யூடியூப் தனது தளத்தில் உள்ள விருப்பக்குறி பொத்தானுக்கு (Like Button) புதிய தனிப்பயன் அசைவூட்டங்களை (Custom Animations) அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் பார்க்கும் காணொளியின் வகையைப் பொறுத்து இந்த அசைவூட்டங்கள் மாறும்.

யூடியூப் அண்மையில் இணையம், திறன்பேசி, தொலைக்காட்சி ஆகியவற்றுக்கு புதிய பயனர் இடைமுகத்தை (UI) வெளியிட்டது. சில மாற்றங்கள் விமரிசனத்தை சந்தித்தாலும், இந்த விருப்பக்குறி பொத்தான் அசைவூட்டங்கள் பயனர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. ஈஸ்டர் முட்டை (Easter Eggs) போல தளம் முழுவதும் சிதறி கிடப்பதால், பயனர்கள் இவற்றை கண்டுபிடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
X பயனர் ஆண்ட்ரியாஸ் ஸ்டார்ம் (Andreas Storm) அனைத்து 20 அசைவூட்டங்களையும் சேகரித்து வெளியிட்டுள்ளார்.
20 வகை அசைவூட்டங்கள்
யூடியூப் இந்த பிரிவுகளுக்கு தனிப்பயன் அசைவூட்டங்களை வழங்குகிறது:
- மோட்டார் வாகனம் (Motorvehicle)
- கற்றல் (Learning)
- இசை (Music)
- திரைப்படம் (Film)
- பயணம் (Travel)
- கூடைப்பந்து (Basketball)
- கால்பந்து – அமெரிக்க (Football)
- கிரிக்கெட் (Cricket)
- கால்பந்து – சாக்கர் (Soccer)
- பேஸ்பால் (Baseball)
- டென்னிஸ் (Tennis)
- சமையல் (Cooking)
- பூனை (Cat)
- நாய் (Dog)
- நகைச்சுவை (Comedy)
- திகில் (Horror)
- காதல் (Love)
- காதல் கதை (Romance)
- விறுவிறுப்பு (Thriller)
- தொலைக்காட்சி (TV)
எப்படி வேலை செய்கிறது?
நீங்கள் ஒரு இசைக் காணொளியை பார்த்து விருப்பக்குறி பொத்தானை அழுத்தும்போது இசைக் குறி அசைவூட்டம் (Music Note Animation) தெரியும். பூனை காணொளிக்கு பூனை அசைவூட்டம், கிரிக்கெட் காணொளிக்கு கிரிக்கெட் அசைவூட்டம் என்று மாறும்.
ஒரு காணொளியில் பல கூறுகள் இருந்தால், முக்கியக் கருப்பொருளுக்கு ஏற்ற அசைவூட்டம் காட்டப்படும். யூடியூப் தானாகவே காணொளியை வகைப்படுத்தி, அதற்கேற்ற அசைவூட்டத்தை வழங்குகிறது.
இந்த சிறிய மாற்றம் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், தளத்தை மேலும் சுவாரசியமாக்குகிறது.
பயனர் வெளியிட்ட அசைவூட்டப்படங்கள்
- செல்லினம் குழு
