கடிகாரத் தொழில்நுட்பமும் காப்புரிமை வழக்கும்

காப்புரிமை மீறலில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டதாக அலைவ்கோர் (AliveCor) நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ஆப்பிளுக்குச் சாதகமாக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதன்மூலம் ஆப்பிள் திறன்கடிகாரத் தொடர் நான்கின் (Apple Watch Series 4) இறக்குமதிக்கும் விற்பனைக்கும் இனி எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. 

Apple smart watch

இதயத்துடிப்பை அறியும் தொழில்நுட்பம் 

ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து அலைவ்கோர் என்ற செய்யறிவு நிறுவனம், ஆப்பிள் திறன்கடிகாரத்தில் பொருத்தும் வயர்லெஸ் ஈசிஜி தொழில்நுட்பத்தை உருவாக்கி, அதற்கான பதிப்புரிமையைப் பெற்றிருந்தது. இந்நிலையில், ஆப்பிள் அண்மையில் அறிமுகப்படுத்திய திறன்கடிகாரத்தில் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆப்பிள் காப்புரிமை மீறலில் ஈடுபட்டுவிட்டதாக அலைவ்கோர் குற்றஞ்சாட்டியது. மேலும், குறிப்பிட்ட ஆப்பிள் திறன்கடிகாரத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும் முறையிட்டது.

ஆப்பிளுக்கு விழுந்த அடி

காப்புரிமை மீறல் குறித்த வழக்கு 2021-ம் ஆண்டு தொடரப்பட்ட நிலையில், அமெரிக்க அனைத்துலக வர்த்தகக் குழு (ITC), கடந்த 2022-ம் ஆண்டு, அலைவ்கோரின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தி, ஆப்பிள் பதிப்புரிமையை மீறியதாக தீர்ப்பு வழங்கியது. மேலும், விதிமீறலுக்கு உள்ளான ஆப்பிள் திறன்கடிகாரத்தின் இறக்குமதியில் ஒவ்வொரு திறன்கடிகாரத்துக்கும் 2 அமெரிக்க டாலர் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனால் ஆப்பிள் நிறவனக் கருவிகளின் இறக்குமதி பாதிப்புக்குள்ளாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆப்பிளின் பதிலடி

ஆனால், அதே மாதம், ஆப்பிள் நிறுவனம் அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், அலைவ்கோருக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகளை வைத்தது. குறிப்பாக, ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்பங்களை அலைவ்கோர் பயன்படுத்தி, காப்புரிமை மீறியதாகவும், ஈசிஜி தொழில்நுட்பத்தை அலைவ்கோருக்கு முன்பே ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிவிட்டதாகவும் குறிப்பிட்டது.  

ஆப்பிள் விதி மீறவில்லை

இந்நிலையில், மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம், முழுமையான விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதில் ஆப்பிள் நிறுவனம் எவ்வித விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்று குறிப்பிட்டதோடு, அமெரிக்க சர்வதேச வர்த்தகக் குழுவின் தீர்ப்பையும், ஆப்பிள் மீது சுமத்தப்பட்டிருந்த அபராத தொகையையும் விலக்கித் தீர்ப்பளித்துள்ளது. 

சிறு நிறுவனங்களின் அறிவைத் திருடுவதா? 

இதையடுத்து, அமெரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களை அதிருப்தியில் ஆழ்த்தியிருப்பதாக அலைவ்கோர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. செய்தியாளர்களிடம் அந்நிறுவனத்தார் கூறியபோது, அனைத்துலக வர்த்தகக் குழு ஆதரித்த எந்த உறுதிப்பாடுகளையும் நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை என்றும், இதனால் சிறிய நிறுவனங்களின் புதுமையான கண்டுபிடிப்புகள் பெரு வணிக நிறுவனங்களால் திருடப்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், ஆப்பிளின் பதிப்புரிமை மீறலை நிரூபிக்க மேல்முறையீடு உள்ளிட்ட சட்டவழிகளை தொடர்ந்து ஆராய இருப்பதாகவும் கூறினர்.

  • விவேக்பாரதி
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now