“செல்லினத்தில் பேருதவியாக இருக்கும் சொற்பரிந்துரை அம்சம் விண்டோசில் கிடைக்குமா?” என்று செல்லினம் பயனர்கள் அவ்வப்போது கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். திறன்பேசியில் நாம் எல்லோருமே செல்லினத்தின் சொற்பரிந்துரையைப் பயன்படுத்தியிருப்போம். ஆனால் அதே அனுபவத்தை விண்டோசில் பெற வேண்டும் என்பது நீண்டகாலமாகப் பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. முரசு அஞ்சல் புதிய பதிப்பில் அந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியான முரசு அஞ்சல் 12ஆம் பதிப்பில் பயனர்களை அதிகம் கவர்ந்ததும் இந்தச் சொற்பரிந்துரை அம்சம்தான்.
முரசு அஞ்சல் இலவசப் பதிப்பிலேயே சொற்பரிந்துரை வசதி கிடைக்கும். ஓரிரு எழுத்துகளைத் தட்டியதுமே செல்லினம் போலவே முரசு அஞ்சல் செயலியும் சொற்பரிந்துரைகளைக் கொடுக்கும். முழுச்சொல்லோ அது தொடர்பான இன்னும் பல சொற்களோ பட்டியலாகத் திரையில் தெரியும். முரசு அஞ்சல் புதிய பதிப்பில் இருப்பது மேம்படுத்தப்பட்ட சொற்பரிந்துரை அம்சம். எனவே, அடுத்தடுத்து வரக்கூடிய சொற்களையும் சரியாகக் கணித்துப் பரிந்துரைக்கும். மேம்பட்ட வசதிகள் விரைவில் செல்லினத்திலும் அறிமுகமாகும்.
சொற்பரிந்துரை அம்சத்தைப் பயன்படுத்துவது மிக எளிது. உள்ளீட்டு முறை அமைப்புகளுக்குள் சென்று தட்டச்சுப் பரிந்துரைகள் என்ற பகுதியில் “எப்போதும் பரிந்துரைகளைக் காட்டு” என்பதைத் தேர்ந்தெடுத்தால் போதும். தமிழ்99, முரசு – 7, முரசு – 6, பழைய தட்டச்சு, புதிய தட்டச்சு, பாமினி, தமிழ்நாடு தட்டச்சு என முரசு அஞ்சல் செயலியின் அனைத்து உள்ளீட்டு முறைகளிலும் இந்த வசதி வேலை செய்யும்.
இவை அனைத்தும் அடங்கிய முரசு அஞ்சல் செயலியை பதிவிறக்கம் செய்வது மிகவும் எளிது. anjal.net/download எனும் இணையதளத்திற்குச் சென்று விண்டோசு பதிப்பை எளிதாகப் பதிவிறக்கிக் கொள்ளலாம். நிறுவிய பின்னர் “செயல்படுத்து” (Activate) என்பதை அழுத்தி உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்க வேண்டும். மின்னஞ்சலுக்கு வரும் உரிம எண்ணை உள்ளிட்டால் போதும், கணக்கு செயல்படத் தொடங்கிவிடும்.
விண்டோசில் தமிழ் தட்டச்சை வேகமாகவும் எளிதாகவும் செய்ய விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. முரசு அஞ்சல் செயலியின் பதிவிறக்கப் படிநிலைகளை எளிதாக விளக்கும் காணொளிக்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பார்த்து விளக்கமாகத் தெரிந்துகொள்ளலாம்.
இது தொடர்பாக எந்த ஒரு சந்தேகம் எழுந்தாலும் [email protected] எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். முரசு அஞ்சல் குழுவினர் பதிலளிப்பார்கள்.
