ஆப்பிள் கையகப்படுத்திய சில்லு

ஆப்பிள் நிறுவனம் ஐயர்லாந்தை தளமாகக் கொண்ட கணினிச் சில்லு வடிவமைப்பு நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. கணினிச் சில்லுகள் வடிவமைப்பில் அனுபவம் பெற்ற இந்த ஐசி மாஸ்க் டிசைன் நிறுவனம், செப்டம்பர் 29 அன்று ஆப்பிளில் இணைவதாக அறிவித்தது. இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் சியாரன் வைட் அறிவிப்பின் வழியாக இந்த கையகப்படுத்தல் வெளிச்சத்துக்கு வந்தது.

apple chip

மே 2025 இல் RAC7 என்ற விளையாட்டு உருவாக்கும் நிறுவனத்தை வாங்கிய பின்னர், வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட ஆப்பிளின் முதல் கையகப்படுத்தல் இதுவாகும். ஐசி மாஸ்க் டிசைன் நிறுவனத்தின் இணையதளம் ஜூன் 10, 2025 அன்று நீக்கப்பட்டுள்ளதாக வேபேக் மெஷின் காப்பக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், ஆப்பிள் இந்த நிறுவனத்தை ஜூன் மாதத்தில், WWDC 2025 மாநாட்டின் போது வாங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.

ஐசி மாஸ்க் டிசைன் நிறுவனம் கணினிச் சில்லுகள், செயலிகளின் அமைப்பு வடிவமைப்பில் தனித்துவம் வாய்ந்தது. Fortune 500 எனபடும் முதன்மையான நிறுவனங்களுக்கு சேவை அளித்து வந்த இந்த நிறுவனம், ஐயர்லாந்தில் மூன்று வடிவமைப்பு மையங்களைக் கொண்டு செயல்பட்டு வந்தது. ISO9001-2015 சான்றிதழ் பெற்ற இந்த நிறுவனம், தரமான கணினிச் சில்லு வடிவமைப்பு சேவைகளை வழங்கி வந்தது.

ஆப்பிள் தனது சொந்த சில்லுகளை வடிவமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. ஐபோன், ஐபேட், மெக் கணினிகளுக்கான ஏ சீரிஸ், எம் சீரிஸ் சில்லுகளை சொந்தமாக வடிவமைக்கும் ஆப்பிள், தற்போது புதிதாக வாங்கியுள்ள நிறுவனத்தின் திறமையை தனது எதிர்கால சில்லு உருவாக்க முயற்சிகளுக்கு பயன்படுத்த திட்டமிடுகிறது.

இந்த கையகப்படுத்தல் மூலம் ஆப்பிள் தனது கணினிச் சில்லுத் தொழில்நுட்பத்தை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கையகப்படுத்தலின் மதிப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

  • செல்லினம் குழு
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now