மலேசியாவின் கெடா மாநிலக் கல்வித் துறை ஏற்பாட்டில் 2026, அக்டோபர் 11ஆம் நாள் எண்மத்தில் தமிழின் இனிமை நிகழ்ச்சி நடைபெற்றது. இத்தலைப்பில் நடைபெறும் இரண்டாவது நிகழ்ச்சி இது. செல்லினம், முரசு அஞ்சல் நிறுவனர், வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன் நிகழ்ச்சியை வழிநடத்தினார். ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

எண்மத் தமிழ்ப் படைப்புகளின் தரத்தை உயர்த்தவும், திறன்களைக் கூர்மைப்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட பயிலரங்கு இது. முழுநாள் பயிற்சிப் பட்டறை, எழுச்சியும் மகிழ்ச்சியும் நிறைந்த திருவிழாவாக அமைந்தது. 59 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து தமிழ்மொழிப் பணித்திட்ட ஆசிரியர்களும், துறை அலுவலர்களும், மேனாள் கல்வியாளர்கள் சிலரும் கலந்துகொண்டு அரங்கையே கலகலப்பாக்கினர்.
முரசு அஞ்சல் வழங்கும் அறிவார்ந்த தமிழ் உள்ளிடுமுறையும் அழகுத் தமிழ் எழுத்துகளும் இணைந்து தமிழ்ப் படைப்புகளை எவ்வாறு உயர்தரமான ஆக்கங்களாக மாற உதவுகின்றன என்பது விளக்கக் காட்சிகளுடன் எடுத்துரைக்கப்பட்டது. எழுத்துகளின் வடிவம் மாணவர்களின் மனத்தில் ஆழமாகப் பதிய வைப்பதற்கும் அவர்களின் கவனத்தை ஈர்த்து கற்றலில் ஆர்வமேற்படுத்தவும் எவ்வாறு எழுத்துரு நுட்பங்கள் உதவுகின்றன என்பதும் விளக்கப்பட்டது.
ஆசிரியர்கள் குறிப்புகள் எடுத்துக்கொண்டதுடன், கேள்விகள் எழுப்பி பதில்களைப் பெற்றுக் கொண்டனர். பங்கேற்ற அனைவரின் ஆர்வமும் முழுமையான ஈடுபாடும் ஒரு நாளையே ஒளிரச் செய்தன. நிறைவாக, பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. பின்னர் குழுப் புகைப்படம் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.














