ஆப்பிள் விஷன் புரோ கருவிகளில் சிறப்புச் செயலி

ஆப்பிள் விஷன் புரோ கருவிகளில் பயன்படுத்தப்படும் உள்ளார்ந்த காணொளிகளைக் (Immersive Video) கையாளும் வகையிலான புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

Apple Vision Pro

உள்ளார்ந்த காணொளிகள் தனித்துவமான 360 பாகை ரக படக்கருவிகளைப் பயன்படுத்தி எடுக்கப்படுகின்றன. இது ஒரே நேரத்தில் பல திசைகளில் நடைபெறும் நிகழ்வுகளை பதிவு செய்யும் திறன் கொண்டவை. படக்கருவிக்குள்ளேயே அனைத்துக் காட்சிகளையும் ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பம் உள்ளது. இது அனைத்தையும் ஒருங்கிணைத்து உள்ளார்ந்த காணொளியைத் தந்துவிடுகிறது. இது பொதுவாக மெய்நிகர் தொழில்நுட்பத்துடன் இணைத்துப் பயன்படுத்தப்படுகிறது.

மெய்நிகர் கருவிகளைப் பயன்படுத்தி இந்த காணொளிகளைப் பார்க்கும்போது, பார்வையாளர்களுக்கு இது காட்சிக்குள் இருப்பதைப் போன்ற மாயையை உருவாக்குகிறது. உள்ளார்ந்த காணொளிகள் வழக்கமான காணொளிகளிலிருந்து மாறுபட்ட புதுவித அனுபவத்தை வழங்குகின்றன. திரையில் நடக்கும் ஒவ்வொன்றும், தங்கள் அருகிலேயே இருப்பது போன்ற தோற்றம் உருவாகிறது. இது புதிய கதை சொல்லும் வாய்ப்புகளை உருவாக்குகிறது. இதன் முப்பரிமாண விளைவே இவை அனைத்திற்கும் காரணமாக உள்ளது.

இத்தகைய காணொளிகளை கையாள்வதற்காக செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம். இந்த செயலியைப் பயன்படுத்தி உள்ளார்ந்த காணொளிகளைக் உள்ளீடு செய்து, அவற்றை பல்வேறு தொகுப்புகளாக உருவாக்க முடியும். அதோடு முக்கியமான ஒன்றாக இவற்றின் இயங்குநிலை தரவுகளை (Meta data) பார்க்கவும், திருத்தியமைக்கவும் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் காணொளிக் கோப்புகளை வரிசைப்படுத்துதல், மாற்றியமைத்தல் போன்ற பணிகளைச் செய்ய முடியும்.

இந்த செயலியின் முக்கியமான நோக்கம் ஆப்பிள் விஷன் புரோ கருவிகளை அனைவரும் பயன்படுத்துவதை எளிமையாக்குவதாகும். ஏற்கனவே விஷன் புரோவைப் பயன்படுத்த விஷன்ஓஎஸ் செயலி இருக்கும்போது இன்னொன்று எதற்கு என்ற சந்தேகம் எழும் வாய்ப்புள்ளது. விஷன்ஓஎஸ் செயலி விஷன் புரோவைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டி மட்டுமே. அதில் பயன்படுத்தப்படும் உள்ளார்ந்த காணொளிகளைக் கையாள்வதுதான், உள்ளார்ந்த காணொளி பயன்பாட்டு செயலியின் வேலை. இதனை ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட விஷன் புரோ கருவிகளோடு இணைத்துப் பயன்படுத்த முடியும்.

இந்த செயலி ஆப்பிள் மேக் கணிணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தும் மேக் கணிணி M1 ரக நுண்சில்லைக் கொண்டிருக்க வேண்டும். இந்த புதிய செயலியை மேக் ஆப் ஸ்டோரில் இலவசமாகவே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

  • மு. இசக்கிமுத்து
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now