நினைவூட்டக் குறிப்பெடுக்கும் கூகுள்

கூகுள் குறிப்பெடுக்கும் செயலியில் ‘(keep notes) உள்ள நினைவூட்டல் வசதியை, நாட்காட்டி, பணி மேலான்மை (tasks) செயலிகளுடன் இணைத்திருக்கிறது கூகுள்.

நாம் அன்றாடம் கூகுள் கீப் (Google Keep) செயலியைப் பயன்படுத்தி விரைவாக குறிப்புகளை எழுதுவோம், சிறு ஓவியங்கள் வரைவோம், செய்ய வேண்டிய பட்டியல்களை உருவாக்குவோம். நீண்ட காலமாக இந்த செயலியில் நினைவூட்டல் (Reminder) வசதியும் இருந்து வருகிறது. ஆனால் ஏப்ரல் 2024ல், கீப்பில் இருக்கும் நினைவூட்டல்கள் எல்லாம் பணி மேலாண்மை (Tasks) என்ற வேறொரு செயலிக்கு மாற்றப்படும் என்று கூகுள் அறிவித்தது. “அடுத்த ஓர் ஆண்டுக்குள்” என்று தோராயமாகக் கூறப்பட்டது. பிறகு ஜூலை மாதத்தில், இந்த மாற்றம் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் முடியும் என்று சொன்னார்கள்.

இப்போதுதான் இந்த மாற்றம் கொஞ்சம் கொஞ்சமாக பயனர்களுக்கு கிடைக்க தொடங்கியிருக்கிறது. இனிமேல் கூகுள் கீப் செயலியில் புதிய குறிப்பு எழுத முயலும்போது “நினைவூட்டல்கள் இனி கூகுள் டாஸ்க்ஸ்” என்ற செய்தி தோன்றும்.

கூகுள் உதவியாளர், நாட்காட்டி, ஜெமினி, கீப், டாஸ்க்ஸ் ஆகிய எல்லா இடங்களிலும் இனி நினைவூட்டல்களைப் பார்க்கலாம், திருத்தலாம் என்றும் அந்த செய்தியில் விளக்கப்பட்டுள்ளது.

கூகுள் கீப்பில் ஒரு நினைவூட்டலுக்கு தேதி, நேரம் குறிப்பிட்டவுடன், அது உடனடியாக டாஸ்க்ஸ் செயலியிலும் தோன்றும். இப்படி உருவாக்கப்படும் ஒவ்வொரு நினைவூட்டலும் டாஸ்க்ஸ் செயலியில் “கீப்பிலிருந்து வந்தது” (From Keep) என்று குறிக்கப்பட்டிருக்கும். அதனால் அது எங்கு உருவாக்கப்பட்டது என்பது பயனருக்குத் தெரியும்.

ஆனால் முக்கியமானது என்னவென்றால், கூகுள் கீப்பில் இருந்து வரும் நினைவூட்டல் அறிவிப்புகள் இனிமேல் நின்றுவிடும். அதற்குப் பதிலாக காலெண்டர், டாஸ்க்ஸ் செயலிகளே நினைவூட்டும்.

நினைவூட்டலின் பெயரை அல்லது தலைப்பை நீங்கள் மாற்ற வேண்டுமென்றால், நாட்காட்டி அல்லது டாஸ்க்ஸ் செயலியில்தான் மாற்ற முடியும். அதாவது கூகுள் கீப் குறிப்பில் நினைவூட்டலின் தலைப்பை மாற்றினால், அது மற்ற செயலிகளில் மாறாது. ஆனால் நினைவூட்டலின் தேதி, நேரத்தை மாற்றவோ, முடித்ததாக குறிப்பதையோ மூன்று செயலிகளிலும் செய்ய முடியும்.

கூகுள் கீப்பில் ஒரு நினைவூட்டலை நீக்க முயலும்போது, குறிப்பை மட்டும் நீக்கவா அல்லது குறிப்பு, நினைவூட்டல் இரண்டையும் நீக்கவா என்று தேர்வு செ​ய்யும் வசதி இருந்தது. ஆனால் டாஸ்க்ஸ் செயலியில் நினைவூட்டலை நீக்கும்போது இத்தகைய தேர்வுகள் வழங்கப்படுவது இல்லை.

இந்த மாற்றம் சிலருக்கு வசதியாக இருக்கலாம், சிலருக்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கலாம். ஆனால் கூகுள் தங்களது எல்லா செயலிகளையும் ஒன்றுடன் ஒன்று இணைத்து வேலை செய்ய வைக்கும் முயற்சியின் ஒரு பகுதிதான் இது

  • மு. இசக்கிமுத்து
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now