கூகுள் வரைபடச்செயலின் பயன்கள்

பெரும்பாலான மக்கள் கூகுள் வரைபட செயலியை (Google Maps) வழி காட்டும் செயலியாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் பல ஆண்டுகளாக இந்த செயலியில் ஏராளமான பயனுள்ள தகவல்களை வழங்கும் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

அடிக்கடி புதிய இடங்களுக்குப் பயணம் செய்யாதவர்களும் கூட இந்த செயலியை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். ஏனெனில் ஓர் இடத்திற்கு நேரில் செல்வதற்கு முன்பே, அங்கே வாகன நிறுத்தம் இருக்கிறதா, அந்த பகுதியில் ஏதாவது தனித்துவமான இடங்கள் உள்ளனவா என்று கூகுள் வரைபடங்கள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இதே போல கூகுள் வரைபடங்கள் செயலியை வேறு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை விரிவாக அலசலாம்.

வாகன நிறுத்தம் இருக்கிறதா என்று முன்கூட்டியே சரிபார்த்தல்

பல நகரங்களில் வாகன நிறுத்தத்தை கண்டுபிடிப்பது பெரிய சவால். புதிய இடத்திற்குச் செல்லும் போதெல்லாம், அங்கே வாகன நிறுத்தம் இருக்கிறதா என்பதைப் பார்க்க முதலில் தெருப்பார்வை வசதியை பயன்படுத்தலாம். பக்கவாட்டு சாலைகளிலும் அருகில் உள்ள வாகன நிறுத்த பகுதிகளை தேடலாம். வாகன நிறுத்தம் இல்லை என்று தெரிந்தால், உபர் போன்ற வாடகை வாகன சேவைகளை பயன்படுத்தலாம்.

போக்குவரத்து நேரத்தைக் கணித்தல்

பரபரப்பான நகரங்களில், பொதுவாக 15 நிமிடங்களில் முடியும் பயணம், அதிக நெரிசல் உள்ளபோது ஒரு மணி நேரத்திற்கு மேல் கூட ஆகலாம். கூகுள் வரைபடங்கள் போக்குவரத்து வரலாற்றின் அடிப்படையில் ஒரு பயணம் எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதைக் காட்டுகிறது. புறப்படும் நேரத்தை குறிப்பிட்டு, எவ்வளவு நேரத்தில் சென்றடையலாம் என்பதை அறிய முடியும்.

மறைந்திருக்கும் உணவகங்களையும் கடைகளையும் கண்டுபிடித்தல்

கூகுள் போன்ற தேடுபொறிகளில் பிரபலமான இடங்கள் மட்டுமே மேலாதிக்கம் செலுத்துவதால், வித்தியாசமான இடங்களைக் கண்டுபிடிப்பது கடினம். ஓர் இடத்திற்கு இணையதளம் இல்லாவிட்டாலும், அது கூகுள் வரைபட செயலியில் தோன்றும். விரும்பிய பகுதியைத் தேர்வுசெய்து, அதைச் சுற்றி உள்ள உள்ளூர் உணவகங்கள், பரிசுக் கடைகள், பழங்காலக் கடைகளைக் கண்டுபிடிக்க வரைபட செயலியை பயன்படுத்தலாம். இதே போல ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கடை திறந்திருக்குமா என்பதையும் இதன் ​மூலம் கண்டுபிடிக்க முடியும். மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் போன்றவை திறந்திருக்கும் நேரத்தையும் இதன் ​மூலம் பார்க்க முடியும்.

விளையாடுவதற்கு ஏற்ற இடங்களைக் கண்டுபிடித்தல்

போகிமான் கோ போன்ற விளையாட்டுகளை விளையாடுபவர்கள் தங்கள் பகுதியில் உள்ள பூங்காக்கள், தனித்துவமான இடங்களைக் கண்டுபிடிக்க கூகுள் வரைபடத்தை பயன்படுத்துகின்றனர். இது தேடி அலைய வேண்டியதன் அவசியத்தைத் தவிர்க்கிறது. மற்றவர்கள் சமர்ப்பித்த மதிப்பாய்வுகளை பார்க்கும்போதும், கூடுதல் உதவியாக இருக்கும்.

கூகுள் வரைபடங்கள் வெறும் வழி காட்டும் செயலி மட்டுமல்லாமல், அன்றாட வாழ்வில் பல்வேறு வழிகளில் பயன்படுத்தக்கூடிய பல்துறை கருவியாக வளர்ந்துள்ளது.

  • மு. இசக்கிமுத்து

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now