கேரளாவை எழுப்பும் கையெழுத்து
திருவனந்தபுரத்தின் வழுதக்காட்டில் விடிகாலை 4 மணிக்கு ஊரே உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு வீட்டிலிருந்து மட்டும் விளக்கொளியும், முனுமுனுப்பின் ஒலியும் வந்தது. மார்புவரை தவழும் வெள்ளைத் தாடியுடைய பட்டத்ரி, கவிதை ஒன்றைச் சொல்லிக்கொண்டே, வெள்ளைத் தாளை வண்ண எழுத்துகளால் அலங்கரித்தார். அவர் சொன்ன கவிதையின் பொருள் உணர்த்தும் ஆழமான சிந்தனைகள், அவரது கையில் எழுத்தோவியங்களாய் வெளிப்பட்டன. எழுதி, வரைந்து, அந்தக் கவிதைக்குள்ளும் அதன் எழுத்தோவியத்திற்குள்ளும் லயித்து முடிந்தபின், நேராக நின்று அதைப் படமெடுத்து, பேஸ்புக்கில் பதிவேற்றினார். “மலையாள கலிகிராபி 5000” என்று அதற்குத் தலைப்பிட்டார். இப்படித்தான் அவர் மலையாள கலிகிராபி ஒன்றிலிருந்து ஐயாயிரம் வரை செய்திருக்கிறார். இப்போது அது ஐயாயிரத்தையும் கடந்து போய்க்கொண்டிருக்கிறது. அவர்தான் கேரள வனப்பெழுத்தின் தந்தை என அறியப்படும் நாராயண பட்டத்ரி. கேரளாவின் முதல் அதிகாரப்பூர்வ வனப்பெழுத்துக் கலைஞரும் அவரே.

கடந்த 50 ஆண்டுகளாக மலையாள இதழ்கள் பெரும்பாலானவற்றின் தலைப்புகளை எழுதியது இவர்தான். மலையாளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நாவல் அட்டைப்படங்களில் நாராயண பட்டத்ரியின் கலைக் கரங்களின் பங்கு இருக்கும்.
கரியிலக்காட்டு போள, தேசதனக்கிளி கரையறில்லா, நமக்குப் பார்க்கான் முந்திரித்தோப்புகள் போன்ற மலையாளத் திரைப்படத் தலைப்புகளையும் பட்டத்ரி எழுதிக் கொடுத்திருக்கிறார். தென்னிந்தியாவில் வனப்பெழுத்துக் கலை மேலும் புகழடைய வேண்டும் என்று தொடர்ந்து குறிப்பிட்டுவரும் பட்டத்ரி, கசடதப என்ற பெயரில் கேரளாவில் வனப்பெழுத்துக் கண்காட்சிகளை நடத்தி இளைஞர்களை ஊக்குவித்து வருகிறார். உலகளாவிய வனப்பெழுத்துக் கலைஞர்களின் மரியாதைக்குரிய தென் கொரியா ஜிக்ஜி விருது, கேரளத்தின் உயர்ந்த கெளரவமான கேரள ஸ்ரீ விருது போன்ற பலவிருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. நாள்தோறும் வனப்பெழுத்தில் தம் பயிற்சியை ஒரு தவம் போல் செய்துவரும் நாராயண பட்டத்ரியின் பேஸ்புக் பக்கத்தில் இன்றுகூட ஒரு வனப்பெழுத்து ஓவியம் பதிவிடப்பட்டிருக்கிறது. நாளையும் வரும்.
நம்பிக்கை வாசகங்களை எழுதும் கை
வனப்பெழுத்து என்னும் கலைப்பணிக்காக, இளைஞர் ஒருவர் கணினிப் பணியைத் துறந்தார். அவர் பெயர் சஞ்சனா சட்லானி. மும்பையைச் சேர்ந்த இவருடயை தி பாம்பே ரைட்டிங் கம்பெனி, இளையதலைமுறை மத்தியில் புகழ்பெற்றதாய் உள்ளது. குறிப்பாக அதன் நிறுவனரும் வனப்பெழுத்துக் கலைஞருமான சஞ்சனா, திரைக்கலைஞர் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோன்ஸ் திருமணத்திற்கான வடிவமைப்பில், தமது எழுத்தொவியங்களின் மூலம் பங்களித்ததிலிருந்து அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.

வனப்பெழுத்துக் கலையில் முழுமனத்துடன் ஈடுபட, தொழில்நுட்பத் துறை பணியை விட்டு வந்த சஞ்சனா, முழு நேரக் கலைஞராக தனித்துவமான கையெழுத்துக் கடிதங்கள் முதல் பெரும்நிறுவனங்களின் இலச்சினை வரை உருவாக்கும் பாம்பே ரைட்டிங் கம்பெனியை நடத்தி வருகிறார். அவர் கையெழுத்தில் இணையத்தில் உலவும் நம்பிக்கை வாசகங்கள் புகழ்பெற்றவை ஆகும். தேவநாகிரி வனப்பெழுத்திலும் பயின்று வரும் சஞ்சனா, இணையத்தில் வகுப்புகள் எடுத்து வருகிறார்.
- விவேக்பாரதி
நாராயண பட்டத்ரியின் பேஸ்புக் பக்கம்
சஞ்சனா சட்லானியின் இன்ஸ்டாகிராம் பக்கம்
