பொங்கல் வாழ்த்து!

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். 

2005ஆம் ஆண்டு, ஒரு பொங்கல் திருநாளில்தான் செல்லினம் செயலி வெளியிடப்பட்டது. அதன் பிறகும் செல்லினம் செயலியின் பல மேம்பாடுகளை அவ்வப்போது பொங்கல் திருநாளில் வெளியிட்டு வந்திருக்கிறோம். இவ்வாண்டுப் பொங்கல் நாளிலும் ஓர் இனிப்பான அறிவிப்புடன் வந்திருக்கிறோம்.

கணினியில் தட்டெழுதும் அதே வேகத்துடனும் வசதியுடனும் திறன்பேசியிலும் தட்டெழுத முடியுமா என என்றேனும் சிந்தித்ததுண்டா? செல்லினம் இனிமேல் அதைச் சாத்தியப்படுத்துகிறது.

கணினிப் பயன்பாட்டைவிடக் கையடக்கக் கருவிகள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கணினி செய்யும் வேலைகளில் கிட்டத்தட்ட அனைத்தையுமே கையடக்கக் கருவிகள் செய்துவிடுகின்றன. தமிழில் தட்டெழுதுவோரும் கணினியைவிடக் கையடக்கக் கருவிகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். 

குறுஞ்செய்திகளையும் சில பத்திகள் கொண்ட கட்டுரைகளையும் செல்லினம் செயலியைக் கொண்டு சில நிமிடங்களில் திறன்பேசியிலேயே தட்டெழுதுவோர் பலர் உள்ளனர். எனினும் நீண்ட கட்டுரைகள், நூல்கள் எழுதும்போது இரண்டு கைகளில் உள்ள அனைத்து விரல்களையும் பயன்படுத்தித் தட்டெழுதுவதில் உள்ள வேகமும் வசதியும் திறன்பேசியில் இரண்டு விரல்களைக் கொண்டு எழுதுவதில் சாத்தியமில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை.  

செல்லினம் செயலியில் வெளிவிசைப்பலகை (புளூடூத் விசைப்பலகை) வழியாக, தமிழ்99, அஞ்சல் உள்ளீட்டு முறையில் தட்டெழுத முடியும் என்பதால் சிலர் அதைப் பயன்படுத்துகின்றனர். இவர்கள் தட்டச்சுப் பலகையில் இரண்டு கைகளைப் பயன்படுத்தி திறன்பேசியிலேயே வேகமாகத் தட்டெழுதுகின்றனர். ஆனால் பழைய, புதிய தமிழ் தட்டச்சு முறை, பாமினி போன்ற மற்ற பல உள்ளீடு முறைகளைப் பயன்படுத்துவோர் தட்டெழுதுவது என்றாலே கணினிதான் எனத் தங்களைச் சமாதானப்படுத்திக்கொண்டுள்ளனர். இதைச் செல்லினம் மாற்றி எழுதுகிறது.

நீங்கள் எந்த வகை உள்ளீடு முறையைப் பயன்படுத்தினாலும் வெளிவிசைப்பலகையைக் கொண்டுத் திறன்பேசியில் இனிமேல் தட்டெழுத இயலும். இந்த நற்செய்தியைப் பொங்கல் நாளில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

இதற்கென்று எந்தத் தனிச் செயலியையும் நிறுவத் தேவையில்லை. கூகுள் டாக்ஸ், மைக்ரோசாப்ட் ஒன்நோட்ஸ் போன்று எழுதுவதற்காக நீங்கள் எந்தச் செயலியைப் பயன்படுத்தினாலும் அல்லது வாட்சாப் போன்ற செயலிகளில் நீளமான செய்தியை எழுதவேண்டுமென்றாலும் இனி கவலை இல்லை. உங்களுக்குப் பழக்கமான உள்ளீடு முறையைக் கொண்டே நீங்கள் உங்கள் திறன்பேசியில் எந்தச் செயலியிலும் வெளிவிசைப்பலகையைப் பயன்படுத்தி செல்லினம் வழியாக நீளமாகத் தட்டெழுதலாம். 

எங்கு சென்றாலும் மடிக்கணினியைத் தூக்கிக்கொண்டு செல்லவேண்டும் என்கிற அவசியமில்லை. வெளிவிசைப்பலகை இருந்தால் போதும். கிடைக்கும் இடத்தில் கிடைக்கும் நேரத்தில் எழுதும் வேலையைச் செய்திடலாம்.

செய்தி சேகரிக்கச் செல்லும் ஒருவர் களத்தில் இருந்தே முழுக்கட்டுரையை எழுதிக் கொடுத்துவிடலாம். 

நிறைய எழுத ஆர்வம் இருந்தும் மடிக்கணினி வாங்க வசதியின்றித் திறன்பேசியில் இருவிரல்களைக் கொண்டு தட்டெழுதிச் சிரமப்படுவோருக்கும் இது மிகப்பயனுள்ளதாக இருக்கும். 

இந்தப் புதிய கூறினைச் சேர்ந்து மேம்படுத்தப்பட்ட செல்லினம் செயலியை இப்பொங்கல் திருநாளில் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். கூகுள் பிளே ஸ்டோரில் செயலி தயாராக இருக்கிறது. பதிவிறக்கம் செய்து பயன்படுத்திப் பார்க்கலாம். ஏற்கெனவே சிலர் பயன்படுத்தி கருத்துகளை அனுப்பி வருகின்றனர். சீரான வெளியீட்டை உறுதி செய்யும் வகையில் படிப்படியாக இந்தப் புதுப்பிப்பை வெளியிடுகிறோம். விரைவில் அனைவருக்கும் கிடைக்கும்.

முரசு அஞ்சல் செயலியில் இருக்கும் எல்லா வகையான உள்ளீடு முறைகளையும் பயன்படுத்தி வெளிவிசைப் பலகை வழியாகத் தட்டெழுதலாம். கடந்த ஆண்டு முரசு அஞ்சல் செயலி மறுஉருவாக்கத்துடன் புதிய வரலாற்றைத் தொடங்கியதைப் போல 2026ஆம் ஆண்டு செல்லினம் செயலிக்கானது எனப் புத்தாண்டு வாழ்த்திலேயே அறிவித்திருந்தோம். கூறியதைப் போல இவ்வாண்டு செல்லினம் செயலியின் மேம்பாட்டில் தனிக்கவனம் செலுத்துகிறோம். முரசு அஞ்சல் செயலியைப் போலவே பல புதிய கூறுகளை செல்லினம் செயலியில் சேர்க்கவுள்ளோம். இது முதல் அறிவிப்பு. இனியும் இனிப்பான செய்திகள் தொடரும். 

எல்லாத் தளங்களிலும் தமிழைத் தட்டெழுதுவதை மனதுக்கினிய மகிழ்ச்சியான அனுபவமாக்கும் எங்கள் பணிக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவுக்கு நன்றி. மீண்டும் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

  • செல்லினம் குழு.
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now