குழந்தைகளுக்கான குறும்பு எழுத்துருக்கள்

குழந்தைகளைக் கையில் புத்தகம் எடுத்துப் படிக்க வைப்பது  இந்த காலத்தில்  கடினமான விஷயமாகிவிட்டது. இருந்தும் அவர்களைப் படிப்பதற்கு ஈர்க்க வேண்டும், தமிழ் எழுத்து பயிற்சி பெற வேண்டும், வருங்காலத்தில் அவர்களும் எழுத்துருவியல் மீது ஆர்வம் கொண்டு புதிய எழுத்துருக்களை உருவாக்க வேண்டும் என்ற ஆசைகளுடன் குழந்தைகளுக்கான சில புதிய எழுத்துருக்களை உருவாக்கியுள்ளார் முரசு அஞ்சல், செல்லினம் நிறுவனர் முத்து நெடுமாறன். 

குழந்தைகளுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் எழுத்துருக்களை உருவாக்க வேண்டும் என நீண்ட நாளாக மலேசியத் தமிழ் ஆசிரியர்கள் முத்து நெடுமாறனைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருந்துள்ளனர். இதற்காக அவர் யோசித்தபோது முன்னர் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே கோட்டில் உருவான ஓர் எழுத்துருவைச் செய்து வைத்திருந்தது அவருக்கு ஞாபகம் வந்துள்ளது. உடனே அதில் புள்ளிகள் வரும் படி பைத்தான் நிரலாக்கம் செய்துள்ளார். முடிவுகள் மிக அருமையாக வந்ததும் அவர் அதை நகலெடுத்து சோதனையும் செய்துள்ளார்.

அஞ்சல் புள்ளிகள்

பின்பு புள்ளிகள் எவ்வளவு நெருக்கமாக இருக்க வேண்டும், அவை எந்த கனத்துடன் இருந்தால் குழந்தைகளுக்கு எளிமையாக இருக்கும் என்ற குழப்பம் வரவே, அஞ்சல் புள்ளிகளின் அடர்த்தியில் 5 கனமும் புள்ளிகளின் தூரத்தில் 5  கனமும் என இதில் மட்டும் 10 எழுத்துருக்களை உருவாக்கியுள்ளார். இனி ஆசிரியர்கள், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் எழுத்துருக்களை மாற்றி அவர்களுக்குப் பயிற்சி அளிக்கலாம். மேலும் குறிப்பாக இதைச் சந்தா இல்லாமல் கொடுத்திருப்பது பெரும் சிறப்பு.  இத்தகவலை மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் நடைபெற்ற முரசு அஞ்சல் வெளியீட்டு நிகழ்ச்சி விளக்கக்காட்சியின் போது தெரிவித்தார்.

ஆம்பல்

 

எழுத்துருக்களில் குறும்புத் தனத்தைப் புகுத்தினால் குழந்தைகளை ஈர்க்கலாம் என்ற உளவியலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் ஆம்பல். இதற்காகத் தமிழ் எழுத்துருக்களில் சில புதிய மாற்றங்களைச் செய்துள்ளார் முத்து நெடுமாறன். முதன்மை எழுத்துகளில் அதிக தடிமன், முடிச்சுகளாக மாற்றப்பட்ட சுழிகள், அருவிபோல் கொட்டும் கொக்கிகள் என எழுத்துருக்களில் விளையாடியுள்ளார்.  மேலும் சுவையைக் கூட்ட ஒரே எழுத்து அடுத்தடுத்து வரும் போது அவை வெவ்வேறு வடிவங்களில் தெரியும்படியும், எழுத்துகள் ஒரே சீராக இல்லாமல் ஏற்ற இறக்கமாகத் தெரிவது போலும் அதே நேரம் எழுத்துகளுக்கு இடையில் உள்ள அடிப்படை மாறாமல் உருவாக்கியதாகவும் விளக்கினார்.

கனிமணி

இது தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட எழுத்துரு, குழந்தைகள் பார்க்கும்போது எந்த இடத்திலும் கூர்மையான முனைகள் இருக்கக்கூடாது என்று பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்டுள்ளது. மிட்டாய் போன்று இனிமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்துடன் ஒப்பிடுகையில் தமிழில் இழுப்புகள் அதிகம் அதனால், தடித்த எழுத்துகளை உருவாக்கும்போது அவை ஒன்றுடன் ஒன்று மோதும் வாய்ப்புள்ளது.  அதைத் தவிர்க்க இதில் இழுப்புகளில் மட்டும் தடிமனைக் குறைத்துக் கூட்டி கனிமணி மெருகேற்றப்பட்டுள்ளது. இது தலைப்புகள், ஆவணங்கள், காணொளிகளில் பயன்படுத்துவதற்குச் சிறப்பான எழுத்துருவாக இருக்கும் என்று பரிந்துரைக்கிறார் முத்து நெடுமாறன். 

குழந்தைகளை மனத்தில் வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த எழுத்துருக்கள்  முரசு அஞ்சல் புதிய பதிப்பில் கிடைக்கின்றன. வெளியீடு நிகழ்ச்சி ஜூலை 12-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.  அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வோருக்குப் பரிசுகளும் உண்டு.

  • சத்யா கோபாலன்

பதிவு செய்யும் இணைப்பு

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now