கூகுள் வரைபடத்தில் மின்சக்தி சேமிப்பு

கூகுள் தனது வரைபடங்கள் செயலியில் நெடுந்​தூர பயணங்களின்போது உதவும் மின்சக்தி சேமிப்பு முறையை (power saving mode) அறிமுகப்படுத்தியிருக்கிறது.

ஆண்டின் இறுதியில் தனது பிக்சல் திறன்பேசிகளுக்கு பல முக்கியமான புதுப்பிப்புகளை கூகுள் வழங்கி வருகிறது. அதில் முக்கியமானது நவம்பர் பிக்சல் டிராப் (Pixel Drop) புதுப்பிப்பு. இது ஆண்டிராய்டு அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் பல புதிய கூறுகளையும் மாற்றங்களையும் கொண்டு வருகிறது.

மேம்படுத்தப்பட்ட அறிவிப்புகள், சிறந்த மோசடி பாதுகாப்பு போன்ற பல சிறப்பு வசதிகள் இருந்தாலும், இந்த முறை ஆண்டிராய்டுக்கு வந்திருக்கும் மிகப் பெரிய புதிய அம்சம் கூகுள் வரைபட (Google Maps) செயலியின் மின்சக்தி சேமிப்பு முறை.

கூகுள் வரைபடத்தை பயன்படுத்தி உலகம் முழுவதும் பலர் பயணம் செய்து வருகிறார்கள். நீண்ட ​தூர பயணங்கள் என்றால் கையில் மின் சக்தி சேமிப்பான் (power bank) இல்லாமல் செல்வது சாத்தியமில்லை. ஒருவேளை சேமிப்பான் இல்லை என்றால் மின்சக்தி இல்லாமல் எப்போது திறன்பேசி நின்றுபோகும் என்ற அச்சம் இருக்கும். இப்போது இந்த இடரைத் தீர்க்க முயன்றிருக்கிறது கூகுள்.

தனது வரைபடத்தில் மின்சக்தி சேமிப்பு முறை என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது ஒரே நிற வண்ண அமைப்பைப் (monochrome color scheme) பயன்படுத்தி, திரையில் காட்டப்படும் வரைகலைகளைக் (graphics) குறைப்பதன் மூலம் மின்சக்தியை சேமிக்கிறது. இதன் பயனர் இடைமுகம் (UI) எளிமையாக இருந்தாலும்,  அனைத்து முக்கியமான விவரங்களையும் காட்டுகிறது.

இந்த புதிய முறை எவ்வளவு மின்கலன் ஆயுளைச் சேமிக்கும் என்பது பற்றிய தகவல்கள் ஏதும் இல்லை. ஆனால் அடுத்த சில வாரங்களில் அதிகமானோர் இதைப் பயன்படுத்தத் தொடங்கும்போது, அவர்களின் அனுபவங்களை தெரிந்துகொள்ளலாம்.

இந்த வசதி பிக்சல் 10 ரக திறன்பேசிகளுக்கு மட்டுமே கிடைப்பதாக கூறப்படுகிறது. பிக்சல் 10, பிக்சல் 10 புரோ, 10 புரோ எக்ஸ்எல், 10 புரோ ஃபோல்ட் திறன்பேசிகளில் இத​னை பயன்படுத்தலாம். பிற பிக்சல் திறன்பேசிகளில் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது பற்றிய தகவல்கள் ஏதும் இல்லை.

பிக்சல் 10ல் பதிவிறக்கம் செய்வதற்கு அமைப்புகளுக்குச் சென்று, சிஸ்டம் என்பதைத் தட்டவும், பின்னர் மென்பொருள் புதுப்பிப்பு என்பதை தட்டி பதிவிறக்கிக்கொள்ளலாம். உங்களிடம் பழைய பிக்சல் திறன்பேசி இருந்தாலும் புதுப்பிப்பைப் பதிவிறக்கம் செய்யலாம், ஆனால் கூகுள் வரைபட மின்சக்தி சேமிப்பு முறை மட்டும் உங்களுக்குக் கிடைக்காது.

  • மு. இசக்கிமுத்து

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now