிய பொதுப் போக்குவரத்து வழிகாட்டல் மேம்பாடுகளுடன் சேர்ந்து இந்த அம்சம், கூகுள் வரைபடச் செயலி அனுபவத்தை மேலும் சிறப்பாக்குகிறது. உங்கள் பயணத்துக்கு முன்னர் சுற்றுப்புறங்களை ஆராய இது சிறந்த வழியாக அமையும்.

தற்போது இந்த அம்சம் உடனடியாகப் பயனர்களுக்குக் கிடைக்கவில்லை. விரைவில் படிப்படியாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • செல்லினம் குழு
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now