மொழி கற்பிக்கும் செயலிகள் நவீன உலகில் கற்றலின் விதிமுறைகளை முழுமையாக மாற்றியுள்ளன. எளிமை, தனிப்பட்ட அனுபவம், விளையாட்டுத்தன்மை ஆகியவற்றை இவை கொண்டிருக்கின்றன. இதனால் கோடிக்கணக்கானோர் பல்மொழி திறனாளர்களாக மாறும் வாய்ப்பு எளிதாகிறது. பயணம், தொழில் வளர்ச்சி, அல்லது கலாசார ஆர்வம் என எதற்காக இருந்தாலும், இன்றைய காலத்தில் ஒரு புதிய மொழியை கற்றல் ஒற்றை விரல் தொடுதலிலேயே கற்பது நவீன சாத்தியமாகியுள்ளது. ஒரு கைப்பேசியும் இணைய இணைப்பும் இருந்தாலே போதும் — எந்த நேரத்திலும், எங்கிருந்தும் புதிய மொழிகளை கற்றுக்கொள்ளலாம்.

மொழி கற்கும் செயலிகளில் சில உலகளாவிய அளவில் புகழ்பெற்றவை. அவற்றில் முதன்மையானது பாபெல் எனப்படும் செயலியாகும். ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாபெல், உண்மையான உரையாடல்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. குறுகிய பாடங்கள், கலாசாரப் பின்னணி, நடைமுறை உரையாடல் பயிற்சிகள் இதன் முக்கியமான அம்சங்களாகும். இணைய இணைப்பு இல்லாதபோதும் கற்றுக்கொள்ளும் வசதி இதில் உள்ளது. ஆனால் இதன் பெரும்பாலான உள்ளடக்கங்கள் கட்டண அடிப்படையில் மட்டுமே கிடைப்பது ஒரு குறையாகும்.
2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட லிங்கோடியர் எனப்படும் செயலி, முதலில் ஜப்பானியம், கொரியன், சீனம் போன்ற ஆசிய மொழிகளுக்காக வடிவமைக்கப்பட்டது. இலக்கண விளக்கங்களை தெளிவாக வழங்குவதால் ஆழமான கற்றலுக்கு இது சிறந்த கருவியாகும். பின்னர் பல்வேறு மொழிகளையும் இதில் சேர்த்துள்ளனர். ஆனால் பேசும் பயிற்சிகள் குறைவாக உள்ளன, மேலும் சில சிறப்பம்சங்கள் கட்டணத்தில் மட்டுமே கிடைக்கும்.
மற்றுமொரு மொழி கற்கும் செயலியான புசூ, ஸ்பெயினில் உருவான, சமூக அடிப்படையிலான மொழிக் கற்றல் தளமாகும். இதில் பயனர்கள் உலகம் முழுவதும் உள்ள தாய்மொழி பேசுபவர்களிடமிருந்து நேரடியாக பின்னூட்டம் பெற முடியும். புசூ (Busuu) என்ற பெயருக்கு பின்னால் ஒரு உணர்வுபூர்வமான கதை உள்ளது. அந்த பெயர், ஆப்பிரிக்காவின் கேமரூன் நாட்டில் பேசப்பட்டு வந்த “புசூ” என்ற அரிதான மொழியிலிருந்து பெறப்பட்டது. 1980களில் நடைபெற்ற ஓர் இனவியல் ஆய்வின்படி, அக்காலத்தில் புசூ மொழியை பேசத் தெரிந்தவர்கள் வெறும் எட்டு பேரே இருந்தனர். ஒருகாலத்தில் ஒரு சமூகத்தின் வாழ்வின் அடையாளமாக இருந்த அந்த மொழி, மறைந்து போகும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
இந்த உண்மையால் ஈர்க்கப்பட்ட புசு நிறுவனம், 2010ஆம் ஆண்டில் ஒரு சிறப்பு முயற்சியை மேற்கொண்டது. உலகம் மறந்து வரும் அந்த புசூ மொழியை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அவர்கள் ஒரு குறுகிய “புசூ மொழி பாடத்திட்டம்” உருவாக்கினர். அதன்மூலம் பயனர்கள் புசு செயலியைப் பயன்படுத்தி அந்த மொழியின் அடிப்படை சொற்களையும் எளிய வாக்கியங்களையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு பெற்றனர்.
இங்கிலாந்தில் 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மெம்ரைஸ் செயலி நினைவாற்றலை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. நினைவாற்றல் நுட்பங்களையும் இடைவெளி மீள்பதிப்பு முறையையும் பயன்படுத்தி சொற்களை நினைவில் வைக்க உதவுகிறது. தாய்மொழி பேசுபவர்களின் உண்மையான காணொளிகளைப் பயன்படுத்துவதால் உச்சரிப்பும் கேட்டல் திறனும் மேம்படுகின்றன. ஆனால் இலக்கணமும் எழுதும் பயிற்சியும் குறைவாக உள்ளதால் முழுமையான கற்றல் அனுபவம் கிடைக்காது.
டிராப்ஸ் என்பது மொழி கற்றலை ஒரு விளையாட்டைப் போல மாற்றியுள்ள வண்ணமயமான செயலியாகும். இதில் பயனர்கள் ஒரு நாளில் வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும் என்பதால், நீண்ட நேரம் அமர்ந்து படிக்க வேண்டிய அவசியமில்லை. விளையாட்டுத் தன்மை கொண்ட படங்கள், சொற்கள் பொருத்துதல், வண்ணமயமான அனிமேஷன்கள் மூலம் கற்றல் எளிமையாகவும் நினைவில் நிற்கக்கூடியதாகவும் மாறுகிறது. டிராப்ஸ் செயலியில் ஹவாய் (Hawaiian) போன்ற அழியும் நிலையில் இருந்து மீட்கப்பட்ட மொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இது உலகின் பல்வேறு கலாசார மொழிகளை உயிருடன் வைத்திருக்க உதவுகிறது. 2018ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சிறந்த செயலி விருதைப் பெற்றதன் மூலம் டிராப்ஸ் உலகளவில் மிகவும் புதுமையான கல்வி செயலிகளில் ஒன்றாகப் பெயர் பெற்றது.
இன்றைய செயலிகளில் செயற்கை நுண்ணறிவு முக்கியப் பங்கு வகிக்கிறது. உச்சரிப்பு திருத்தம், உரையாடல் அனுபவம், தனிப்பட்ட கற்றல் வழிகள் போன்றவை செயற்கை நுண்ணறிவு மூலம் துல்லியமாக வழங்கப்படுகின்றன.
- அருட்செல்வம்
