நம்மில் பெரும்பாலானோர் படங்களைச் சேமித்து வைக்க கூகுள் போட்டோஸ் பயன்படுத்துகிறோம். அதிலிருந்து யாருக்காவது குறிப்பிட்ட படங்களை அனுப்ப நேரும்போது அவற்றைத் தேடுவதற்காகவே நீண்ட நேரம் திரையைத் துழாவி அவதிப்பட்டிருப்போம். அந்தத் தொல்லை இனி இல்லை என்கிறது கூகுள். எப்படி?

காலம் கடந்து நிற்கும் நினைவுப் படங்களை முன்னர் புகைப்படத் தொகுப்புகள் சேமித்து வைத்திருந்தன. இப்போது எல்லாருக்கும் கூகுள் போட்டோஸ் செயலிதான். நம் திறன்பேசியில் கிளிக் என்று எடுக்கும் ஒளிப்படம், கண்ணிமைக்கும் நேரத்தில் கூகுள் டிரைவில் சேமிக்கப்படுகிறது. பின் எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் பார்க்க இணையத்திலேயே பத்திரமாய் இருக்கிறது. மக்கள் இதைப் பயன்படுத்தும் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருக்கும் கூகுள் நிறுவனமும் அவ்வப்போது புதிய சிறப்பம்சங்களை இதில் அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறது. ஆண்டு, மாதம், நாள் அடிப்படையில் படங்களைச் சேமித்தல், நினைவூட்டல், ஒரே நபர்களை அடையாளம் கண்டு தனியாக தொகுத்து வைத்தல், பின்னணி உட்பட படத்தில் எதையும் எளிதில் திருத்துதல் எனப் பல மேம்படுத்தல்கள் வந்துள்ளன.
கூகுள் அப்படி ஒரு சிறப்பு மேம்படுத்தலைத் தன் போட்டோ பிக்கர் அம்சத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் போட்டோஸில் இருந்து படங்களைப் பகிரும்போது குறிப்பிட்ட படத்தைத் தேர்ந்தெடுப்பது சிரமமாக இருந்தது. ஆயிரக் கணக்கில் படங்கள் இருந்தால், நீண்ட நேரம் திரையை துழாவித் துழாவிச் சென்று எடுக்க வேண்டியிருந்தது. இதை போட்டோ பிக்கரின் புதிய அம்சம் மாற்றியுள்ளது.
கூகுள் போட்டோஸ் செயலியில் பதிவேற்றப்படும் படங்களின் தன்மைகளைப் புரிந்துகொள்ளும் தொழில்நுட்பம் இதற்கு உதவி செய்கிறது. அதாவது, நாம் திறன்பேசியில் தட்டச்சு செய்யும் இடத்தில் எமோஜிகளைத் தேடும் தேடல் பட்டை இருப்பதுபோல போட்டோ பிக்கர் இடத்திலும் தேடல் பட்டை அமைக்கப்பட்டுள்ளது. அதில் “கார்” “பிறந்தநாள்” என்பது போன்ற குறிப்புச் சொற்களை நாம் உள்ளிட்டுத் தேடினால் அதற்குத் தொடர்புள்ள படங்களை போட்டோ பிக்கர் தனியே பிரித்துக் காட்டிவிடுகிறது. இப்புதிய தேடுதல் அம்சம் கூகுள் போட்டோஸ் பயன்பாட்டை மிகவும் எளிமை ஆக்கியிருக்கிறது.
இத்தேடுதல் அம்சத்தால் பயனர்கள் ஆயிரக்கணான படங்களில் குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் விரைந்து எடுத்துவிட முடியும். பயன்படுத்திக் கொண்டிருக்கும் செயலிகளை விட்டு வெளியேறாமல் படங்களை அனுப்பிவிட முடியும். கூகுளின் செயற்கை நுண்ணறிவு இந்த வேலையைத் துல்லியமாகச் செய்வதால் தனிப்பயனாக்கம் சிறந்த முறையில் நிகழ்கிறது.
தற்போது வரை கூகுள் பிளே சிஸ்டம் வழியாக கூகுள் போட்டோஸை மேம்படுத்தும் பயனர்களுக்கு மட்டுமே இவ்வம்சம் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் புதிய ஆண்டிராய்டு மேம்படுத்தலில் அனைவருக்கும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் பிக்ஸல் மற்றும் சாம்சங் கருவிகளில் சோதனை நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் புகைப்பட தொகுப்புகள், கோப்புகள் பகிரப்படுவது, சமூக ஊடகப் பயன்பாடுகள் போன்றவை எளிமையாகிறது. நேரத்தை மிச்சப்படுத்துகிறது. கூகுள் இயல்பாக தரும் 15 ஜிபி நினைவகத்தையும் கடந்து பல ஜிபிகளுக்கு புகைப்படங்களைச் சேமித்து வைத்திருக்கும் பயனர்களுக்கு, இப்புதிய அறிமுகம் மிகுந்த பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.
- விவேக்பாரதி
கூகுள் போட்டோ பிக்கரின் தேடல் குறித்த செய்தி
