தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்

எழுத்துச் சீர்திருத்தத்துக்கு முந்தைய எழுத்துகள் இருக்கும் பக்கத்தைத் தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எழுத்தாளர், கவிஞர் மகுடேசுவரன். களிநயமான இந்தப் பதிவு எழுத்துகள் அடைந்துள்ள மாற்றம் பற்றி விளக்குகிறது. செல்லினம் பயனர்களுக்காக அதைக் கீழே கொடுத்துள்ளோம்.

“பழைய நூல்களில் காணப்படும் எழுத்துருக்கள் கட்டமிடப்பட்டுள்ளன. இவையே பிற்காலத்தில் அச்சுச் சீர்திருத்தற்கு ஏற்ப ஒரே இனமாக மாற்றப்பட்டன.

அ). நகர வரிசை எழுத்துகள் ‘த’ என்ற எழுத்தினைப்போல் கீழ்த்தீற்றல் இல்லாமல் காணப்படுகின்றன.

ஆ). சூ என்ற எழுத்துக்கு வரையப்படும் கூடுதல் ஊகாரக் குறிப்பு ‘கீழ்விலங்குச் சுழி’ எனப்படும். அது சுழியோடு இருத்தல் நலம்.

இ). ணா/றா/னா ஆகிய எழுத்துகள் கீழ்விலங்குகளைப் பெற்றுள்ளன. அவ்வாறு எழுதுகையில் ஓரக்கோட்டில் ஓர் ஒடுக்கம் தரப்படும். அவ்வொடுக்கம் றகரத்திற்கு மட்டும் தரப்படுவதுமுண்டு.

ஈ). ளூ என்பது துணைக்கால் இட்டும் லூ என்பதுபோல் எழுதப்படலாகும். அந்த ளூ-வை விளக்குவதற்காகவே திருவள்ளூர் என்ற ஊர்ப்படத்தினை இணைத்துள்ளேன்.

உ). ணை, லை, றை, னை ஆகியன ஆனைக்கொம்பு பெற்று ஐகாரத்தை உணர்த்துகின்றன.

ஊ). றொ, றோ, னொ, னோ ஆகியன தம்முன்னே ஒற்றைக்கொம்பையும் இரட்டைக்கொம்பையும் கொண்டுள்ளன. அவ்வழியே குறில் நெடில் தன்மையை உணர்த்துகின்றன. வலப்புறமாகத் துணைக்கால் பெறுவதில்லை. கீழ்விலங்காகச் சுழித்து ஏற்றினால் போதும்.

எ). மெய்யெழுத்துகளின் புள்ளிகள் குத்துப் புள்ளிகளாக இருக்கின்றன.

ஏ). ஆய்தத்தைக் குறிக்கும் முப்புள்ளிகளும் சிறுவட்டப் புள்ளிகளாக உள்ளன.

பழந்தமிழ் அச்செழுத்துகள் இவ்வாறு இருந்தன என அறிந்திருப்போமாக.”

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now