மாயத் திருத்தி

கூகுள் புகைப்படங்கள் செயலியில் உள்ள மாயத் திருத்தி (Magic Editor) அம்சத்தில் ஏற்பட்ட சேமிப்பது தொடர்பான சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

magic editor

ஆண்டிராய்டில் மிகவும் புகழ்வாய்ந்த புகைப்படத் தொகுப்பு செயலிகளில் ஒன்று கூகுள் புகைப்படங்கள். இது புகழடைய முக்கியமான காரணம் ஒன்றுள்ளது. அது பயனர்கள் தங்கள் கூகுள் கணக்கில் தேவையான புகைப்பட காப்புப்பிரதிகளைப் பதிவேற்றி வைத்துக்கொள்ள அனுமதித்ததுதான். ஒரு முறை பதிவு செய்து வைத்துக்கொண்டால் எப்போதும் அழியாது என்பது மக்களைக் கவர்ந்துவிட்டது போலும். ஆனால் அது இப்போது வரம்பிற்குள் அடங்கிப் போய்விட்டது. மக்கள் மத்தியில் கூகுள் புகைப்படங்களைக் கொண்டு சேர்க்க பல்வேறு விதமான அம்சங்கள் அறுமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்று மேஜிக் எடிட்டர் என்ற மாயத் திருத்தி.

இதனைப் பயன்படுத்துவதற்குப் பெரிய அளவிலான திருத்தும் திறன்கள் எதுவும் தேவையில்லை. ஏனெனில் இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் செயல்படும் விதமும் பெயரைப் போன்றே மாயவித்தையாகத் தான் இருக்கிறது. ஏனெனில் இதன்மூலம் வானத்தின் நிறத்தையும் மேகங்களின் வடிவத்தையும் மாற்றலாம், பொருள்களையும் மக்களையும் நகர்த்தலாம், உடலுறுப்புகளின் அளவை மாற்றலாம். புகைப்படத்தில் நீங்கள் விரும்பாதவற்றை அழிக்கலாம்.

சுருக்கமாகச் சொன்னால் உங்கள் புகைப்படங்களில் நீங்கள் நினைக்கும் எதை வேண்டுமென்றாலும் செய்யலாம். இந்த அம்சத்தைப் பயன்படுத்தும் பயனர்கள், உண்மையான படத்தையும் திருத்தப்பட்ட படத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.‌ எது உண்மையானது என்று கண்டுபிடிக்கவே முடியாது எனச் சிலாகிக்கிறார்கள். எது எப்படியோ இந்த மாயவித்தைக்கு கூகுள் ஒன் என்ற மந்திரம் தேவைப்படுகிறது. ஆம் கூகுள் ஒன் சந்தாதாரர்கள் மட்டுமே இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியும்.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக, இந்த மாயவித்தை திருத்தியில் திருத்திய படங்களைச் சேமிக்க முடியவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. பயனர்கள் சமூக வலைத்தளங்களில் இந்த பிரச்சினையை எழுப்பி வந்தனர். இப்போது இந்தக் குறைபாட்டைச் சரி செய்துவிட்டோம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது கூகுள்.

அதில் “மாயத் திருத்தியில் சேமிப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை நாங்கள் பாராட்டுகிறோம். நாங்கள் ஒரு பிழைதிருத்தத்தை உருவாக்கியுள்ளோம்.‌ இப்போது நீங்கள் உங்கள் திருத்தங்களைத் தடையின்றி சேமிக்க முடியும். மாயத் திருத்தியைச் சிறந்ததாக மாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், உங்கள் பங்களிப்புகள் அந்தச் செயல்பாட்டின் முக்கியமான பகுதியாகும்” எனக் கூறியுள்ளது.

இதன் செயல்படும் விதம் பற்றிய விளக்கமான கட்டுரை ஒன்று ஆண்டிராய்டு அத்தாட்டி தளத்தில் வெளியாகியுள்ளது. தேவைப்படுபவர்கள் அதனைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

  • மு. இசக்கிமுத்து.
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now