புகைப்படங்களுக்கு புதிய உயிர்

கூகுள் நிறுவனம், தற்போது தனது புகைப்பட சேமிப்பு சேவையில் ஒரு முக்கியமான முன்னேற்றத்தை அறிவித்துள்ளது. இனி, திறன்பேசியில் எடுத்த படங்களை மட்டும் இல்லாமல், புகைப்படக் கலைஞர்கள் பயன்படுத்தும் முழு உயர்தரப் பட வடிவங்களையும் (RAW format) தானாகவே சேமித்து வைத்துக் கொள்ளும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

பொதுவாக நம் திறன்பேசிகளில் எடுக்கப்படும் படங்கள் சுருக்கப்பட்ட வடிவில் இருக்கும். அதில் நிறங்களும், வெளிச்சங்களும் சில அளவு குறைக்கப்பட்டிருக்கும். ஆனால் உயர்தர படங்கள் என்பவை புகைப்பட கருவி பதிவு செய்ய ஒவ்வொரு நிறம், வெளிச்சம் என எதையும் குறைக்காமல் முழு விவரங்களுடன் பதிவு செய்யும். இது புகைப்படக் கலைஞருக்குப் புதையல் போன்றது. ஏனெனில், பின்னர் அந்தப் படத்தைத் திருத்தும் போது, ஒளி, நிறம், நிழல் அனைத்தையும் இயல்பாக மாற்றிக் கொள்ள முடியும். இதனால், ஒரு சாதாரண படம் கூட ஓவியமாக மாறும் வாய்ப்பு பெறுகிறது.

கூகுள் புகைப்படங்கள் பயன்பாட்டில் இந்த  உயர்தர படங்களை அப்படியே அளவு மாறாமல் சேமிக்கும் விருப்பம் சேர்க்கப்பட்டுள்ளது. அதை செயல்படுத்தினால் உங்கள் திறன்பேசியில் எடுக்கப்படும் அனைத்து உயர்தர படங்களும் தானாகவே கூகுள் கிளவுடில் பதிவாகும். இதன் மூலம், எந்த இடத்திலிருந்தும், எந்த கருவியில் இருந்தும், உங்கள் உயர் தரப் புகைப்படங்களைப் பார்க்கவும் பகிரவும் முடியும்.

உயர்தர படங்கள் சாதாரண புகைப்படங்களை விட அளவில் பல மடங்கு பெரியவை. ஒரு உயர்தர புகைப்படம் 25 முதல் 100 மெகாபைட்டுகள் வரை கொண்டிருக்கலாம். எனவே, இதனால் உங்கள் கூகுள் சேமிப்பு இடம் விரைவில் நிரம்பும் வாய்ப்பு உண்டு. இதனை நினைவில் கொண்டு, கூகுள் எச்சரிக்கையும் வழங்குகிறது.  இந்த மாற்றம் கூகுள் புகைப்பட செயலியை சாதாரண சேமிப்புச் செயலி என்பதிலிருந்து, ஒரு புகைப்படக் கலைஞரின் நண்பனாக மாற்றுகிறது. இப்போது, தரமும் வசதியும் ஒன்றாக இணைந்துள்ளது புகைப்பட கலைஞர்களின் வேலையை எளிமையாக்கியுள்ளது.

  • சத்யா கோபாலன்
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now