மாற்றம் ஒன்றே மாறாதது என்பது மனிதர்கள் தொடங்கி உலகில் உள்ள எல்லா உயிர்கள், இயற்கை, நிறுவனங்கள், தொழில்நுட்பங்கள் என அனைத்திற்கும் கச்சிதமாக பொருந்தும். இதற்கு கூகுளும் விதிவிலக்கல்ல. தேடுப்பொறி நிறுவனமான கூகுள் அதன் அடையாளச் சின்னத்தின் சுருக்க வடிவை (Favicon) கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து புதுப்பித்துள்ளது.

ரூத் கேடரால் உருவாக்கப்பட்ட வெளிர் நீல பின்னணியுடன் வெள்ளை நிறத்தில் சிறிய ஜி என்ற எழுத்துக்கு கேடல் (Catull) என்ற செரிஃப் எழுத்துரு தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. “கடந்த காலங்களில் அழகான எழுத்துருக்களை நான் தேடிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் கேடல் எழுத்துருவின் மிக நேர்த்தியான தண்டுகள், ஏறு மற்றும் இறங்கு வரிசைகள் இருந்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் இந்த செரிஃப்களும் மிக துல்லியமாக இருந்தன. அதனால் கேடல் எழுத்துருவை கூகுள் சின்னத்துக்கு பயன்படுத்தினேன்” என்று ரூத் கேடர் கூறியுள்ளார்.
2015-ம் ஆண்டு சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீலம் ஆகிய நிறங்களின் திடமான தொகுதியுடன் ஒரு பெரிய ஜி அடையாள சின்னமாக மாற்றப்பட்டது. இது புதிய வடிவியல் சான்ஸ் – செரிஃப் எழுத்துருவால் உருவாக்கப்பட்டது. அதிலிருந்துதான் தற்போது புதிய அடையாள சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய ஜி சின்னத்தில் திடமான நிறங்கள் ஒன்றோடு ஒன்று கலந்துள்ளன. இது இன்றைய நவீனத்தையும் செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்ட எதிர்க்காலத்தையும் உணர்த்துகிறது. இந்த புதிய அடையாள சின்னம் ஆப்பிள் இயங்கு தளத்திலும் ஆண்டிராய்டு பயன்பாட்டின் முன்னோட்டப் பதிப்பிலும் கிடைக்கிறது. பிற ஆண்டிராய்டு பயன்பாடுகளில் சென்றடைய சிறிது காலம் எடுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
கூகுள் என்ற முழுமையான ஆறு எழுத்து அடையாள சின்னம் தற்போது வரை மாற்றப்படவில்லை ஆனால் கூகுள் விரைவில் தன் பிற சேவைகளிலும் மென்மையான நிற வடிவமைப்பை கொண்டுவரக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேபோல் குரோம், கூகுள் வரைப்படம் ஆகிய செயலிகளிலும் விரைவில் இந்த நான்கு நிற அடையாள சின்னம் மாற்றப்பட வாய்ப்பு உள்ளது. கூகுளின் இந்த புதிய நுணுக்கமான அடையாள சின்னத்தை முகப்புத் திரையில் பார்க்கும்போது உடனடியாக மாற்றத்தைக் கண்டுப்பிடிக்க முடியாத வகையில் உள்ளதாக விவாதங்கள் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
- சத்யா கோபாலன்
ரூத் கேடர் பற்றிய கூகுள் பதிவு
