படங்களை வேண்டியபடி திருத்தலாம்

கூகுள் தனது புகைப்பட செயலியில் தனிப்பயனாக்கப்பட்ட திருத்த வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூகுள் புடைப்படங்கள் செயலியில் “எனக்குத் திருத்த உதவு” என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பயனர்கள் வாய்மொழியாகவே தங்கள் விருப்பப்படி படங்களைத் திருத்த முடிந்தது. இப்போது கூகுள் இந்த கருவியில் தனிப்பயனாக்கப்பட்ட திருத்தங்கள் வசதியைச் சேர்த்து மேம்படுத்தியுள்ளது.

தனிப்பயனாக்கப்பட்ட திருத்தங்கள் வசதியின் மூலம், புகைப்படத்தில் உள்ள நபர்களின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களின் தோற்றத்தை மாற்றலாம். “எழிலனின் கண்ணாடியை நீக்கு, என் கண்களைத் திற, எங்களை சிரிக்க வை, அவனுடைய கண்களையும் திற” என்று விவரமாகக் கட்டளையிடலாம்.

இந்த அம்சம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயல்படுகிறது. பயனரின் புகைப்படத் தொகுப்பில் உள்ள மற்ற படங்களில் இருந்து குறிப்பிட்ட நபரின் முகத் தோற்றத்தை எடுத்து, தற்போதைய படத்தில் இயல்பாகப் பொருத்துகிறது. இதற்காக ஒவ்வொருவரின் முகத்தையும் தனித்தனி குழுக்களாக வைத்து பெயரிட்டிருந்தால் மட்டும் போதும். முகத்தை அடையாளம் காணும் வேலையை கூகுள் செய்துவிடும். அதனை ​நீங்கள் சரிபார்த்து, புகைப்படத்தில் உள்ள நபரின் பெயரை உள்ளிட்டால் போதுமானது.

இந்த வசதி பல்வேறு வகையான திருத்தங்களை ஆதரிக்கிறது. கண்ணாடி, தொப்பி போன்ற பொருள்களை நீக்கலாம். மூடிய கண்களைத் திறக்கலாம். சாதாரண முக பாவனையை சிரிப்பாக மாற்றலாம். லேசான புன்னகையை முழு சிரிப்பாகவும் மாற்ற முடியும். இவை அனைத்தும் எளிய வாய்மொழி கட்டளைகள் மூலம் சாத்தியமாகிறது.

முக அடையாளம் காணல் தொழில்நுட்பம் சிலருக்கு தனியுரிமை கவலையை ஏற்படுத்தலாம். தனியுரிமையை முக்கியமாகக் கருதும் பயனர்கள் இந்த அம்சத்தை தவிர்க்கும் வசதியையும் கூகுள் வழங்கியிருக்கிறது.

நல்ல செய்தி என்னவென்றால், இந்த தனிப்பயனாக்கப்பட்ட திருத்தங்கள் வசதி பிக்சல் திறன்பேசி மட்டுமன்றி, அனைத்து ஆண்டிராய்டு திறன்பேசிகளிலும் இந்த வசதி வரவுள்ளது என்று கூகுள் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பு நவம்பர் 2025 பிக்சல் புதுப்பிப்பு வெளியீட்டுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதுப்பிப்பில் அறிவிப்பு சுருக்கங்கள், மேம்படுத்தப்பட்ட மோசடி கண்டறிதல், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல புதிய வசதிகள் வழங்கப்படுகின்றன. அவற்றோடு சேர்த்து ​புகைப்படத்தை திருத்தும் அம்சமும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

  • மு. இசக்கிமுத்து
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now