அனைத்துலகத் தாய்மொழி நாள் 2025

அனைத்துலகத் தாய்மொழி நாள் அறிவிப்பு வெளியாகி இருபத்தைந்து ஆண்டுகளாகின்றன. இவ்வாண்டு வெள்ளிவிழாக் கொண்டாட்டம்.

international mother language day

தங்கள் மீது மத்திய அரசு ஒற்றை மொழியைத் திணிப்பதை மக்கள் எதிர்த்தனர். குறிப்பாக மாணவர்கள் பல்வேறு போராட்டங்களைத் தீவிரமாக நடத்தினர். உடல் மண்ணுக்கு உயிர் மொழிக்கு என்பதை நிரூபித்து மாண்டனர். மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் மொழி உரிமையைப் பேசிய கட்சிக்கே கிடைத்தது. அடுத்து நடந்த சட்டமன்றத்தேர்தலில் தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் மொழிப்போராட்ட அமைப்பின் தலைவரான மாணவரிடம் தோற்றுப்போனார். சில ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசு மொழித் திணிப்பில் இருந்து பின்வாங்கியது.

இவை நடந்தது பங்களாதேஷில். கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பங்களாதேஷில் அப்போது நடந்த மொழிப்போராட்டங்களை தமிழ்நாட்டில் உள்ளோர் நெருக்கமாக உணர முடியும். இலங்கை முதல் இங்கிலாந்து வரைக்கும் பல நாடுகளில் மொழியாதிக்கம் பற்றிய சர்ச்சைகள் உள்ளன. பாதிக்கப்படுவோர் அனைவருமே இப்போராட்டங்களின் அவசியத்தை அறிவர். பல்வேறு மொழிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் இடமளிக்கும் சிங்கப்பூர் போன்ற பல நாடுகளும் உலகில் உள்ளன.

பங்களாதேஷில் 1952ஆம் ஆண்டு வங்காள மொழிக்கு அரசு அலுவலகங்களில் உரிய அங்கீகாரம் வழங்கக் கோரி நடந்த போராட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் விதத்தில் பிப்ரவரி 21ஆம் நாள் அனைத்துலகத் தாய்மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது. பங்களாதேஷ் அரசு பரிந்துரையின் பேரில் 2000ஆவது ஆண்டில் இருந்து இந்நாள் கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோவின் அறிவிப்பு 2002ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2025 அனைத்துலகத் தாய்மொழி நாள், இவ்வழக்கம் தொடங்கியதின் வெள்ளிவிழா ஆண்டாகும். உலகில் தற்போது தோராயமாக 8324 மொழிகள் பேசப்படுகின்றன. தான் பேசும், தனக்குப் புரியும் மொழியில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு உலகில் நாற்பது விழுக்காடு மக்களுக்கு மறுக்கப்படுகிறது.  

உலகில் உள்ள மொழிகளின் பன்முகத்தன்மை காக்கப்படவும் தாய்மொழியின் பயன்பாட்டை மேம்படுத்தவும் கால் நூற்றாண்டாக யுனெஸ்கோ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இதற்கென தனித்துவமான கருப்பொருள் இருக்கும். இந்த ஆண்டு மொழியியல் பன்முகத்தன்மை, பன்மொழிக் கல்வி, அழிந்துவரும் மொழிகளைப் பாதுகாத்தல் என்பவை கருப்பொருளாக உள்ளன.

இந்தக் கருப்பொருளின் நோக்கமாக மூன்று விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தாய்மொழி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல். மொழி உரிமைகளை வலுப்படுத்துதல். காலாசார அடையாளத்தை ஆதரித்தல். இவைதாம் இவ்வாண்டு முன்னெடுக்கப்பட உள்ளவை. உலகின் எந்த மூலையில் வசித்தாலும், அவர்தம் பண்பாட்டு அடையாளங்களைக் காக்கத் தாய்மொழி இன்றியமையாத ஒன்றாகிறது. அனைவருக்கும் அனைத்துலகத் தாய்மொழி நாள் வாழ்த்துகள்.

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now