கேரளாவில் உலகளாவிய எழுத்துருவியல் மாநாடு: டைப்போடே2026

கேரள மாநிலத்தின் கொச்சியில் செப்டம்பர் 28, 29, 30 ஆகிய நாள்களில் உலகளாவிய பதினெட்டாவது எழுத்துருவியல் மாநாடு ‘டைப்போடே2026’ நடத்தப்பட்டது. ஜெயின் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வை இப்பல்கலைக்கழகத்தின் வடிவமைப்பு, ஊடகம், படைப்புக் கலைகள் பள்ளியும், ஐஐடி மும்பையின் ஐடிசி வடிவமைப்புப் பள்ளியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. 

கட்டுரைகள் சமர்ப்பிப்பு, பயிலரங்கம், பயிற்சிப் பட்டறைகள், செறிவான உரைகள் என நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தன. செல்லினம், முரசு அஞ்சல் வடிவமைப்பாளரும் உருவாக்குநருமான முத்து நெடுமாறன் உட்பட, எழுத்துருவியல் துறையைச் சேர்ந்த முன்னோடிகள் பலரும் கலந்து கொண்டனர்.

பதினெட்டாவது மாநாடு 

உலகளாவிய எழுத்துருவியல் மாநாடான டைப்போடே ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு இந்திய மாநிலங்களிலும் மற்ற நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு இம்மாநாட்டின் பதினெட்டாவது ஆண்டாகும். எழுத்துருவியலில், அச்சுக்கலைத் தொல்சீர் மரபும் நவீன எண்மவியலும் சந்திக்கும் புள்ளியும் அதற்கு அப்பாலும் (Typographic Intersections: Analogue to Digital and Beyond) என்கிற கருப்பொருளில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. 

மரபார்ந்த எழுத்து வடிவங்கள், வனப்பெழுத்து போன்றவற்றையும் இன்றைய எண்மத் தொழில்நுட்பத்தில் இவை இணைந்து செயல்படும் விதம் பற்றியும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. தற்காலத்தில் அச்சுத்துறையில் எழுத்துருவியல் எதிர்கொள்ளும் சவால்கள், தீர்வுகள், வாய்ப்புகள் பற்றிய உரைகளும் கலந்துரையாடல்களும் நடந்தன.  

எழுத்துருவியலாளர் முத்து நெடுமாறன், மலையாள எழுத்துக்கலையில் புகழ்பெற்ற கலைஞரான நாராயண பட்டாத்ரி, இந்திய எழுத்துமுறைகள் மீது  பரவலாகப் பலரின் கவனம் ஈர்ப்பதில் முக்கியமான பங்காற்றிய அச்யுத் பாலவ், ஐஐடி மும்பை பேராசிரியர் ஜி.வி. ஸ்ரீகுமார் முதலியோர் பல்வேறு அமர்வுகளை நடத்தினர். வடிவமைப்பு, காட்சித் தொடர்புத் துறை வல்லுநர்களான தருண் தீப் கிர்தர், அபிஷேக் வர்தன், அர்ச்சனா சேகர், பேராசிரியர் பௌயா ஜஹான்ஷாஹி முதலியோரும் தங்கள் துறை சார்ந்த அறிவினைப் பகிர்ந்துகொண்டனர். இந்தியாவின் ரூபாய் சின்னத்தை வடிவமைத்த த. உதயகுமார், எழுத்துருவியல் விநாடி வினா ஒன்றை நடத்தினார். அனைத்து தரப்பினரிடமும் எதிர்பார்ப்பை உருவாக்கி ஆவலோடு எதிர்பார்த்த நிகழ்வாக இது இருந்தது.  

உரு பதிவு செய்யும் வாழ்க்கைப் பாடம் ​

தெற்காசிய, தென்கிழக்காசிய மொழி எழுத்துருக்களில் நீண்டகால அனுபவம், அச்சு, கைப்பேசி, கணினி, திறன்பேசிகளுக்கான எழுத்துரு உருவாக்கம், உள்ளிடு முறைகள், செயலி உருவாக்கம் என இத்துறையின் எல்லாக் கோணங்களிலும் திறம்படச் செயலாற்றும் முத்து நெடுமாறன் மாநாட்டின் முகாமை உரையை (keynote address) வழங்கினார். எழுத்தாளர் கோகிலாவின் உரு நூல், தமிழ்க்கணிமை வரலாற்றை முத்து நெடுமாறனின் வாழ்க்கைப் பின்னணியுடன் ஆவணப்படுத்துகிறது. இந்நூலின் அட்டைப்படத்தை மும்பை ஐ​ஐடி பேராசிரியரும் வனப்பெழுத்துக் கலைஞருமான ஸ்ரீகுமார் மிகக் குறுகிய நேரத்தில் வடிவமைத்திருந்தார். அவருக்கு நன்றி தெரிவித்து தன் உரையைத் தொடங்கிய முத்து, நமக்கு விருப்பம் உள்ள துறையில் ஆர்வத்தோடு தரமானவற்றை உருவாக்குவதன் அவசியம் பற்றிப் பேசினார். தொடர்ந்து இப்படிச் செயலாற்றுவதினால் தன் வாழ்வில் கிடைத்த நற்பலன்களில் சிலவற்றை உரு பதிவு செய்துள்ளதைப் பற்றிக் குறிப்பிட்டார். எல்லாத் துறைகளையும் போலவே எழுத்துருவியலிலும் நம் திறனும் ஆர்வமுமே சிறப்பான எதிர்காலத்துக்கு வழிவகுக்கும் என்பதைத் தன் வாழ்க்கையை எடுத்துக்காட்டாக வைத்து விளக்கினார். மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நம்பிக்கையளிப்பதாக இருந்தது முத்துவின் பேச்சு. 

உரையுடன், எழுத்துரு அடிப்படைகளை விளக்கும் முழுநாள் பயிற்சிப் பட்டறையும் நடத்தினார் முத்து நெடுமாறன். எழுத்துருவின் வடிவம் சிந்தனையில் உதிக்கும் புள்ளியில் தொடங்கி அது முழு எழுத்துருவாக வடிவமைக்கப்படுவது வரை உள்ள படிநிலைகளை விளக்கினார். மனத்தில் உள்ள வடிவத்தைக் காகிதத்தில் வரைந்து அதைச் சீர்மையாக்கும் வழிமுறைகளைப் பயிற்சியில் கலந்து கொண்டோர் செய்து பார்த்தனர். காகிதத்தில் இருப்பதை எப்படிக் கணினிக்குக் கொண்டுவந்த பிறகு கவனிக்க வேண்டியவற்றை முத்து விளக்கினார். கலந்து​ கொண்டோரின் ஐயங்களுக்கு விடையளித்துத் தெளிவுபடுத்தினார்.         

கொற்கை எழுத்துருவுக்கு அங்கீகாரம்

பயிற்சிப் பட்டறையில், கொற்கை எழுத்துருவின் சிறப்புக்கூறுகளைப் பற்றி விளக்கினார் தமிழ் எழுத்துருக் கூடத்தின் தலைவர் ரஞ்சித். முத்து நெடுமாறன் வழிகாட்டலில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தமிழ் எழுத்துருக் கூடம் உருவாக்கிய எழுத்துரு கொற்கை. பழைய அச்சு எழுத்துகளை ஆய்வு செய்து பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுத்து இன்றைய எண்மத் தொழில்நுட்பத்தில் இந்த எழுத்துருவை உருவாக்கியுள்ளனர். துறை வல்லுநர்கள், ஆய்வாளர்கள் கொற்கை உருவாக்கத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளை வெகுவாகப் பாராட்டினர். விழா மேடையிலும் ரஞ்சித் கௌரவிக்கப்பட்டார். தமிழ்நாட்டுக்கு வெளியே, உலகளாவிய எழுத்துருவியல் மாநாட்டில் கொற்கை எழுத்துருவுக்கு வழக்கப்பட்ட முதல் அங்கீகாரம் இது.   

மூன்று நாள்கள் நடைபெற்ற இந்த மாநாட்டின் அரங்கம் எழுத்துருவியல் சார்ந்த கலைப்பொருள்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முதல் நாளில் அச்சுக்கலை, வனப்பெழுத்து, எழுத்துருவியல் பயிலரங்குகள் நடந்தன. அச்சுக்கலையும் கதைசொல்லும் என்ற தலைப்பில் உலகளாவிய மாநாடும் ஆய்வுக்கட்டுரைகள் முன்வைப்பும் அடுத்த நாளின் நிகழ்வுகள். சுவரொட்டிக் கண்காட்சியும் நடத்தப்பட்டது. துறை வல்லுநர்கள், ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இம்மாநாட்டில் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். 

காணொளித் துணுக்கு

காணொளித் துணுக்கு

காணொளித் துணுக்கு

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now