பளீர் வண்ணப் பலகையும் நிழல் எழுத்தும்

பிலிப்பைன்ஸின் தனித்துவமான அடையாளங்களில் ஒன்று வாகனப் பெயர்ப் பலகைகள். பளீரென்ற வண்ணங்களில் ஒளிரும் எழுத்துகள் கொண்ட இப்பலகைகள் கைகளால் வரையப்படுபவை. இக்கலையை அழியாமல் பாதுகாக்கும் முயற்சியில் இக்கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். 

பிலிப்பைன்ஸின் பொதுப் போக்குவரத்து வாகனத்தின் பெயர் ஜீப்னி. ராணுவத்தின் பொதுப் பயன்பாட்டுப் பொறிவண்டியான ஜீப் (GP / Jeep)  வண்டிகள்தான் தொடக்கத்தில் இதற்காகப் பயன்படுத்தப்பட்டன. அதிக மக்களை ஏற்றிச் செல்வதற்காக அடிப்பகுதியை வெட்டி நீளமாக்கினார்கள். பின்னர் சிறு பேருந்துகள் அளவில் இவ்வண்டிகள் தயாரிக்கப்பட்டாலும் முகப்பு ஜீப் வடிவிலேயே இருக்கிறது. 

பொதுமக்கள் வெகு தூரத்தில் இந்த வண்டி வரும்போதே எங்கு செல்லும் வண்டி என்பதைப் படித்தறியும் வகையில் பளீரென்ற வண்ணங்களில் பெயர்ப் பலகைகளை எழுதத் தொடங்கினர். ராணுவ வண்டிகளில் எழுவதற்குப் பயன்படும் அச்சுத்தகட்டு எழுத்துமுறை (Stencil Lettering) இந்தப் பெயர்ப் பலகைகளிலும் பின்பற்றப்படுகிறது. இதில் உள்ள நிழல் எழுத்துகள் (Drop Shadow) நுட்பம் முப்பரிமாணத் தோற்றம் தருகிறது. பளிச்சிடும் நியான் எழுத்துக்களுக்குப் பின்னால் அடர் கருப்பு அல்லது மாறுபட்ட நிறத்தில் நிழல் வரைவதால், எழுத்துக்கள் பலகையை விட்டு வெளியே துருத்திக்கொண்டு தெரிவது போன்ற (Pop-out) தோற்றத்தைத் தரும். 

ஊர்ப்பெயர்களின் அளவு சிறிதோ பெரிதோ, எப்படியிருந்தாலும் அந்தப் பலகைக்குள் அடைத்தாகவேண்டும். அது பளிச்சென்றும் இருக்கவேண்டும். இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு பலவிதமான எழுத்து வடிவங்களில் பலகைகளை உருவாக்கினார்கள் கலைஞர்கள். 

இந்நாட்டின் முக்கியமான பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக இந்த வண்டியும் அதன் பெயர்ப்பலகை எழுத்துமுறையும் மாறிவிட்டன. கால மாற்றத்தில் எல்லாமே நவீனமாகின்றன. இந்தப் பெயர்ப்பலகைகளும் தப்பவில்லை. கணினி எழுத்துருக்களும் அச்சகங்களும் அதிகமானதும் இக்கலைஞர்களுக்கு வேலை குறைந்தது. பலர் இத்துறையை விட்டுச் சென்றுவிட்டனர். எனினும் சிலர் எப்படியாவது இக்கலையை இளைஞர்களுக்குக் கடத்திட முயல்கின்றனர்.

நோய் முதல் நாடி அதைத் தணிப்பதுதானே சிறந்த வழிமுறை? இந்தக் கலை அழிவை நோக்கிச் செல்ல இரண்டு காரணங்கள். நவீன தொழில்நுட்பம். பயன்பாட்டுத் தேவையின்மை. 

வண்டியின் பெயர்ப்பலகைக்கு தேவை குறைந்தாலும் அழகியல் அடையாளமாக நிலைத்துவிட்டது இந்த எழுத்துமுறை. எனவே வீட்டிலும் அறையின் முகப்பிலும் மாட்டும் பெயர்ப்பலகை, வாழ்த்து அட்டை, சாவிக் கொத்து போன்று வெவ்வேறு பயன்பாடுகளை உருவாக்கினர். குழந்தைப் பருவத்தில் இருந்து பார்த்து வளர்ந்த இந்த எழுத்து வடிவங்கள் தங்களோடு இருப்பதை மக்கள் விரும்பினர். வரவேற்பு கிடைத்தது. சுற்றுலாப் பயணிகளும் ஆர்வமாக வாங்கினர். 

இவற்றையெல்லாம் விற்பனை செய்ய நவீனத் தொழில்நுட்பங்களில் உதவியை நாடுகின்றனர். இணையச் சந்தைகளான இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற தளங்களை இக்கலைஞர்கள் பயன்படுத்துகின்றனர். யூட்யூப் வழியாகக் காணொளிகள் பதிவேற்றி மற்றவர்களும் கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்துகின்றனர். இளைய தலைமுறை இந்தப் பாணியை எழுத்துருவாகவும் உருவாக்கியுள்ளது. 

கலைஞர்கள் முயற்சிகளாலும் மக்கள் ஆதரவினாலும் இன்னும் பல ஆண்டுகள் இந்தக் கலை வாழும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

வரையக் கற்றுத் தருதல்

எழுத்துக் கலைஞர் ஒருவரின் இன்ஸ்டாகிராம்

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now