ஏஐ எழுதும் கடிதம்

ஜிமெயிலில் மின்னஞ்சல் எழுத உதவும் ஹெல்ப் மி ரைட் (Help Me Write) வசதியை மேலும் பல மொழிகளில் வழங்க கூகுள் திட்டமிட்டுள்ளது. இவ்வசதி தமிழுக்கும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

gmail

உலகின் அதிகமான பயனர்களைக் கொண்டு மின்னஞ்சல் உலகின் அரசனாக விளங்குகிறது ஜிமெயில். கூகுள் நிறுவனம் தன் பயனர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதை எளிமையாக்கப் பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. மின்னஞ்சல்களுக்கு தானியங்கியாக மறுமொழிகள் அனுப்பும் வசதி, எழுதும்போது வாக்கியத்தை நிறைவு செய்யப் பரிந்துரைகள் வழங்கும் வசதி என்பது உள்ளிட்ட பல வசதிகளை நாம் பயன்படுத்தி வருகிறோம். உலகளாவிய பயனர்களுக்கு இவ்வசதிகளின் மூலம் பல நன்மைகளை வழங்கி, தன் பரப்பை விரிவாக்கி வரும் கூகுள், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒரு மின்னஞ்சலை முழுவதுமாக எழுதும் ஹெல்ப் மீ ரைட் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஆரம்பகட்ட சோதனை முயற்சியாக சில பயனர்களுக்கு மட்டும் இவ்வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமாக அனைவருக்கும் கிடைக்கும் வகை செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது கூகுள்.  

நமது ஜிமெயிலில், வழக்கமாக மின்னஞ்சல் எழுதும் இடத்தில் சென்று, சுட்டியர வலதுபுறம் தட்டி ஹெல்ப் மீ ரைட் வசதியை இயக்கலாம். சிலருக்கு மின்னஞ்சல் எழுதும் பெட்டியின் கீழ்ப் பகுதியிலேயே கூட்டல் குறியுடன் பேனா அமைப்பு ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும். அதைச் சொடுக்கியும் இயக்கலாம். பின்னர் அதில் வரும் பெட்டியில், நாம் எழுத விரும்பும் பொருளின் சாரத்தை ஒரு வரியிலேயோ, சில சொற்களிலேயோ உள்ளிட வேண்டும். கொடுத்த சில நொடிகளில் மின்னல் வேகத்தில் நமக்கான மின்னஞ்சல் தயார். 

ஒருவேளை அதில் மாற்றங்கள் செய்ய விரும்பினால், கீழே காட்டப்படும் ரிவைஸ் (revise) என்பதை அழுத்தி, வேறு வடிவத்திலான இன்னொரு மின்னஞ்சலைப் பெற்றுக் கொள்ளலாம். அலுவல் மொழியில் எழுதுவது, அன்பருக்குக் கடிதம் எழுதுவது என்று இதில் பல தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. அதில் நமக்கு விருப்பமானதைச் சொடுக்கி, அந்தத்  தன்மையில் நமக்கான மின்னஞ்சலைப் பெறலாம். புதிய மின்னஞ்சல் மட்டுமின்றி, ஏற்கனவே வந்த மின்னஞ்சல்களுக்கு விரைவில் மறுமொழி எழுதவும் இவ்வசதி பயன்படுகிறது. 

கடந்த மாதம் வரை ஆங்கிலம், ஸ்பானிஷ், போர்த்துகீஸ் ஆகிய மொழிகளில் மட்டும் இவ்வசதி இருந்தது. இதைத்தான் இத்தாலியன், பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகளுக்கும் நீட்டிப்பதாக மார்ச் 24-ம் தேதி கூகுள் நிறுவனம் அறிவித்திருக்கிறது.  

இந்த அறிவிப்பு, பல மொழிகளைப் பேசும் கூகுள் பணிதள (workspace)  பயனர்களுக்கு மிகப்பெரிய உதவியாக அமையும். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிப்படையில் இந்த வசதி எதிர்காலத்தில் மேலும் பல மொழிகளை ஆதரிக்கும் வகையில் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹெல்ப் மீ ரைட் போலவே செயற்கை நுண்ணறிவு மூலம் மின்னஞ்சல் எழுதும் வசதிகள் பல இருக்கும் நிலையில், கூகுளின் அதிகாரப்பூர்வ அமைப்பு பல மொழிகளுக்கும் விரிவாக்கம் அடைவது இணைய உலகில் மிகுந்த நம்பிக்கையை உண்டாகியிருக்கிறது.

  • விவேக்பாரதி
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now