குறுஞ்செய்திகளை திருத்தலாம்

ஒரே வகை இயங்குதளங்களுக்கு இடையே மட்டுமே இருந்த குறுஞ்செய்திகளைத்  திருத்தும் அம்சம், இப்போது வெவ்வேறு இயங்குதளங்களுக்கு இடையிலும் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது.

ஆண்டிராய்டு, ஐஓஎஸ் கருவிகளுக்கு இடையே குறுஞ்செய்திகளை அனுப்புவது என்பது மிகவும் கடினமான வேலையாக இருந்தது. ஆனால் உயர் தொடர்பு சேவைகள் (RCS) எனப்படும் புதிய தொழில்நுட்பம் வந்த பிறகு இந்த நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இந்த புதிய செய்தியிடல் தொழில்நுட்பம்  ஐஓஎஸ், ஆண்டிராய்டு  இடையே  பாலமாகச் செயல்பட்டு, தகவல்தொடர்பை மேம்படுத்தியிருக்கிறது.

ஆர்சிஎ​ஸ் தொழில்நுட்பம் பல்வேறு முன்னேற்றங்களைச் சாத்தியமாக்கியிருக்கிறது. அதிக தெளிவுடைய புகைப்படங்களையும் காணொளிகளையும் அனுப்புவது, அனுப்பிய குறுஞ்செய்தி படிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் அம்சம், மறுமுனையில் செய்தி தட்டச்சு செய்து கொண்டிருக்கிறார்களா என்பதை உணர்த்தும் அம்சம் என பல்வேறு அம்சங்களை ஆர்சிஎ​ஸ் தொ​ழில்நுட்பம் தந்திருக்கிறது. எனினும் அனுப்பப்பட்ட குறு​​ஞ்செய்திகளை திருத்தும் அம்சம் மட்டும் கிடைக்காதது பயனர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது.

அதன்பிறகு ஐஓஎஸ் பயனர்கள் மற்றொரு ஐஓஎஸ் திறன்பேசிக்கு அனுப்பிய குறு​ஞ்செய்தியை திருத்தும் வசதியைப் பெற்றனர். கடந்த வருடத்திலிருந்து ஆண்டிராய்டு ‌ பயனர்களும் மற்றொரு ஆண்டிராய்டு  திறன்பேசிக்கு அனுப்பிய குறு​ஞ்செய்தியை திருத்து​ம் வசதியைப் பெற்றனர். ஆக ஒரே இயங்குதளங்களுக்கு இடையே குறு​ஞ்செ​ய்திகளை திருத்தும் அம்சத்தை அனைவரும் பெற்றுவிட்டனர்.

ஆனால் வேறு வேறு இயங்குதளங்களுக்கு இடையே இந்த அம்சத்தைப் பயன்படுத்துவது  ஐஓஎஸ், ஆண்டிராய்டு என இருவருக்கும் எட்டாக் கனியாகவே இருந்தது. இப்போது அந்தக் கனி ஒருவருக்கு மட்டும் எட்டும் நிலைக்கு வந்திருக்கிறது. ஆம் ஜிஎஸ்எம் கூட்டமைப்பு அறிமுகப்படுத்திய யுனிவர்சல்  புரொபைல் 3.0 தரநிலையின் மூலம் இது சாத்தியமாகியிருக்கிறது. முன்பே கூறியது போல, ஒருபுறம் உள்ள பயனர்கள் மட்டுமே இந்த அம்சத்தைப் பெற்றிருக்கின்றனர். 

ஆண்டிராய்டிலிருந்து ஐஓஎஸ்க்கு குறுஞ்செய்திகளை அனுப்புபவர்கள் குறுஞ்செய்திகளை திருத்த முடிந்திருக்கிறது. செய்தியை அழுத்திப் பிடித்தால் தோன்றும் திருத்து பக்கத்தின் மூலம் செய்திகளைத் திருத்திக்கொள்ளலாம். செய்தியை அனுப்பிய முதல் 15 நிமிடத்திற்குள் மட்டுமே திருத்திக்கொள்ள முடியும். திருத்தப்பட்ட குறுஞ்செய்தி ஐஓஎஸ் திறன்பேசிகளில்  உடுக்குறியுடன் தோன்றும்.ஆனால் ஐஓஎஸ் இயங்குதளத்திலிருந்து ஆண்டிராய்டிற்கு செய்தி அனுப்பும் பயனர்கள் இந்த அம்சத்தைப் பெறவில்லை. ஆப்பிள் அதற்கேற்ற புதிய பதிப்பை கொண்டுவந்தால் மட்டுமே, அதன் பயனர்களும் பயன்படுத்த முடியும்.

கூகுள் குறுஞ்செய்தி செயலி பயனர்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. வெகு விரைவில் அனைவரின் திறன்பேசிகளிலும் இந்த அம்சத்தை எதிர்பார்க்கலாம். 

  • மு. இசக்கிமுத்து
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now