மலாயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல், மொழியியல் துறை மாணவர்களுக்கு புதிய ‘முரசு அஞ்சல்’ மென்பொருளை தேசிய நிலநிதி கூட்டுறவுச் சங்கம் இலவசமாக வழங்கியது. 2026, ஜனவரி 21ஆம் நாள் புதன்கிழமையன்று கோலாலம்பூரில் மலாய்ப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையால் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
முரசு அஞ்சல் செயலி வழங்கலும் உள்ளிடுமுறை பயன்பாட்டு பயிலரங்கமும் என்னும் தலைப்பிலான இந்நிகழ்ச்சிக்குச் சுமார் 120 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் முரசு அஞ்சல் மென்பொருள் இலவசமாக வழங்கப்பட்டது.
முரசு அஞ்சல், செல்லினம் செயலிகளின் உருவாக்குநர், வடிவமைப்பாளர், எழுத்துருவியலாளர் முத்து நெடுமாறன் இச்செயலிகளைப் பற்றிய விளக்கக்காட்சியை வழங்கினார். முரசு அஞ்சல் செயலி கணினிகளுக்கானது. செல்லினம் திறன்பேசி போன்ற கருவிகளுக்கானது. 1985ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட முரசு அஞ்சல், 2005ஆம் ஆண்டு வெளியீடு கண்ட செல்லினம், இரண்டுமே தமிழை நவீன கருவிகளில் எழுதும் அனுபவத்தை எளிதாகக்குகின்றன.
இவற்றில் உள்ள சொற்பரிந்துரை வசதியானது இலகுவாகத் தட்டெழுத உதவுகிறது. சொற்களைக் கணிக்கும் வசதி முதலிய பல புதிய மேம்பாடுகள் வழியாக எளிமை மட்டுமின்றி தமிழ் எழுதும் அனுபவத்தை இனிமையானதாகவும் மனத்துக்கினிய மகிழ்ச்சியான ஒன்றாகவும் ஆக்குகின்றன இச்செயலிகள். இது பற்றிய முத்து நெடுமாறனின் விளக்கவுரைக்கு மாணவர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அனைவரும் ஆர்வத்துடன் கேள்விகள் எழுப்பித் தங்கள் சந்தேகங்களைக் களைந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு வருகைப்புரிந்து உரையாற்றிய தேசிய நிலநிதி கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பா. சகாதேவன், இந்த மென்பொருள் இந்திய மாணவர்களின் நலன் கருதி வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மாணவர்கள் இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்தி தொழில்நுட்ப ரீதியாகத் தங்களை மேம்படுத்திக் கொள்வது அவசியம் என அவர் வலியுறுத்தினார். கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட இந்த நவீன பதிப்பின் வசதிகளைத் தமிழ் பயிலும் மாணவர்கள் தடையின்றி பயன்படுத்தலாம்.
இதன் மூலம் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் மட்டுமின்றி, எங்கு சென்றாலும் இணையம் வழியாகவும் கணினி வழியாகவும் இந்தச் செயலியைத் தங்களின் ஆய்வுகளுக்கும் பாடங்களுக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும். நிகழ்ச்சியின் இறுதியில் எழுத்தாளர் கோகிலா எழுதிய ‘உரு’ நூலும் மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
மாணவர்களுக்குக் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தாத வகையில், இந்த மென்பொருளை இலவசமாக வழங்கியதற்கு மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறைத் தலைவர் முனைவர் மா. இரவிந்திரன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துகொண்ட 120 மாணவர்களுக்கு அவர்களின் மின்னஞ்சல் முகவரி வாயிலாக முரசு அஞ்சல் செயலி நேரடியாக வழங்கப்பட்டது.
- செல்லினம் குழு













