கூகுள் தனது கூகுள் ஒன் சேமிப்பக சேவையின் மெட்டீரியல் 3 எக்ஸ்பிரசிவ் வடிவமைப்பில் புதிய மாற்றங்களை கொண்டுவந்திருக்கிறது.

கூகுள் தனது செயலிகளுக்கு ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பு மொழியைப் பின்பற்றுகிறது. அதற்கு “மெட்டீரியல் வடிவமைப்பு” என்று பெயர். இது செயலிகளின் வண்ணங்கள், பொத்தான்கள், எழுத்துக்கள் எப்படி இருக்க வேண்டும், செயலி எப்படி வேலை செய்ய வேண்டும் என்று அனைத்தையும் முடிவு செய்கிறது. இதன் மெட்டீரியல் 3 ரக மாற்றம் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இப்போது அதில் கூடுதலாக சில புதிய அம்சங்களைக் கொண்டு வருகிறது கூகுள்.
கூகுள் படங்கள் செயலி பயனர்களுக்கு 15 ஜிபி டிரைவ் சேமிப்பக வசதியை வழங்குகிறது. ஆனால் தேவையில்லாத புகைப்படங்கள், ஜிமெயிலில் பழைய மின்னஞ்சல்கள் சேர்ந்து சேமிப்பகத்தை முழுவதுமாக நிரப்பிவிடும். இப்போது இடத்தை காலியாக்க வேண்டுமானால், ஒவ்வொரு புகைப்படமாகப் பார்த்து, “இது வேண்டுமா வேண்டாமா” என்று முடிவு செய்து நீக்க வேண்டும்.
இந்த நேரத்தை விரயமாக்கும் வேலையை கூகுள் எளிதாக்கியிருக்கிறது. ஆண்டிராய்டு அதாரிட்டி என்ற தொழில்நுட்ப இணையதளம் கூகுள் ஒன் செயலியின் புதிய பதிப்பில் (v1.287.828055836) சில மாற்றங்களைக் கண்டறிந்துள்ளது.
இதன் மூலம் கூகுள் ஒன் செயலியில் தேவையற்றதை நீக்கும் பக்கத்தில் “இவற்றை நீக்கலாமே” என்ற பரிந்துரை ஒன்று காண்பிக்கப்படுகிறது. அதில் அதிக சேமிப்பகத்தை எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள், காணொளிகள், பெரிய டிரைவ் கோப்புகள், பெரிய இணைப்புகள் கொண்ட மின்னஞ்சல்கள், போன்றவற்றை பரிந்துரைக்கிறது. அதில் சிறுபடங்கள்(Thumpnail) காண்பிக்கப்படுவதால் தேவையற்றவற்றை எளிதாக நீக்கலாம். கோப்பை இடதுபுறம் தள்ளினால் உடனே அது நீக்கப்படும். அந்தக் கோப்பு தேவை என்றால் வலதுபுறம் தள்ளிவிட்டால் உடனே அது சேமிக்கப்படும்.
அதேபோல ‘கூகுள் டிரைவ் கோப்புகள்’ பக்கத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து கோப்புகளையும் ஒரே நேரத்தில் தேர்வு செய்வதற்கான புதிய பொத்தான் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் கோப்புகளை எளிதாக வகைப்படுத்தும் வசதியும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்கது என்னவென்றால், இந்த புதிய அம்சம் ஆண்டிராய்டு, ஐஓஎஸ் இரண்டிலும் ஒரே நேரத்தில் வெளியாகியிருக்கிறது. பொதுவாக கூகுள் தனது அம்சங்களை முதலில் ஆண்டிராய்டில் வெளியிடும், பின்னர் ஐபோனுக்கு வரும். ஆனால் இந்த முறை இரண்டுக்கும் ஒரே நேரத்தில் கிடைத்திருக்கிறது.
ஆனால் ஆண்டிராய்டு அதாரிட்டி தளம் இந்த அம்சம் அனைவருக்கும் கிடைத்துவிட்டதாகச் சொல்கிறது. ஆனால் சிலருக்கு இன்னும் கிடைக்கவில்லை. இது படிப்படியாக அனைவருக்கும் வரும்.
- மு. இசக்கிமுத்து
