கனடாவில் 16ஆவது தமிழ் இணைய மாநாடு

வரும் ஆகத்து மாதம் 25, 26 27ஆம் நாள்களில் 16ஆம் தமிழ் இணைய மாநாடு கனடா நாட்டில் நடைபெறவுள்ளது. இதற்கானச் செய்திகள் ஏற்கனவே பல ஊடகங்களில் வெளிவந்துள்ளன. தொராண்டோவில் அமைந்துள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் பல நாடுகளில் இருந்து பேராளர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

தமிழ் இணைய மாநாடு 2017

மாநாட்டில் படைக்கப்படவிருக்கும் கட்டுரைகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. (காண்க: https://tamilinternetconference.infitt.org/selected-papers/). மொழிசார்ந்த தொழில்நுட்பம் தொடர்பான 34 கட்டுரைகள் பட்டியலில் காணப்படுகின்றன. கற்றல் கற்பித்தல், பேசுவதை புரிந்துகொள்ள உதவும் ஒலி-வரி வடிவமாற்ற நுட்பங்கள், தகவல் கிடங்குகள், வணிகப் பயன்பாடு, மின்னூல்கள் முதலிய துறைகளை இந்தக் கட்டுரைகள் அடையாளமிடுகின்றன. தமிழ் இணைய மாநாடுகளை நடத்தும் ‘உத்தமம்’ அமைப்பின் தோற்றுநர்களில் ஒருவரும், முரசு அஞ்சல், செல்லினம் செயலிகளின் வடிவமைபாளருமான முத்து நெடுமாறன், இவ்வாண்டு மாநாட்டில் முகாமை உரையை ஆற்றவுள்ளார்.

1997ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தொடங்கிய தமிழ் இணைய மாநாடு, ஆண்டுதோரும் உலகின் வெவ்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றது. மின்னுட்ப வல்லுநர்களும் மொழியியல் அறிஞர்களும் கல்வியாளர்களும் ஒன்றுகூடும் இம்மாநாடுகள் தமிழின்பால் பற்றுகொண்டுள்ள பல்துறை வல்லுனர்களை ஒன்றிணைக்கும் ஒரு சிறந்த தளமாகக் கருதப்பட்டு வருகிறது.

தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்யவேண்டுமெனில், இன்று அணுவெல்லாம் தமிழ் முழக்கம் செய்யவேண்டும். மின்னுட்பத்தில் ஏற்பட்டுவரும் ஒவ்வொரு மேம்மாட்டிலும் தமிழ் மொழி இடம்பெற்றிருக்க வேண்டும். இது நடைமுறையில் வெற்றி பெறுவதற்குச் சில அடிப்படைச் செயல்களை நாம் செய்தாக வேண்டும். இவற்றை இம்மாநாடு கருத்தில் கொள்ளும் என நம்புவோம்.

பயனர் எண்ணிக்கை

தமிழில் மின்னுட்ப ஆய்வுகள் பல பகுதிகளில் பல துறைகளில் நடைபெற்று வருகின்றன. சில ஆழ்வுகள் தொடங்கப்பட்ட நோக்கத்தை அடைகின்றன. ஆனால் பல ஆய்வுகள், முதல் முயற்சியில் கண்ட உருவாக்கத்தோடு நின்றுவிடுகின்றன. தொடர்ச்சியான மேம்பாடுகள் குன்றி இருப்பதற்குப் பல காரணங்களைக் கூறலாம். அவற்றுள் தலையானது உருவாக்கங்கள் பயனர்களைச் சென்று அடையாமல் இருப்பதே!

ஆய்வுக்காகச் செய்யப்படும் உருவாக்கங்கள் வேறு; பயன்பாட்டுக்காகச் செய்யப்படும் உருவாக்கங்கள் வேறு. பயனர்கள் இல்லையேல் பயன்பாட்டுக்காகச் செய்யப்படும் உருவாக்கங்கள் வெற்றி பெறா.  அதுபோல, பயன்பாட்டுக்கு உகந்த உருவாக்கமாக இல்லாவிடில், பயனர் எண்ணிக்கையும் உயராது.

இதில் யாருக்குப் பொறுப்பு அதிகம்? குறிப்பிட்ட ஒரு நிலைப்பாட்டை அடைந்த செயலியை தொட்டு கூடப் பார்க்காமல் இருப்பதற்குப் பயனர்களைக் குறைகூறுவது சரியா? அல்லது ‘தான் நினைப்பதே சரி’ என்னும் எண்ணத்தில் இரவும் பகலும் உழைப்பினைச் செலுத்தி உண்மையான பயன்பாட்டை தெளிவுபடுத்தாத வல்லுநர்களைக் குறைகூறுவது சரியா?

எல்லா மின்னுட்ப உருவாக்கங்களும் முதல் வெளியீட்டிலேயே முதிர்ச்சி அடைந்துவிடுவதில்லை. பயனரின் கருத்துகளை உள்வாங்கி, தொடர்ந்து மேம்பாடுகளைச் கொண்டு வருவதே உலகில் உள்ள அனைத்து மென்பொருள் நிறுவனங்களும் கடைப்பிடித்து வரும் வழக்கு. தமிழ் ஆர்வலர்கள் நம்பிக்கையூட்டும் முயற்சிகளை வரவேற்று ஆதரவு அளிக்க வேண்டும். மின்னுட்ப வல்லுநர்கள் பயனர்களின் நம்பிக்கையைப் பெறுவதில் அதிக அக்கறை செலுத்தவேண்டும். இதற்கு ஓர் உறவுப்பாலமாக அமையவேண்டும் என்பது தமிழ் இணைய மாநாடுகள் தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கங்களுள் ஒன்று.

தமிழ் மின்னுட்ப உலகம் இன்னும் வளரவேண்டிய நிலையிலேயே உள்ளது. நமக்காக இல்லாவிட்டாலும் நமக்கு அடுத்து வரும் தலைமுறைக்காவது இந்த உலகை நாம் விரிவடையச் செய்யவேண்டும். வல்லுநர்களும் பயனர்களும் கைகோக்க வேண்டும். ஒரு கை தட்டினால் ஓசை எழாது!

பயன்பாட்டு விரிவாக்கம்

குறுஞ்செய்தி அனுப்புவதற்கும், நட்பூடகங்களில் சில வரிகளை எழுவதற்கும் தமிழைப் பயன்படுத்தினால் மட்டும், மின்னுட்ப உலகில் தமிழ் மேம்பாடு அடைந்துவிட்டது என்று கூறிவிடமுடியாது. நாள்தோறும் மற்ற மொழிகளில் செய்யும் செயல்களைத் தமிழிலும் தடையின்றி நாம் செய்ய இயல வேண்டும்.

ஆர்வம் கொண்ட வல்லுநர்கள், தன்னார்வ அடிப்படையில், தனியாகவே சில மேம்பாடுகளைச் செய்துவிடலாம். ஆனால் இன்றைய சூழலில் பலதுறைகளில் திறமையும் பட்டறிவும் கொண்ட வல்லுநர்கள் ஒன்றுசேர்ந்து உருவாக்கும் வெளிப்பாடுகளே உலக மக்களைச் சென்றடைகின்றன.

மொழி அறிஞர்கள், ஓவியர்கள், பொறியியல் வல்லுநர்கள், கல்வியாளர்கள் போன்ற பல்வேறு நிபுணர்களை ஒன்றினைத்து, உருவாக்கத்தில் அவரவரின் திறமைகளுக்கு இடம்கொடுத்து வெளிவரும் பொருள்கள், சரியான ஒரு தொடக்கத்தைப் பெறுகின்றன;  பயனர்களுக்கு ஏற்படும் பல்வேறு சிக்கல்களைக் களைகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் நுட்பங்கள் உலக நிறுவனங்களின் கவனத்தையும், அவை தயாரிக்கும் பொருள்களோடு இணையும் வாய்ப்பையும்  பெறுகின்றன.

இதுபோலவே தமிழ் மின்னுட்ப முயற்சிகளும் மேம்பட வேண்டும். தமிழைத் தங்கள் மின் கருவிகளில் பயன்படுத்தும் அனைவரும், நுட்பங்கள் தமிழிலும் வேண்டும் என்று அடிக்கடிக் கேட்க வேண்டும். அப்போதுதான் ஆர்வத்தின் பேரில் மட்டும் தொடங்கப்படும் இம்முயற்சிகளுக்கு மேம்பாடுகளையும், பயன்பாட்டினையும் காண ஓர் அடித்தளம் அமையும்.

முழுமையான இடைமுகத்தைத் தமிழிலேயே தருவது முதல், பேச்சுவழி உள்ளிடும் வசதி வரை, மின்னுட்ப நிருவனங்கள் தங்கள் பயனர்களின் வேண்டுகோளுக்கு இணங்கியே, அவரவர் தயாரிப்புகளில் இந்த வசதிகளைத் சேர்க்கின்றன. இதுபோன்ற கோரிக்கைகளைத் தமிழ் இணைய மாநாடுகள்  அடையாளம் கண்டு, முன்னிலைப்படுத்த வேண்டும். ஓரிருவர் மட்டும் கேட்டால் போதாது.  ஊர் கூடி இழுத்தால்தான் தேர் நகரும்!

ஆய்வுகளின் இலக்கு

எந்த ஓர் ஆய்வும், ஒரு தெளிவான இலக்கை அடையாளமிட்டுத் தொடங்கப்பட்டால்தான் எண்ணிய எண்ணம் ஈடேறும். எல்லா ஆய்வுகளும் ஒரு முழுப் பயன்பாட்டை உருவாக்கவேண்டும் என்பது இல்லை. முழுப் பயன்பாட்டின் ஒரு கூறாகவும் அமையலாம். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை ஆராய்ந்து அவற்றை முழுமைப்படுத்தத் திட்டமிடலாம்.

நடந்து முடிந்த 15 மாநாடுகளில் படைக்கப்பட்ட கட்டுரைகள், மின்னுட்ப உலகில் தமிழின் பயன்பாட்டைக் கூட்டப் பல கோணங்களில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன. அவற்றில் பல இன்றைய சூழலில் மிகவும் தேவைப்படும் ஆய்வுகளாக இருக்கலாம். இலக்கணம் சார்ந்த ஆய்வுகள், ஒலி-வரி மாற்றம் செய்யும் நுட்பங்கள், ஒளி வழி எழுத்துணரும் கூறுகள் போன்றவற்றை, இன்று பயன்பாட்டில் இருக்கும் திறன்கருவிகளுக்கேற்ப எவ்வாறு மறுபயனீடு செய்யலாம் என்று சிந்தித்தால், ஆய்வுகளை மிகவிரைவாக முன்னெடுத்துச் செல்லலாம்.

உத்தமத்தின் பங்கு

தமிழுக்கான மின்னுட்ப ஆய்வுகள் ஆங்காங்கே பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. வட்டார அளவில் பல மாநாடுகளும் நடைபெற்று வருகின்றன. பலதுறைகளைச் சார்ந்த வல்லுநர்கள் ஒரே இடத்தில் கூடி, தமிழில் நுட்பவியல் மேம்பாடுகளைப் பற்றி ஆராயும் ஒரே அனைத்துலக மையமாக அமைந்து வருவது, உத்தமம் இயக்கத்தின் தமிழ் இணைய மாநாடுதான். முதல் முறையாக இவ்வாண்டு கனடா நாட்டில் நடைபெறுகிறது.

காலத்தின் தேவைக்கும் தமிழின் மேன்மைக்கும் ஓர் உலகத்தரமான மாநாடாக இது அமைய வேண்டும். தகுதிவாய்ந்த தலைமைத்துவம், தரமான ஏற்பாடு, திறன்மிகுந்த படைப்புகள், திரளாக வரும் பேராளர்கள் – இவையே மாநாட்டின் வெற்றியை உறுதி செய்யும்.

16ஆம் தமிழ் இணைய மாநாடு பல்லாற்றானும் வெற்றிபெற செல்லினத்தின் நல்வாழ்த்துகள்!

 

Did you like this? Share it: