ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது ஐந்தாவது அங்காடியை நொய்டாவில் திறந்துள்ளது.

ஆப்பிள் நீண்ட காலமாக இந்தியாவில் தயாரிப்புகளை விற்றாலும், சொந்த கடைகள் திறக்க தாமதமானது. 2023 ஏப்ரலில்தான் முதல் கடை மும்பையில் திறக்கப்பட்டது. அதே நாளில் டெல்லியிலும் ஒரு கடை திறக்கப்பட்டது. 2025 செப்டம்பரில் பெங்களூரு, புனேவில் ஆப்பிள் கடைகள் திறக்கப்பட்டன. இப்போது நொய்டாவில் ஐந்தாவது கடை திறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் சில்லறை கடைகள் திறக்க சில விதிமுறைகள் இருந்தன. குறிப்பிட்ட விழுக்காடு தயாரிப்புகளை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிள் இந்தியாவில் ஐபோன் தயாரிப்பை பெரிதாக்கியதால், இந்த விதிமுறைகளை நிறைவு செய்ய முடிந்தது.
தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களில் பெரும்பாலானவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சென்னை, பெங்களூரு அருகே பெரிய தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
இப்போது திறக்கப்பட்டுள்ள புதிய கடை நொய்டாவின் மிகப்பெரிய ஷாப்பிங் மால்களில் ஒன்றான டிஎல்எஃப் மால் ஆஃப் இந்தியாவில் அமைந்துள்ளது. வார இறுதி நாள்களில் இந்த அடுக்கக்கடைக்கு ஏராளமான மக்கள் வருவதால், ஆப்பிள் இந்த இடத்தை தேர்வு செய்திருக்கலாம்.
இந்தக் கடையில் எண்பதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். அண்மைய ஐபோன் மாடல்கள், ஆப்பிள் திறன்கடிகாரம் அல்ட்ரா 3, சீரிஸ் 11, புதிய M5 நுண்சில்லு மூலம் இயங்கும் ஐபேட் புரோ, 14-இன்ச் மேக்புக் புரோ போன்ற தயாரிப்புகள் இங்கே கிடைக்கின்றன.
ஆப்பிள் பணியாளர்கள் ஆண்டிராய்டிலிருந்து ஐபோனுக்கு தரவுகளை மாற்ற உதவுவதாக ஆப்பிள் தெரிவித்திருக்கிறது. தவணை முறையில் வாங்கவும் நிதி உதவி கிடைக்கிறது.
‘டுடே அட் ஆப்பிள்’ என்ற இலவச பயிற்சி வகுப்புகள் பயனர்களுக்காக தினசரி நடத்தப்படுகின்றன. புகைப்படம் எடுப்பது, காணொளிகளை திருத்துவது, இசை உருவாக்குவது, கணினி குறியீட்டு மொழி கற்றுக்கொள்வது போன்ற பல பாடங்கள் நடத்தப்படுகின்றன.
மெக் கணினியில் வேலையை திறமையாக செய்வது, ஆப்பிள் திறன்கடிகாரம் மூலம் உடற்பயிற்சி, உடல்நலனைக் கண்காணிப்பது, ஆப்பிள் திறன்பேசியில் தொழில்முறை தர புகைப்படங்களை எடுப்பது போன்ற வகுப்புகளும் உள்ளன.
இவை எல்லாமே முற்றிலும் இலவசம் எனவும் ஆப்பிள் கூறியிருக்கிறது. இதற்கு நொய்டா அங்காடியின் வலைதள பக்கத்தில் முன்பதிவு செய்யலாம். முக்கியமானது என்னவென்றால் ஆப்பிள் பொருள்களை வாங்காதவர்களும் இந்த வகுப்புகளுக்கு வரலாம்.
ஆப்பிள் இந்திய சந்தையில் தீவிரமாக கால்பதித்து வருகிறது. இதுவரை இணையத்தில் மட்டும் வாங்க முடிந்த தயாரிப்புகளை இப்போது கடைகளில் கையில் பிடித்துப் பார்த்து வாங்க முடிகிறது. வல்லுநர் கருத்துகளை நேரில் கேட்கலாம், புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளலாம். இது இந்திய தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு ஒரு நல்வாய்ப்பு!
- மு. இசக்கிமுத்து
