முகப்புப்படமாக உணர்ச்சிக்குறிகள்

கூகுள் கான்டாக்ட்ஸ் செயலியின் புதிய பதிப்பில் தொடர்பு எண்களுக்குரியவர்களின் படத்திற்கு உணர்ச்சிக்குறி அல்லது எழுத்துக்குறியீடுகளைப் பயன்படுத்தும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Google contacts

கூகுள் கான்டாக்ட்ஸ் (Google Contacts) என்பது நாம் பதிவு செய்து வைத்துள்ள தனிப்பட்ட, தொழில்முறை தொடர்பு எண்களை மேலாண்மை செய்ய உதவும் சேவையைத் தரும் செயலி. ஒரு மாதத்திற்கு 1.8 பில்லியன் மக்கள் இச்செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வளவு பயனர்களுக்கும் அவ்வப்போது நல்ல புதுப்புது அம்சங்களை வழங்கி வருகிறது கூகுள். அவற்றில் ஒன்று தங்களுடைய முகத்தை முகப்புப்படமாக வைக்க விரும்பாத பயனர்களுக்காக தற்போது வழங்கப்பட்டுள்ளது.

தொடர்பு எண்களுக்கும், மின்னஞ்சல்களுக்கும் உரிய நபர்களை எளிதாகவும் விரைவாகவும் அறிந்து கொள்வதற்காகவே இது கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்போது வழங்கப்பட்டுள்ள புதிய அம்சத்தில், உங்கள் விருப்பம்போல உணர்ச்சிக்குறிகள் அல்லது எழுத்துக்குறிகளைக் கொண்ட முகப்புப்படத்தை அமைத்துக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் காதலரின் தொடர்பு எண்ணைப் பிறருக்குத் தெரியாமல் சேமிக்க வேண்டும் என வைத்துக்கொள்ளுங்கள். அப்போது அவருடைய படத்தைப் பயன்படுத்துவதற்கு மாற்றாக, காதல் பொங்கும் விதவிதமான உணர்ச்சிக்குறிகளை அமைத்துக்கொள்ளலாம். அதோடு உங்களுக்கு மட்டுமே தெரிந்த எழுத்துக்குறியீடுகளையும் தொடர்புக்கான முகப்புப்படமாக வைத்துக்கொள்ளலாம்.

இதனைப் பயன்படுத்த முதலில் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் தொடர்பு எண்ணுக்குச் செல்லுங்கள். அதன் மேல் தெரியும் திருத்து என்ற பொத்தானைச் சொடுக்குங்கள். அதனைத் திருத்துவதற்கான அம்சம் காண்பிக்கப்படும். அதில் உள்ள முகப்புப் படத்தைத் திருத்துவதற்கான பொத்தானைச் சொடுக்குங்கள். அதில் உள்ள Monogram என்பதைத் தட்டுங்கள். பிறகு எழுத்துக்குறி, உணர்ச்சிக்குறி எனத் திரையில் தோன்றும். உங்களுக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உணர்ச்சிக்குறி வேண்டுமென்றால், உங்கள் விசைப்பலகையின் பரந்த பட்டியலிலிருந்து ஓர் ஈமோஜியை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள் . அதே போல எழுத்துகள் தேவைப்பட்டால் ஒன்று அல்லது இரண்டு எழுத்துகளைத் தேர்ந்தெடுங்கள். அதன் பின்னணி வண்ணத்தையும் மாற்றிக்கொள்ளலாம்.

இதற்கெல்லாம் உங்களுக்கு நேரமில்லையென்றாலும் பரவாயில்லை. கீழே உள்ள Inspire me பொத்தானைத் தேர்ந்தெடுங்கள். அது தானாகவே வெவ்வேறு எழுத்துரு, உணர்ச்சிக்குறி, பின்னணி வண்ண சேர்க்கைகளை உருவாக்குகிறது. தங்களது தொடர்புகளைத் தனித்துவமாக வைக்க விரும்பும் பயனர்களுக்கு இது அற்புதமான அம்சமாகும்.

  • மு. இசக்கிமுத்து
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now