புத்தாண்டின் தொடக்கத்திலேயே பல அம்சங்களை புதிய பதிப்பில் களமிறக்கியுள்ளது டெலிகிராம் செயலி.
முதல் அம்சமாக அறிமுகமாகியுள்ளது சேவைச் செய்திகளுக்கு எதிர்வினையாற்றும் வசதி. யாராவது உங்களுக்குப் பரிசு அனுப்பும்போதோ, புதிதாக ஒரு குழுவில் சேரும்போதோ அல்லது காணொளி அரட்டையைத் தொடங்கும்போதோ உரையாடலில் ஒரு சிறப்புச் சேவைச் செய்தி தோன்றும். (Alexa joined the group போல) அந்த செய்திகளுக்கு தற்போது உணர்ச்சிக்குறி மூலமாக எதிர்வினையாற்றும் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள ஒரு குழுவில் இல்லாத உங்களால் அதிகமாகக் கேலி செய்யப்படும் நண்பர் இணைகிறார் என வைத்துக்கொள்ளுங்கள், அவரது வருகையை எளிதாக எதிர்வினைகள் மூலமாகக் கொண்டாட முடியும். இது மட்டுமல்லாமல் யாராவது உங்களை அழைக்கும்போது, அரட்டையின் சுயவிவரப் புகைப்படத்தை மாற்றும்போது, அரட்டைக்கு புதிய பின்னணியைப் பயன்படுத்தும்போது என எப்போதெல்லாம் சேவைச் செய்தியைப் பெறுகிறீர்களோ அப்போதெல்லாம் இதனைப் பயன்படுத்த முடியும்.

அடுத்த புதிய அம்சம் அரட்டைப் பட்டியலில் உள்ள தேடல் பெட்டியில் வந்திருக்கும் வசதி. தேடல் பெட்டியானது உங்கள் அரட்டைகளிலிருந்து தேவையான நபர்களின் அல்லது குழுக்களின் அரட்டைகளை விரைவாகக் கண்டறிய உதவுகிறது. இப்போது அதில் தனிப்பட்ட அரட்டைகள், குழு அரட்டைகள், சேனல்களிலிருந்து வரும் அரட்டைகளை எளிதாகக் கண்டறியும் வகையில் மூன்றும் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.
பிரபலங்கள், அமைப்புகளின் கணக்குகளுக்கு அங்கீகாரம் (verified) வழங்கும் வசதியில் மூன்றாம் தரப்பும் இணைவதால் கூடுதல் சரிபார்ப்பும் நடக்கிறது. இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளின் பெயருக்கு அருகே குறிப்பிட்ட சில குறியீடுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பயனர்கள் நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்களைப் பெற முடியும். அதோடு டெலிகிராம் மூலம் நடைபெறும் மோசடி வேலைகளைக் குறைக்க முடியும்.
அடுத்த அசரவைக்கும் வசதி, உங்களுக்குத் தேவையான நபர்களின், குழுக்களின் அரட்டைகளைத் தனி கோப்புறைகளாக (filefolder) வைத்துக்கொள்வதாகும். அதாவது உங்கள் அலுவலகம் தொடர்பான அரட்டைகளைத் தனியாகப் பராமரிக்க விரும்பினால் அவை அனைத்தையும் தனி கோப்புறையாக வைத்துக்கொள்ள இயலும். சந்தா பயனர்கள் (Premium users) அந்தப் பெயர்களை விதவிதமான வடிவங்களில், உணர்ச்சிக் குறிகளைப் போல அமைத்துக்கொள்ளலாம். அதோடு எந்த அமைவுகளையும் மாற்றாமல் தங்களுக்கு விருப்பமான உலாவியில் இணைப்புகளை திறக்கவும் முடியும்.
அடுத்த அம்சமாக, பிற நண்பர்கள் மூலம் அனுப்பப்படும் பெரிய உணர்ச்சிக்குறிகளைப் போன்ற பரிசுகளின் எண்ணிக்கை 1400ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் அவற்றை விருப்பத்திற்கேற்றாற்போல் மாற்றியமைத்துக்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
சுமார் ஒன்றேகால் கோடிக்கும் அதிகமான டெலிகிராம் பயனர்கள் அதன் சந்தாதார்களாக உள்ளனர். இது வேகமான பதிவிறக்க வேகம், உடனடியான அரட்டை மொழிபெயர்ப்பு போன்ற முப்பது தனித்துவமான அம்சங்களை வழங்குகிறது. 2021ஆம் ஆண்டு முதல் லாபம் ஈட்டுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த டெலிகிராம், தற்போது லாபம் ஈட்டத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
விளக்கப்படங்களுடன் டெலிகிராம் வலைப்பக்கத்தில் இதைப்பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.
- மு. இசக்கிமுத்து.
