கருவியைக்கண்டுபிடி சேவை விரிகிறது

கூகுள் தனது கருவியைன் கண்டுபிடி (Find My device) செயலியில் புதிய அம்சங்களைக் கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூகுளின் கருவியைக் கண்டுபிடி செயலி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டிருந்தது. முன்னரே ஆப்பிள் திறன்கருவிகளில் செயல்பட்டு வந்த இந்தச் சேவையை தாமதமாகத்தான் கூகுள் அறிமுகம் செய்தது. இச்செயலி நமது கருவிகளைக் கண்டுபிடித்துத் தந்தாலும், அதில் புது மாற்றங்களை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே புது அம்சங்கள் வெளியாகும் எனத் தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன.

find my device

கூகுள் பிளே சேவைகளின் v25.11.32 பீட்டா பதிப்பு இந்த கசிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதன்படி கருவியைக் கண்டுபிடி செயலியில், தானியங்கி பதிவுகளை விரிவுபடுத்தும் வகையிலான தரவுகள் வெளிவந்துள்ளன. இந்த புதிய பதிப்பு பற்றிய தரவுகளை ஆன்டிராய்டு அத்தாரிட்டி தளம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இன்னும் பல விதமான கருவிகளுக்கும் இச்செயலியைக் கொண்டுவரும் வகையிலான மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன.

தற்போது உள்ள பதிப்பின்படி, உங்கள் கருவியுடன் கூகுள் கணக்கை இணைத்தவுடன் கருவிகளைக் கண்டுபிடி செயலி தானாகவே செயல்படுத்தப்படும். இருப்பினும், With network in high-traffic areas only அமைப்பில் மட்டுமே இது தானாக இயங்குகிறது. மற்றபடி ஒவ்வொரு முறையும் நீங்களே செய்துகொள்ளும் நிலைதான் உள்ளது. இந்த புதிய பதிப்பில் நீங்கள் இருப்பிட அணுகலை இயக்கிய உடனே, உங்கள் கருவியின் இருப்பிடம் தானாகவே பதிவுசெய்யப்படும். இதன்மூலம் இச்செயலியை எளிதாகப் பயன்படுத்த முடியும்.

அதோடு இனிமேல் ஒரு கருவியின் அண்மைய இருப்பிடத்தைக் கண்டறியக் கருவியைக் கண்டுபிடி செயலியைப் பயன்படுத்தினால், தேடவேண்டிய கருவியானது உங்கள் திறன்பேசியுடன் தடையின்றி இணைக்கப்படும். மேலும், நீங்கள் ஏற்கனவே உள்ள கருவியை அகற்றினால், இச்செயலி தானாகவே அம்சத்தை இயக்கும்.

ஏற்கனவே கருவியைக் கண்டுபிடி செயலி அறிமுகப்படுத்தப்பட்டபோது கூகுள், பயனர்களுக்கு அதன் செயல்பாடுகள் பற்றிய தெளிவான மின்னஞ்சலை அனுப்பியிருந்தது. இப்போது இந்த புதுப்பிப்புகளை விவரிக்கும் மின்னஞ்சல் அனுப்புவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு கூகுள் மின்னஞ்சலை அனுப்பும்போதுதான் இந்த புதிய பதிப்பைப் பற்றி முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியும்.

கூகுள் இந்த மேம்பாட்டை விரைவில் வெளியிடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த மாற்றங்கள் எதுவும் இதுவரை பயனர்களின் கருவிளைச் சென்று சேரவில்லை. இந்த அம்சம் பற்றிய தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

கருவிகளைக் கண்டுபிடி செயலியின் செயல்படும் விதம் பற்றிய கட்டுரை ஏற்கனவே செல்லினத்தில் வெளியாகியிருக்கிறது. தேவைப்படுபவர்கள் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

  • மு. இசக்கிமுத்து
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now