சென்னை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் டிசம்பர் 19ஆம் நாள், தமிழ் எழுத்துரு வெளியீடு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒண்மை அறக்கட்டளையின் நிதி உதவியுடன் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தால் தொடங்கப்பட்டது தமிழ் எழுத்துருக்கூடம். செல்லினம், முரசு அஞ்சல் செயலிகளின் நிறுவனர், வடிவமைப்பாளர், எழுத்துருத்துறை வல்லுநர் முத்து நெடுமாறனை வழிகாட்டியாகக் கொண்டுள்ளது இந்த எழுத்துருக்கூடம். பழைய எழுத்துருக்களை கணினிக்கு ஏற்றவாறு மீட்டுருவாக்கம் செய்வதும் இத்துறையில் விழிப்புணர்வு உண்டாக்குவதும் இதன் முதன்மையான பணிகள்.

இதுவரை இரண்டு முறை எழுத்துரு பயிலரங்கங்களை நடத்தியுள்ளனர். துறை வல்லுநர்கள் பலரும் இதில் பங்கேற்று இளம் தலைமுறை எழுத்துரு வடிவமைப்பாளர்களுக்குப் பயிற்சியளித்தனர். கருத்தரங்கங்கள் மூலம் பொதுமக்களிடையே இத்துறை குறித்த விழிப்புணர்வையும் உண்டாக்கி வருகின்றனர்.
தற்போது நடைபெற உள்ள விழாவில் புத்தகங்களில் பயன்படும் கட்டெழுத்துரு ஒன்றை வெளியிடவுள்ளனர். இதுகாறும் தமிழ் எழுத்துருக்கள் எப்படியெல்லாம் இருக்கின்றன? காலந்தோறும் எப்படி வடிவமாற்றம் அடைந்துள்ளன? போன்ற பல கேள்விகளை முன்வைத்து ஆறுமாதங்களுக்கு மேல் ஆய்வுகள் நடத்தி ஆவணப்படுத்தியுள்ளனர். இதற்கான தரவுகள் அனைத்தும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் அடிப்படையில் மூன்று எழுத்துருக்களை உருவாக்க முடிவு செய்து பணியில் ஈடுபட்டு தற்போது முதல் எழுத்துருவை நிறைவு செய்து வெளியிடுகின்றனர்.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநர் சுந்தர் கணேசன், “தமிழ் எழுத்துருக் கூடம் : ஒரு பார்வை” என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். தமிழ் எழுத்துருக் கூடத்தின் நல்லுரையாளர் முத்து நெடுமாறன், தமிழ் எழுத்துரு உருவாக்கத்தில் தரம் பதித்தல் குறித்து பேசுகிறார். வெர்னலிஸ் கேபிடல் நிறுவன இயக்குநர் பால சந்திரா, எழுத்துருவை வெளியிட்டு, உரையை வழங்குகிறார். சிந்துவெளி ஆய்வு மையத்தின் மதிப்புறு ஆலோசகர் பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றுகிறார். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தமிழ் எழுத்துருக் கூட திட்ட மேலாண்மை பொறுப்பாளர் ரஞ்சித் ரூஸோ, தமிழ் கட்டெழுத்துரு பற்றி அறிமுகப்படுத்திப் பேசுகிறார். ஒண்மை அறக்கட்டளையின் நிறுவனர் விக்னேஷ் சுந்தரேசன் நிகழ்ச்சியின் ஆவணமாக்கல் பற்றிப் பதிவு செய்யவுள்ளார். ஒண்மை அறக்கட்டளையின் கலை இயக்குநர் கிருஷ்ணபிரியா சி.பி. நன்றியுரையாற்றுகிறார்.
தமிழ் எழுத்துரு வெளியீட்டு நிகழ்ச்சி, டிசம்பர் 19, 2025 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடைபெறுகிறது. அனைவரும் வருக.
