ஆப்பிள் பழமல்ல, பணம்

மின்னணு பணப்பரிவர்த்தனைக்கு உதவும் செயலியான ஆப்பிள் பே, அமெரிக்காவின் போர்ட்டோ ரிக்கோ பகுதியில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

Apple Pay

கடந்த பத்து ஆண்டுகளாக மின்னணு பணப் பரிவர்த்தனை, வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரின் கைகளிலும் இருக்கிறது. மீதி சில்லறைக்கு மிட்டாய் வாங்கியதெல்லாம் பலருக்கு மறந்தேவிட்டது எனலாம். அந்த அளவுக்கு மின்னணு பணப்பரிவர்த்தனை நம்மோடு இரண்டறக் கலந்துவிட்டது. பல்வேறு நிறுவனங்களும் பணப்பரிவர்த்தனைக்காகச் செயலிகளைப் பயனர்களுக்கு வழங்கி வருகின்றன.

ஆப்பிள் நிறுவனமும் தன் பங்குக்கு ஆப்பிள் பே (apple pay) செயலியை 2015ல் அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்தப்பட்டு ஏறக்குறைய பத்து ஆண்டுகள் ஆகிவிட்டாலும், பல்வேறு நாடுகளில் இச்செயலி இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. ஆப்பிள் நிறுவனமும் பல்வேறு வங்கி நிர்வாகங்களுடனும் தொடர்ச்சியாக உரையாடி வருகிறது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 2024ல் ஆப்பிள் பே மற்றும் ஆப்பிள் வாலட்டின் துணைத் தலைவர் ஜெனிபர் பெய்லி அளித்த பேட்டியொன்றில், “ஆப்பிள் நிறுவனம் சிறந்த பயனர் அனுபவத்தைத் தர, மிகவும் ஆர்வமாக உழைத்துவருகிறது. ஆப்பிள் பே அறிமுகப்படுத்தப்பட்டபோது, சுமார் 3% வங்கி நிர்வாகங்கள் மட்டுமே அதனை ஏற்றுக்கொண்டன. அந்த எண்ணிக்கை இப்போது 90% ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு சந்தைகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளில் ஆப்பிள் பே-ன் பயன்பாட்டை அதிகரிக்க விரும்புகிறோம்” எனக் கூறியிருந்தார்.

ஆப்பிள் பே ஏறக்குறைய 90 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. பயன்பாட்டில் உள்ள நாடுகளில் சிலவற்றில், உள்ளூர் வங்கிகள் இச்செயலியில் தங்கள் வங்கிகளை இணைப்பதற்குத் தயக்கம் காட்டி வருகின்றன. ஆப்பிள் பே அமெரிக்காவில் பல ஆண்டுகளாகப் பயன்பாட்டிலிருந்தாலும், போர்ட்டோ ரிக்கோவில் உள்ள மக்கள், பெரிய அமெரிக்க வங்கிகளின் கணக்குகள் மூலம் மட்டுமே ஆப்பிள் பேவை அணுகும் நிலை இருந்தது. இதுவரை எந்த உள்ளூர் வங்கியும் இந்தச் சேவைக்கான ஆதரவை வழங்கவில்லை.

அமெரிக்காவின் புகழ் பெற்ற உள்ளூர் வங்கிகளுள் ஒன்றான பாங்கோ பாப்புலர் வங்கி இப்போது ஆப்பிள் பே செயலிக்குப் பச்சைக் கொடி காட்டியுள்ளது. இதன்மூலம் போர்ட்டோ ரிக்கோ பகுதியில் அதிகாரப்பூர்வமாக ஆப்பிள் பணப்பரிவர்த்தனை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இனிமேல் அம்மக்கள் ஆப்பிள் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும்.

அதோடு ஆப்பிள் பே செயலியின் “டேப் டு புரோவிஷன்” அம்சமும் ஹாங்காங், மக்காவ் மற்றும் மங்கோலியாவில் உள்ள பயனர்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன்மூலம் வாலட் பயன்பாட்டில் தேவையான கடன் அட்டைகளைச் சேர்த்துக்கொள்ள முடியும்.

ஆப்பிள் பணப்பரிவர்த்தனையைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு மதிப்புள்ள செய்தியைத்தான் கொடுத்திருக்கிறது ஆப்பிள்.

  • மு.‌இசக்கிமுத்து
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now