உலகின் மிகவும் புகழ்பெற்ற உடை நாகரிக நிறுவனங்களில் ஒன்றான ஷானல் நிறுவனத்தின் முத்திரை வெறும் இரண்டு வளைவுகள்தான். இந்த எளிய வடிவத்தின் பின்னால், ஓர் ஆதரவற்றோர் இல்லத்தில் தொடங்கிய ஒரு வாழ்க்கையின் கதை மறைந்து கிடக்கிறது.

மடாலயத்தின் நிழல்கள்
பிரான்சின் கோரேஸ் பகுதியில் உள்ள ஒபசீன் (Aubazine) என்ற மடாலயத்தில் பெற்றோரின் அரவணைப்பின்றி வளர்ந்தவள் கேப்ரியல் போனூர் ஷானல். இளம் வயதிலேயே தாயை இழந்த அவளைத் தந்தை அந்த மடாலயத்தில் விட்டுச் சென்றார். அங்குள்ள துறவறப் பெண்களிடம்தான் அந்தச் சிறுமி தையல் கலையை கற்றுக்கொண்டாள். அந்தக் கட்டுப்பாடும் ஒழுங்கும் நிறைந்த சூழல், பின்னாளில் அவளது வடிவமைப்பு எண்ணங்களையும் பாதித்தது என்று பலர் கருதுகின்றனர்.
அந்த மடாலயத்தின் ஜன்னல்கள், கற்சிற்பங்கள் மற்றும் வளைந்த வடிவங்கள் இவை அனைத்தும் சிறுமியாக இருந்த ஷானலின் மனத்தில் ஓர் அழகியல் உணர்வை விதைத்திருக்கலாம் என சில வடிவமைப்பு வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
பின்னர் பாரிசில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய கேப்ரியல், இசை அரங்குகளில் பாடிய காலத்தில் கோகோ (Coco) என்ற பெயரைப் பெற்றார். அதன்பிறகு கோகோ ஷானல் (Coco Chanel) என்ற பெயரே உலகம் முழுவதும் புகழ்பெற்றது.
1910-இல் பாரிசில் ஒரு சிறிய தொப்பிக் கடையைத் தொடங்கிய அவரது முயற்சி, சில ஆண்டுகளில் உடை நாகரிக உலகையே மாற்றிய ஒரு புரட்சியாக வளர்ந்தது.
இரண்டு எழுத்துகளின் அடையாளம்
1920களில் ஷானல் தனது நிறுவனத்தின் அடையாளமாக, தனது பெயரின் முதல் எழுத்துகளான இரண்டு சி (CC) எழுத்துகளை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த வடிவில் பயன்படுத்தத் தொடங்கினார். இந்த வடிவம், மிகவும் எளிமையானதாக இருந்தாலும் அதே நேரத்தில் மிகச் சக்திவாய்ந்த ஒரு காட்சி அடையாளமாக மாறியது.
இந்த வடிவம் எப்படி உருவானது என்பது குறித்து பல கருத்துகள் உள்ளன. சிலர், ஷானல் வளர்ந்த மடாலயத்தின் ஜன்னல் வடிவங்கள் இதற்கு ஈர்ப்பாக இருந்திருக்கலாம் எனக் கூறுகின்றனர். மற்றவர்கள், அவரது வாழ்க்கையில் முக்கியமான இடம் பெற்ற வணிகர் ஆர்தர் சேபல் (Arthur Capel) உடனான உறவையும் இந்த இரட்டை எழுத்துகளுடன் இணைத்து விளக்குகின்றனர். எதை மனத்தில் வைத்து ஷானல் அவரது நிறுவனத்தின் முத்திரையை வடிவமைத்தார் என்பது வரலாற்றுப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால் இந்த இரண்டு எழுத்துகள் உலகில் மிக எளிதாக அடையாளம் காணக்கூடிய முத்திரையாக மக்கள் மனத்தில் பதிந்துவிட்டன என்பதை மட்டும் யாராலும் மறுக்க முடியாது.
எளிமையின் புரட்சி
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உடை நாகரிக உலகம் மிகுந்த அலங்காரங்களாலும் சிக்கலான வடிவங்களாலும் நிரம்பியிருந்தது. பெண்கள் அணிந்த உடைகள் கூட மிகவும் கனமாகவும் கட்டுப்பாடுகளுடனும் இருந்தன. அந்த சூழலில், ஷானல் முற்றிலும் மாறுபட்ட பாதையைத் தேர்ந்தெடுத்தார். எளிமை, சுதந்திரம், சீரான கோடுகள் இவையே அவரது வடிவமைப்புகளின் அடையாளமாக மாறின.
அதே தத்துவம் அவரது நிறுவனத்தின் எழுத்துருவிலும் பிரதிபலிக்கிறது. ஷானல் (CHANEL) என்ற பெயர் தெளிவான சான்ஸ் செரிப் (sans-serif) எழுத்துருவில் எழுதப்படுகிறது. இந்த எழுத்துருவின் சிறப்பம்சமே அதன் எளிமையான தோற்றம்தான்.
எழுத்துகளின் இடைவெளி – மறைந்துள்ள நேர்த்தி
ஷானல் (CHANEL) என்ற பெயரை கவனமாகப் பார்த்தால், ஒவ்வொரு எழுத்துக்கும் இடையில் சற்றே அதிகமான இடைவெளி இருப்பதை கவனிக்கலாம். இந்த இடைவெளி வெறும் அழகுக்காக மட்டுமல்ல. அது அந்தப் பெயரில் உள்ள எழுத்துகள் சுவாசிக்க இடம் கொடுக்கிறது. எழுத்துக்கள் ஒன்றோடொன்று நெருக்கமாக இல்லாமல் சீராகப் பிரிந்திருப்பதால், அந்த சொல் மிகவும் அமைதியான, உயர்ந்த தோற்றத்தை அளிக்கிறது.
இதே காரணத்தால் பல ஆடம்பர நிறுவனங்கள் தங்களது பெயர்களில் எழுத்துகளுக்கிடையே சிறிது கூடுதல் இடைவெளியைப் பயன்படுத்துகின்றன. அந்த இடைவெளியே அந்த முத்திரையின் கம்பீரத்தையும் உயர்ந்த தரத்தையும் வெளிப்படுத்துகிறது.
வடிவமைப்பின் சமநிலை
ஷானல் முத்திரையின் உண்மையான பலம் அதன் சமச்சீரான அமைப்பில்தான் இருக்கிறது. இரண்டு சிசி எழுத்துகளும் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சமநிலை வடிவமைப்பு காரணமாக, அந்த சின்னம் மிகவும் நினைவில் நிற்கும் வகையில் இருக்கிறது.
கருப்பு – நேர்த்தியின் நிறம்
ஷானல் முத்திரை பெரும்பாலும் கருப்பு, வெள்ளை நிறங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரு நிறங்களின் எளிய முரண்பாடே அதன் அழகை அதிகரிக்கிறது. கருப்பு நிறத்தை துக்கத்தின் அடையாளத்திலிருந்து நேர்த்தியின் அடையாளமாக மாற்றிய அந்த புரட்சியின் எதிரொலியாகவே இந்த முத்திரையின் நிறத் தேர்வும் பார்க்கப்படுகிறது.
காலத்தை கடந்த அடையாளம்
பல நிறுவனங்கள் தங்களது முத்திரைகளை காலத்துக்கு ஏற்ப மாற்றிக் கொண்டிருந்தாலும், ஷானலின் இரட்டை சிசி(CC) வடிவம் காலத்தை கடந்த சின்னமாக நிற்கிறது.
- இசக்கிமுத்து.
