கைரேகைக் கடவுச்சொல்

சில வங்கிச் செயலிகளில் செல்லினம் மூலம் கடவுச்சொல் அளித்து உள்நுழைய முடியவில்லை என்று ஒன்பதாண்டுகளுக்கு முன்பு ஒரு சிக்கல் எழுந்தது. இன்றைய நிலையை அறியச் செல்லினம் பயனர்கள் சிலரிடம் பேசினோம்.

SELLINAM

பணப் பரிவர்த்தனைக்குப் பெரும்பாலும் ஜிபே எனப்படும் கூகுளின் செயலியே பெரும்பாலானோர் தமிழ்நாட்டில் பயன்படுத்துகின்றனர். ஐந்து ரூபாய் என்றாலும், பணம் செலுத்த இச்செயலியே உதவுகிறது. ஐந்து ரூபாய்க்கு எதையாவது வாங்க முடியுமா என்பது தனிக்கதை. இதில் செல்லினம் விசைமுகத்தால் எந்தச் சிக்கலும் இல்லை. இச்செயலியைத் தவிர்த்துப் பார்த்தாலும் இதே வகையிலான இன்னும் பல செயலிகளைப் பயன்படுத்துவதாகவே நிறையப்பேர் தெரிவித்தனர்.

இந்தியாவில் தொலைப்பேசியில் யாரை அழைத்தாலும் இணைய மோசடி பற்றிய விழிப்புணர்வு விளம்பரங்களைக் கடந்தே பேச வேண்டும் என்கிற அளவுக்குத் தீவிர பரப்புரை நடப்பதாலோ என்னவோ பலர் தங்கள் திறன்பேசியைத் தவிர்த்து மேசைக்கணினி, மடிக்கணினியில் மட்டுமே வங்கிச் சேவைகளைப் பயன்படுத்துவோம் என்றனர்.

ஒரு சிலர் தங்கள் வங்கிச் செயலியானது, உள்ளே நுழையும்போதே வேறெந்த விசைப்பலகையையும் பயன்படுத்த இயலாதவாறு வைத்துள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக வங்கிச்செயலி காட்டும் மெய்நிகர் விசைப்பலகையைக் கொண்டு கடவுச்சொல்லைத் தட்டெழுதி உள்ளே நுழைகிறோம் என்றனர்.

மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் சிவராமன், “நான் திறன்பேசியிலும் கூட வலைஉலாவி வழியாகத்தான் வங்கிச் சேவையைப் பயன்படுத்துவேன். செல்லினம் வழியாக கடவுச்சொல்லை உள்ளிடுவதில் எந்தச் சிக்கலும் இல்லை. அரிதாகத்தான் பயன்படும் என்பதால் வங்கிச் செயலி இல்லை” என்றார். நமக்காக எச்டிஎப்சி வங்கிச் செயலியைத் தரவிறக்கி செல்லினம் வழியாகக் கடவுச்சொல்லைத் தந்து உள்நுழைய முடிகிறதா எனச் சோதித்துப் பார்த்தார். சரியாகவே வேலை செய்கிறது என்று நமக்கு வீடியோ பதிவும் அனுப்பி வைத்தார்.

ஊடகத்துறையில் பணியாற்றும் வித்யாவிடம் பேசினோம். “நான் ஐசிஐசிஐ, எஸ்பிஐ வங்கிச் செயலிகள் பயன்படுத்துகிறேன். செல்லினம் பயன்படுத்தியே கடவுச்சொல்லை உள்ளிடுகிறேன். எப்போதும் சிக்கல் வந்ததில்லை” என உறுதியாகக் கூறினார்.

தமிழ்நாடு அரசு அதிகாரியான சிவ. தினகரனிடம் கருத்து கேட்டோம். “நான் இந்தியன் வங்கியின் செயலியைப் பயன்படுத்துகிறேன். செல்லினம் விசைப்பலகையில் கடவுச்சொல்லை உள்ளிட்டே நுழைகிறேன். ஜியோமி திறன்பேசிகளைப் பயன்படுத்திய என் நண்பர்கள் சரியாக வேலை செய்யவில்லை எனச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதில் செல்லினம் செயலின் தவறேதும் இல்லை என்றும் திறன்பேசியில் அடுத்த பதிப்பில் சரியாகிவிட்டது என்றும் கேள்விப்பட்டேன்” என்றார்.

விண்டோஸ், மேக் கணினி, ஐபோன், ஆண்டிராய்டு திறன்பேசிகள் எனப் பல விதப் பயனர்களில் பேசியதில் முரசு அஞ்சல், செல்லினம் வழியாக வங்கிச் செயலியில் கடவுச்சொல்லை உள்ளிடுவதில் எந்தச் சிக்கலும் இல்லை என்றே கூறினர். ஓரிரு வங்கிச் செயலிகளில் இது சாத்தியம் இன்றியும் இருக்கலாம். வங்கிகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூன்றாம் தரப்புச் செயலியில் கடவுச்சொல்லை உள்ளிட அனுமதி மறுப்பதைக் குறைசொல்வதற்கில்லை. அவர்களே மெய்நிகர் விசைப்பலகையும் கொடுத்துவிட்டால் அதையே பயன்படுத்தலாம். இல்லையெனில் வங்கிச் சேவையைப் பயன்படுத்தும்போது மட்டும் செல்லினத்துக்குப் பதிலாக திறன்பேசியின் இயல்பு விசைமுகத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தமிழைத் தட்டெழுத உதவும் செல்லினம் செயலி, ஒரு நாளைக்குச் சில நூறு முறையேனும் பயன்படுகிறது. வங்கிச்செயலியை அப்படிச் சொல்ல இயலாது.

அதோடு, தற்போதைய வங்கிச் செயலிகள் பலவும் முகம், கைரேகையை கடவுச்சொல்லாகப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை வைத்துள்ளன. செல்லினம் வழியாகக் கடவுச்சொல் தட்டெழுத முடியாது என்பது ஓர் இடராக இருப்பதாகத் தோன்றவில்லை. நாம் கேட்டறிந்தவரையில் பயனர்களும் அதை உறுதி செய்கின்றனர். இந்தியா மட்டுமின்றி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட மற்ற பல நாடுகளில் வசிக்கும் செல்லினம் பயனர்கள் இச்சிக்கலை எதிர்கொள்கிறார்கள் எனில் எங்களுடைய உதவிப் பக்கத்துக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். நன்றி.

***

கடவுச்சொல் உள்ளீடும் தரவுகள் பாதுகாப்பும்

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now