கூகுள் டிரைவ் என்பது கோப்புகளை சேமித்து வைக்க, எங்கிருந்தாலும் அணுக, அனைவருடனும் பகிர உதவக்கூடிய ஒரு பெட்டகம். அளவு கணிசமானது என்பதால் நாமும் தேவையானது தேவையற்றது என அனைத்தையும் அதில் போட்டுவைக்கப் பழகிக்கொண்டோம். தேவைப்படும் நேரத்தில் தேவையானதைக் கண்டுபிடிக்க தேடுபொறி ஒன்றே நமக்கிருந்த கருவி. இப்போது ஜெமினி செயற்கை நுண்ணறிவைக் கூகுள் டிரைவுக்குக் கொண்டுவருகிறார்கள். இனிமேல், பல கோப்புகளிலிருந்து தேவையான தகவல்களைச் ஒன்றாக சேகரிப்பதற்கு, அதிக நேரம் பிடித்தது.

இப்போது ஜெமினியை களமிறக்கி அந்த குறையை தீர்த்திருக்கிறது கூகுள். ஆண்டிராய்டு, ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கான டிரைவ் செயலிகளில் ஜெமினி செயற்கை நுண்ணறிவு நேரடியாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை, ஜெமினியின் பயன்பாடு இணையதளத்தில் மட்டுமே கிடைத்துக்கொண்டிருந்தது. ஆனால் இப்போது ஜெமினியின் பரந்த பார்வை திறன்பேசியின் பக்கமும் வருகிறது.
சரி கூகுள் டிரைவில் ஜெமினி என்னென்ன செய்யும்? இதன் மூலம் தனிப்பட்ட கோப்புகளைச் சுருக்கலாம், முழு கோப்புறைகளின் கண்ணோட்டத்தைக் (Overview) கொடுக்கலாம், பல ஆவணங்களிலிருந்து முக்கியமான தகவல்களை ஒரே நேரத்தில் சேகரிக்கலாம்.
கூகுள் டிரைவில் உள்ள படங்களுடனும் ஜெமினி செயற்கை நுண்ணறிவு வேலை செய்கிறது. கோப்புகளில் உள்ள படங்களைப் பற்றி என்ன கேள்விகள் கேட்டாலும், ஜெமினி பதிலளிக்கிறது. ஏதேனும் அவசரமான நேரத்தில் கோப்புகளை தேடும்பொழுதும் பெரிய அளவில் உதவிபுரிகிறது.
செயலியில் ஜெமினியை எப்படி பயன்படுத்துவது என்று யோசிக்க வேண்டாம். அது எளிதுதான். மேலே வலது பக்கத்தில் ‘ஜெமினியிடம் கேளுங்கள்’ என்ற பொத்தான் கொண்டு வரப்பட்டுள்ளது. கோப்புகளின் விவர பக்கத்தில் ‘இந்த கோப்பை சுருக்கவும்’ என்ற அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடுவதன் மூலமும் தேவையான கோப்பை பற்றிய முழு தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும். இது மட்டும் இல்லாமல் கேள்விகளை தட்டச்சு செய்து பதில்களை பெறும் அம்சத்தையும் கூகுள் வழங்கியிருக்கிறது. நீங்களே கேள்விகளை கேட்பதால், என்னென்ன சந்தேகங்கள் இருந்தாலும், பூர்த்தி செய்துகொள்ளலாம்.
இருப்பினும், இலவச சாதாரண பயனர்களின் கணக்குகளுக்கு இது இன்னமும் அறிமுகப்படுத்தப்படவில்லை. வணிக தரநிலை, நிறுவன தரநிலை, கல்விக்கான கூகுள் செயற்கை நுண்ணறிவு சிறப்பு, கூகுள் ஒன் செயற்கை நுண்ணறிவு சிறப்பு போன்ற கட்டணத் திட்டங்களுக்கு மட்டுமே ஜெமினியை பயன்படுத்தும் வசதி கிடைக்கும்.
கூகுளின் இந்த முயற்சி, செயற்கை நுண்ணறிவு நம் அன்றாட மின்னியல் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் எப்படி இணைந்துவருகிறது என்பதைக் காட்டுகிறது. தகவல்களை விரைவாகக் கண்டுபிடிப்பதிலிருந்து, சிக்கலான ஆவணங்களைப் புரிந்துகொள்வது வரை, ஜெமினி நமது வேலையை எளிதாக்கும் ஒரு சக்திவாய்ந்த நண்பனாகவே மாறுகிறது.
- மு. இசக்கிமுத்து
