ஆபத்தில் கூகுள் குரோம்?

கூகுள் நிறுவனத்தின் சந்தை ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க நீதித்துறை அமைச்சகம், அதன் குரோம் உலவியை விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. இணையதள விளம்பர சேவைகளில் ஏகபோக உரிமையை கூகுள் மீறுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

Google Chrome
Google Chrome

கூகுள் ஏகபோக உரிமையாளரா?

அமெரிக்க நீதித்துறை அமைச்சகம் கடந்த 2023-ம் ஆண்டு, அமெரிக்காவின் ஏகபோக உரிமைச் சட்டங்களை மீறுவதாக கூகுள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தது. அதில் ஆப்பிள், ஆண்டிராய்டு கருவிகளின் இயல்புநிலை தேடுபொறியாக, கூகுள் குரோம் உலவியை நிறுவ, அந்நிறுவனம் பல பில்லியன் டாலர்கள் கொடுத்து, ஒப்பந்தங்கள் போட்டதாகக் குறிப்பிடப்பட்டது. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக இந்த விதிமீறலை மறைக்க பல்வேறு நடவடிக்கைகளை கூகுள் மேற்கொண்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி அமித் மேத்தா, 2024-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், கூகுள் போட்டியாளர்களின் சந்தை அணுகுமுறையைத் தடுப்பதாகவும், பயனர்களின் விருப்பங்களைக் கட்டுப்படுத்துவதாகவும் உறுதிப்படுத்தி, கூகுளை ஓர் ஏகபோக உரிமையாளர் (Monopolist) என அறிவித்தார். வர்த்தகத்தில் ஏகபோக உரிமை நிலையைப் பெறுவது சட்டவிரோதமல்ல என்றாலும், அதைப் பயன்படுத்தி சந்தைப் போட்டியைக் கட்டுப்படுத்த முயல்வது சட்டவிரோதமானது என்றும் குறிப்பிட்டார். 

கூகுள் கருவிகளின் விற்பனை 

இந்த வழக்கில் அண்மையில் அமெரிக்க நீதித்துறை அமைச்சகம் மேலும் ஒரு கோரிக்கையைத் விடுத்துள்ளது. அதில், கூகுள் தனது குரோம் உலவியை விற்பனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும், ஆப்பிள், மொசில்லா போன்ற நிறுவனங்களுடன் கூகுள் கொண்டுள்ள இயல்புநிலைத் தேடுபொறிக்கான ஒப்பந்தங்களை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. கூகுளின் இந்தச் செயல் போட்டியாளர்களை விலக்கிச், சந்தை ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே கூகுளின் ஏகபோக உரிமைத்துவத்தை நீக்கும் வகையில், கூகுள் பிளே, கூகுள் குரோம் உள்ளிட்ட கருவிகளை விற்பனை செய்யலாம் என்று நீதிபதி அம்த் மேத்தா குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அதை வலியுறுத்தி கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விசாரணை வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

குரோம் விற்பனையின் தாக்கம்

கூகுள் குரோம் உலவி விற்பனை செய்யப்பட்டுவிட்டால், அந்நிறுவனத்தின் வருமானம் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்பிளுடன் கூகுள் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் கொண்டுள்ள ஒப்பந்தம் நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், உலக அளவில் 3.69 பில்லியன் மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள கூகுள் குரோம் உலவி மற்றும் அதன் பயன்களில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளதாகக் கூறப்படுகிறது.  ஏகபோக உரிமை நிலையைத் தவறாகப் பயன்படுத்தி, சந்தையில் போட்டியைத் தவிர்ப்பதுடன் பயனர்களின் விருப்பங்களையும் கூகுள் கட்டுப்படுத்துவதற்கு இப்புதிய நடவடிக்கை கடிவாளமிடுவதுடன், தொழில்நுட்ப சந்தையின் முக்கியமான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் பார்க்கப்படுகிறது.

கூகுளின் பதில் 

இந்நிலையில் கூகுள் நிறுவனம், நீதித்துறை அமைச்சகத்தால் தீவிரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும், கூகுளின் வரையறுக்கப்பட்ட அங்கீகாரத்திற்குள் அதீத தலையீடு நிகழ்வதாகவும் விமர்சித்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பைப் பொறுத்து, மேல்முறையீட்டுக்கும் தயார் நிலையில் உள்ளதாக கூகுள் கூறியுள்ளது. இந்த வழக்கு, இணையளத்தில் ஏகபோக உரிமைகள் மற்றும் அதற்காக நிலவும் போட்டிகள் குறித்த முக்கியமான விவாதங்களைக் கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

  • விவேக்பாரதி
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now