செயற்கை நுண்ணறிவு மருத்துவர்

ஓபன்ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடி மருத்துவம் (ChatGPT Health) என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உங்கள் உடல்நலத் தகவல்களையும் சாட்ஜிபிடி-யின் திறமையையும் பாதுகாப்பாக ஒன்றிணைத்து புதிய அம்சம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு வாரமும் உலகம் முழுவதும் 23 கோடிக்கும் மேற்பட்டவர்கள் சாட்ஜிபிடி-யில் உடல்நலம், மருத்துவம் குறித்த கேள்விகளைக் கேட்கிறார்கள். அவர்களுக்காகவே தனித்துவமான மருத்துவ உதவியாளரை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஓபன்ஏஐ.

இதனை உருவாக்க இரண்டு வருடங்களாக 60 நாடுகளில் இருந்து 260-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உதவியுள்ளனர். 6 லட்சம் முறைக்கும் மேல் அவர்கள் கருத்துகளை அளித்து, எது உதவியாக இருக்கும், எது தீங்கு விளைவிக்கும் என்று செயற்கை நுண்ணறிவுக்கு வழிகாட்டியுள்ளனர். அத்தனை மருத்துவர்களிடமும் கற்று உருவாகியிருக்கிறது ஓபன் ஏஐயின் மருத்துவ உதவியாளன்.

இதில் மருத்துவப் பதிவுகள், ஆய்வக முடிவுகள், மருத்துவ வரலாறு ஆகியவற்றை புகைப்படங்களாக இணைக்கலாம் அல்லது சாட்ஜிபிடியில் வழக்கமாக உரையாடுவதைப்போலவும் கூறலாம்.

உடல்நலத்தை பற்றி நன்றாக புரிந்துகொள்ள உதவும் ஒரு நவீன கருவியாக இது இருக்கிறது. உடல்நல தகவல்களை வைத்து “என் ரத்த கொழுப்பு அளவு எப்படி இருக்கிறது?” என்றோ, “மருத்துவர் சந்திப்புக்கு முன் என் சமீபத்திய ரத்தப் பரிசோதனை முடிவுகளை சுருக்கமாகச் சொல்லு” என்றோ கேட்கலாம். உணவு, உடற்பயிற்சி ஆலோசனைகள் பெறலாம்.

இந்த அம்சம் இப்போது குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்ப​ட்டுள்ளது. பயன்படுத்த விரும்புபவர்கள் ஓபன்ஏஐ இணைய தளத்தில் உள்ள காத்திருப்புப் பட்டியலில் விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து பயனர்களுக்கும் விரைவில் வழங்க ஓபன்ஏஐ திட்டமிட்டிருக்கிறது.

உடல்நலத் தகவல்கள் மிகவும் தனிப்பட்டவை என்பதால் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த உரையாடல்கள் வழக்கமான சாட்​ஜிபிடி உரையாடல்களுடன் இல்லாமல் தனியாக மேற்கொள்ளப்படுகின்றன. அதோடு உங்கள் மருத்துவ உரையாடல்கள் செயற்கை நுண்ணறிவிற்கான மாதிரியாக பயன்படுத்தப்படாது என்பதை ஓபன் ஏஐ தெளிவாக கூறியிருக்கிறது. பல காரணி அங்கீகாரம் (Multi-factor authentication) ​மூலம் தகவல்களுக்கு கூடுதல் பாதுகாப்பை  வழங்கவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

இவை எல்லாம் ஒரு புறம் இருந்தாலும் சாட் ஜிபிடி மருத்துவருக்கு மாற்றல்ல, உதவுவதற்கு மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  செயற்கை நுண்ணறிவு மருத்துவரை வெறும் ஆலோசனைக்காக மட்டும் வைத்துக்கொண்டு, இயற்கை நுண்ணறிவு மருத்துவரை முழுமையாக அணுகு​ங்கள் என்பதே வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.

  • மு. இசக்கிமுத்து
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now