அமெரிக்காவின் புகழ்பெற்ற விளையாட்டுப் போட்டியான சூப்பர் பௌல் (Super bowl) நிகழ்வில் அளவுக்கு அதிகமான ஒலிமாசு உருவாவதாக, ஆய்வு அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு ஐபிஎல் எப்படியோ, அதேபோலத்தான் அமெரிக்கக் கால்பந்துக்கு அங்கே நடக்கும் சூப்பர் பௌல். 1967ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. இந்தாண்டு, பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்க உள்ளது. இது எப்போதுமே ஞாயிற்றுக்கிழமைதான் தொடங்கும் . எனவே அந்த ஞாயிற்றுக்கிழமைக்கு சூப்பர் பௌல் ஞாயிற்றுக்கிழமை என்று பெயர் வைத்துக் கொண்டாடுகிறார்கள் அமெரிக்க மக்கள்.
சூப்பர் பௌல் விளையாட்டு நிகழ்வு உலகில் அதிக அளவிலான மக்கள் பார்த்து ரசிக்கும் விளையாட்டுகளில் ஒன்றாகும். இந்த நிகழ்வில் ரசிகர்கள் ஏற்படுத்தும் ஒலியின் அளவு, ஆப்பிள் திறன்கடிகாரத்தின் ‘ஒலி’ செயலியின் மூலம் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியைச் செய்தது, அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதாரத் துறை. இந்த ஆய்வறிக்கையில் 1,15,049 ஆப்பிள் திறன்கடிகார பயனர்களின் ஒலி அளவு பற்றிய தரவுகள் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளன. இதில் சாதாரண நேரங்களில் உள்ள ஒலியின் அளவும், சூப்பர் பௌல் போன்ற நிகழ்வுகளின்போது உள்ள ஒலியின் அளவும் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2021 முதல் 2024 வரையிலான சூப்பர் பவுல் போட்டிகளின் போது ஒலி அளவுகள் கண்காணிக்கப்பட்டன. ஆட்டத்திற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பும் ஆறு மணி நேரத்திற்குப் பிறகும் அவை சராசரியாகக் கணக்கிடப்பட்டன. பின்னர் அடுத்து வந்த சாதாரண ஞாயிற்றுக்கிழமைகளில் உருவான ஒலியோடு ஒப்பிடப்பட்டன. சூப்பர் பவுல் ஞாயிற்றுக்கிழமையில் அனைத்து பங்கேற்பாளர்களிடமும் 1.5 முதல் 3 டெசிபல் வரை ஒலியளவு அதிகரித்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அதீத ஒலியானது, ஆட்டம் தொடங்குவதற்கு சுமார் மூன்று மணி நேரத்திற்கு முன்பே தொடங்கி, அது முடிந்த மூன்று மணி நேரம் வரை நீடித்துள்ளது. அந்த அளவிற்குக் கொண்டாடியிருக்கிறார்கள் அமெரிக்க சூப்பர் பெளல் ரசிகர்கள்.
ஆனாலும் இந்த மூன்று டெசிபல் ஒலியளவு அதிகரிப்பு என்பது சாதாரணமாகக் கேட்கும் ஒலிக்கு இருமடங்காகும். இதனைச் சமாளிப்பதற்கு அவர்களின் காதுகள் போராடியிருக்கும். ஒரே ஒரு நிகழ்விற்காக அமெரிக்கா முழுவதும் ஒலியின் அளவுகள் எவ்வளவு தூரம் அதிகரிக்கின்றன என்பதைக் கூறும் முதல் பகுப்பாய்வு இது எனக் கூறப்படுகிறது. கடந்த மே 2024இல் 15% பேர் தினமும் டின்னிடஸை (அளவுக்கு அதிகமான ஒலிமாசு காரணமாக, காதுகளில் இரைச்சல் கேட்டுக்கொண்டே இருப்பது) அனுபவித்துள்ளனர்.
பதினைந்து சதவீதம் என்பது இளம் வயதினருக்கு பொதுவாக ஏற்படக்கூடிய ஒன்றுதான். ஆனால் சூப்பர் பௌல் போட்டிகளில் பங்கேற்ற பிறகு 77.6% பங்கேற்பாளர்கள் டின்னிடஸ் பாதிப்பிற்கு ஆளாகியிருக்கின்றனர். இந்த மாதிரியான நிகழ்வுகளில் கேட்டல் குறைபாடுகளிலிருந்து தப்பிக்க வழிகளையும் அந்த அறிக்கை கூறுகிறது. ஆப்பிள் திறன்கடிகாரம் அல்லது திறன்பேசி பயனர்கள், ஒலி (Noice) செயலியைப் பயன்படுத்தி தங்களைச் சுற்றி எழும் ஒலியின் அளவை உணர்ந்துகொள்ள முடியும். அப்போது செவிச்செருகிகளைப் (Earplugs ) பயன்படுத்தி இரைச்சலிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். இதன் மூலம் ரசிகர்கள் பாதுகாப்பாக அதே வேளையில் மகிழ்ச்சியோடு வேடிக்கை பார்க்க முடியும்.
ஆப்பிளின் கேட்டல் ஆய்வின் மூலம் இதுவரை 400 மில்லியன் மணிநேர ஒலிக்குறிப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்த கேட்டல் ஆய்வு மற்றும் பிற ஆய்வுகளில் பங்கேற்க, ஆப்பிள் திறன்பேசி பயனர்கள் ஆப் ஸ்டோரிலிருந்து ஆப்பிள் ஆராய்ச்சி (Apple research) செயலியைப் பதிவிறக்கலாம் .
- மு. இசக்கிமுத்து
