தீர்வுக்குத் தடம் காட்டும் குறுக்குவழிகள்

லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் எழுத்துத் தொழில்நுட்பங்களுக்கான கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. 2026 நவம்பர் 11, புதன்கிழமை நடைபெற்ற இக்கருத்தரங்கில் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், துறைசார் வல்லுநர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். செல்லினம், முரசு அஞ்சல் செயலிகளின் உருவாக்குநரும், வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன் இக்கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றினார்.

‘உலகளாவிய எழுத்துத் தொழில்நுட்பங்கள்: புதிய காலகட்டத்திற்கான புதிய வழிமுறைகள்?’ (Global Text Technologies: New Methods for a New Era?) என்ற தலைப்பில் இக்கருத்தரங்கம் ஒருங்கிணைக்கப்பட்டது. இன்றைய விரைவான தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப எழுத்துருத் துறையில் புதிய வழிமுறைகள் தேவையா? இல்லையெனில் அதற்கான காரணம் என்ன? தற்போது பயன்படுத்தும் வழிமுறைகளில் உள்ள சிக்கல்கள் யாவை? அவற்றில் பயனுள்ளதாக இருக்கும் வழிமுறைகள் எவை? முதலிய பல கேள்விகளை முன்வைத்து, துறை வல்லுநர்கள் கலந்துரையாடினர்.

ரெடிங் பல்கலைக்கழகத்தில் (University of Reading) முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டுவரும் முத்து நெடுமாறனின் உரை, நாற்பதாண்டுகளில் அவர் உருவாக்கிய தொழில்நுட்பத் தீர்வுகளின் அடிப்படையிலானது. ‘தேவையிலிருந்து வழிமுறைகள் வரை’ (From Necessity to Methods) என்பது அவரது உரையின் தலைப்பு.

கணினித் திரையில் தமிழ் தெரிய வேண்டும் என்ற தேவையை நிறைவேற்ற, விசைப்பலகையின் கட்டளையைக் களவாடி, வன்பொருள் மாற்றம் செய்து ஒரு வழிமுறையைக் கண்டார் முத்து நெடுமாறன். 1983ஆம் ஆண்டில், தனியுரிமக் குறியீட்டு எண்ணிம எழுத்துருக்கள் (Proprietary Encoded Fonts Era) காலகட்டத்தில் முதல் இயங்குதள அடிப்படையிலான தமிழ் எழுத்துருவை (OS-based digital font) இப்படித்தான் உருவாக்கினார். வன்பொருள் மாற்றத்தின் வழியாக அவர் செய்த தொழில்நுட்பப் புரட்சி, பிற்காலத்தில் பெருநிறுவனங்களும் எடுத்தாளும் கட்டமைப்பைக் கொண்டிருந்தது.

கூகுள் தட்டச்சு எனப் பரவலாக அறியப்படும் ஒலிப்பு முறை (phonetic) தமிழ் தட்டச்சினை, கூகுள் நிறுவனம் உருவாகும் முன்பே 1993ஆம் ஆண்டு உருவாக்கினார். ‘முரசு அஞ்சல் 1.0’ பதிப்பு பொதுமக்களுக்காக இலவசமாக வெளியிடப்பட்டது. யூனிகோடு தரப்பாடு (Unicode standard), அவருடைய அண்மை உருவாக்கமான ஹைபிஸ்கஸ் (Hibizcus) செயலி முதலியனவும் தேவையினால் உருவானவையே. இவை தொடர்பான தன் அனுபவங்களைக் கருத்தரங்கில் பகிர்ந்துகொண்டார் முத்து நெடுமாறன்.

கருத்தரங்கில் பங்கேற்ற பலருக்கும் அவை புதிய தகவல்கள். லத்தின் வரிவடிவங்கள் அல்லாத மற்ற மொழிகள் பல்வேறு தடைகளைத் தாண்டியே இன்றிருக்கும் இடத்தைக் கணினி உலகில் பெற்றுள்ளன. ஆங்கிலம் அறியாத பகுதிகளில் உள்ள மொழிகள் கடக்கவேண்டிய தொலைவு இன்னும் அதிகம்.

மின்மயமாக்க முயற்சிகளுக்காகக் கொண்டுவரப்படும் தீர்வுகள் உலகிலுள்ள எல்லா மொழிகளுக்கும் பொருந்துவதில்லை. பெரிய மொழிக்குடும்பங்களைச் சேராத ஆயிரக்கணக்கான மொழிகளும் அவற்றின் வரிவடிவங்களும் புழக்கத்தில் உள்ளன. அவற்றின் தனித்தன்மையை ஆழ்ந்து ஆராய்ந்து தீர்வுகளைக் கொண்டுவர வேண்டும். புதிதாக உருவாக்கப்படும் எதுவும் உலகளாவிய மொழிகள் அனைத்துக்கும் வாய்ப்பளிக்கும் விதமாக உருவாக்கப்படுவது முக்கியம். முத்து நெடுமாறன் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள், அனைத்து மொழிகளையும் உள்ளடக்கிய தீர்வுகளுக்கான (inclusiveness) தேவையை வலியுறுத்துவதாக இருந்தன.

வெற்றுரை (plain text) பற்றி முத்து நெடுமாறன் பேசுகையில் தமிழ் வரிவடிவங்கள் பற்றி மட்டுமின்றி, பெங்காலி, தேவநாகரி எழுத்துருவாக்க நுணுக்கங்களையும் தன் உரையில் சேர்த்துக்கொண்டார். ஒன்றின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்படும் ஓர் அணுகுமுறை மற்றவற்றுக்கும் பயன்படும் என்பதைத் தெளிவாக விளக்கிக் காட்டினார். தேவைகளின் பொருட்டு அவர் உருவாக்கிய ஒவ்வொரு குறுக்குவழியும் தீர்வுக்கான தடத்தைக் காட்டின. ஒவ்வொரு தற்காலிக மாற்றுவழியும் நிரந்தரத் தீர்வுக்குப் பாதையமைத்தவை.

ஒரே மாதிரியான திருத்தம் (fix) பல மொழி எழுத்துருக்களுக்குத் தேவைப்படுகிறதெனில், அந்த அளவிற்குத் தளத்தில் (platform) மாற்றம் கொண்டு வர வேண்டிய அவசியம் வலுப்பெறுகிறது. இந்தக் கருத்தினை முன்னிறுத்திப் பேசினார் முத்து நெடுமாறன். கலைநயமும் தொழில்நுட்பமும் கலந்த ஒன்றாக அந்த உரை அமைந்திருந்தது.

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now