எல்ஜி பயனர்கள் கவனத்திற்கு

திறன்பேசிகளின் தொடக்க காலத்தில், கோலோச்சியிருந்த எல்.ஜி நிறுவனம், தனது உற்பத்தியை அதிகாரப்பூர்வமாக நிறுத்திக் கொண்டது. இப்போது அதன் பயனர்கள் செய்துகொள்ள வேண்டிய முக்கியமானபணி ஒன்று மீதம் இருக்கிறது. என்ன தெரியுமா?

LG phone

உலகளாவிய திறன்பேசி சந்தையில் ஒரு காலத்தில் எல்.ஜி நிறுவனம் தனித்துவமான இடத்தைக் கொண்டிருந்தது. அதன் வெல்வெட், விங் போன்ற ரகங்கள் அதிக வரவேற்பைப் பெற்றிருந்தன. தொழில்நுட்ப தரத்திலும், வடிவமைப்பிலும் தனித்தன்மையோடு திகழ்ந்தன. சிறப்பான காட்சித்திறன், ஒலித்திறன்களோடு இருந்தன. குறிப்பாக 2010 முதல் 2015 வரையிலான காலத்தில் எல்ஜியின் ஜி மற்றும் வி ரக திறன்பேசிகள் அதிகம் விற்பனையாகின. வலுவான மென்பொருள் ஆதரவுக்கு எல்ஜி புகழ்பெற்றிருந்தது. ஆனாலும் அதன் பின் நிகழ்ந்த போட்டிகளில் தாக்குப் பிடிக்க முடியாமல் எல்ஜி திறன்பேசிகள் திணறின. 

புதுப்புது அறிமுகங்களும், அதில் கொண்டுவரப்பட்ட தொழில்நுட்ப மேம்படுத்தல்களும் எல்ஜிக்கு நெருக்கடியாக அமைந்தன. அதன் விளைவாக 2021-ம் ஆண்டு, அந்நிறுவனம் பெரும் முடிவு ஒன்றை எடுத்தது. தனது திறன்பேசிப் பிரிவை முற்றிலுமாக மூடுவதாக எல்ஜி அறிவித்தது. இனி எல்ஜி திறன்பேசிகள் உற்பத்தி ஆகாது என்ற நிலை உருவானது. குளிர்சாதனங்கள், சலவை இயந்திரம், தொலைக்காட்சி போன்ற மற்ற மின்சாதன பொருள்களின் சந்தையில் சற்றும் குறைவின்றி தன் இடத்தை வெற்றிகரமாக தக்க வைத்திருந்த எல்ஜி, திறன்பேசியில் சறுக்கியதால் இம்முடிவை எடுத்தது. ஆனால் அப்போதும் பயனர்களை முற்றிலுமாக கைவிட்டுவிடவில்லை எல்ஜி. 

திறன்பேசி உற்பத்தியை முற்றிலுமாக மூடிவிட்டாலும், பயனர்கள் நலன் கருதி தேவையான காலக்கெடுவினை வழங்கியது. அதாவது, 2019-க்கு பிறகு வெளியான முக்கியமான திறன்பேசிகளான எல்ஜி வெல்வெட், விங் மற்றும் ஜி, வி தொடர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகள் மென்பொருள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகள் வழங்கப்படும் என்று எல்ஜி அறிவித்தது. அந்த காலக்கெடு, இந்தாண்டு ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால், எல்ஜி பயனர்கள் செய்துகொள்ள வேண்டிய முக்கியப் பணிக்கான நேரம் நெருங்கிவிட்டது. 

பயனர்கள், ஜூன் 30 2025-க்குள் எல்ஜி திறன்பேசியில் தற்போது பயன்பாட்டில் உள்ள நவீன ஆண்டிராய்டு அம்சம் வரை தரவிறக்கி, உட்கட்டமைப்பை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ஜூன் 30-க்குப் பிறகு எந்தவித மேம்படுத்தலோ, பாதுகாப்பு புதுப்பிப்புகளோ வழங்கப்பட மாட்டாது. அதேபோல், கணிப்பொறியுடன் எல்ஜி திறன்பேசிகளை இணைக்கும் தனித்துவமான மென்பொருளான எல்.ஜி பிரிஜ் சேவையையும் இதே காலக்கெடுவுடன் நிறுத்திக் கொள்ள எல்ஜி திட்டமிட்டுள்ளது.  

தனித்துவமான பயனர் இடைமுகம் (User Interface) வழங்குதல் உள்ளிட பல நவீன தொழில்நுட்பங்களுக்கு முன்னோடியாக இருந்த எல்ஜி திறன்பேசி, இனி முற்றிலும் வரலாற்றின் அங்கமாகப் போகிறது.

  • விவேக்பாரதி

எல்ஜியின் மேம்படுத்தல் குறித்த உத்தரவாதம்

எல்ஜியின் அவகாசம் முடிவடைவது குறித்த செய்தி

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now