ஆண்டிராய்டு 16

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்​தியில் ஆண்டிராய்டு 16 இயங்குதளம் வெளியாகியிருக்கிறது. ஒவ்வொரு முறையும் புதிய இயங்குதளங்களை வசந்தகாலத்தில் வெளியிடும் கூகுள், இம்முறை கடந்த ஜூன் 10 அன்று வெளியிட்டிருக்கிறது. இது வெறும் மென்பொருள் புதுப்பிப்பு மட்டுமல்ல, மாறிவரும் தொழில்நுட்ப உலகிற்கு கூகுளின் தொலைநோக்கு பதிலாகும். தனியுரிமை, பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, பயனர் இடைமுகம் ஆகியவற்றில் முக்கியமாக கவனம் செலுத்தியிருக்கிறது. இந்த புதிய இயங்குதளம், அன்றாடம் ப​யன்படுத்தக்கூடிய முன்னணி செயலிகளில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

முதல் ஒன்றாகக் கூகுள் படங்கள் செயலியில், செயற்​கை நுண்ணறிவு தானாகவே திருத்தங்களை பரிந்துரைக்கிறது. உதாரணமாக நீங்கள் கடற்கரைப் புகைப்படத்தைத் தொட்டால், பின்னணியில் உள்ள சுற்றுலாப் பயணிகளை அழிக்க வேண்டுமா எனச் செயற்கை நுண்ணறிவு உங்களிடம் பரிந்துரைக்கும். இந்த வகையான பரிந்துரைகள் இணைய இணைப்பு இல்லாமலேயே ​தோன்றும். இதைப் போலவே சிறிய அம்சங்களிலும் செயற்கை நுண்ணறிவை புகுத்தி அழகு பார்த்திருக்கிறது கூகுள்.

கூகுள் வரைபடங்கள் செயலியில் நிகழ் நேர மாற்றங்களைக் கொண்டுவருவதுதான் அடுத்த அம்சம். முன்பெல்லாம் வரைபடத்தைப் பயன்படுத்தும்போது, வேறு செய​லிகளைப் பயன்படுத்தினால் வரைபடத்தில் நிகழ் நேர மாற்றங்கள் புதுப்பிக்கப்பட்டன. இப்போது பூட்டுத்திரையிலிருந்தாலும் மாற்றங்களைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பதுதான் புதிய அம்சம். இந்த நிகழ் நேர மாற்றங்கள் வழிகாட்டுதலோடு நின்றுவிடுவதில்லை. மாறாக ஓர் உணவு விநியோகம் செய்யும் பயன்பாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உணவைப் பதிவு செய்துவிட்டால், பூட்டுத்திரையில் வரக்கூடிய அறிவிப்பில் உங்கள் பதிவு உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது ​அல்லது 5 நிமிடங்களுக்குள் உங்கள் உணவு வழங்கப்படும் என்பது தொடர்பான அறிவிப்பு வழங்கப்படும்.

நாம் ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததைப் போலவே மெட்டீரியல் டிசைன் 3 எக்ஸ்பிரசிவ் ​மூலம் பயனர் இடைமுக வடிவங்களில் மாற்றங்களை​க் கொண்டுவந்திருக்கிறது கூகுள். இது வடிவங்களின் நிறம், வடிவம், அளவு, இயக்கம் போன்றவற்றில் மாற்றங்களை செய்துள்ளது. மின்கலம் வடி​வம் மாற்றம் தொடர்பான கட்டுரை ஏற்கெனவே செல்லினத்தில் வெளியாகியிருக்கிறது. சொன்னபடி அதுவும் மாறியுள்ளது. இந்த மாற்றம் வாட்சாப் செயலியின் பச்சை வண்ண​ பெயரி​லும் மாற்றத்​​தைக் கொண்டு வருகிறது. இனிமேல் அறிவிப்புகளில், திறன்பேசி​யின் இயல்பு கருப்பொருளுக்கு ஏற்றார்போல் நிறம் மாறுபடும்.

இதுபோலவே அறிவிப்பு கூல்டவுன் என்ற இன்னொரு அம்சமும் கிடைத்துள்ளது. அதன்படி தொடர்ச்சியாக ஒரு செயலியிலிருந்து அறிவிப்பு வரும்போது, ஒவ்வொரு அறிவிப்புக்குப் பிறகும் ஒலியளவு கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். பழைய அறிவிப்புகள் உங்கள் கண்ணில்படுவதையு​ம் இந்த அம்சம் குறைக்கிறது. அடுத்த அம்சம் பூட்டுத் திரையில் மீண்டும் நிரல் பலகையை (widget) அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள். மீண்டுமா என்ற சந்தேகம் பலருக்கு எழும் வாய்ப்புள்ளது. ஆம் இந்த அம்சம் ஆண்டிராய்டு 4.2 வில் பயன்பாட்டில் இருந்தது. அதன்பிறகு நீக்கப்பட்ட அம்சம், கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக அறிமு​கப்படுத்தப்படவில்லை.

​ஸ்பாட்டிஃபை செயலி இந்த புதிய அம்சத்தை அதற்கேற்றாற்போல் பயன்படுத்தியிருக்கிறது. பாடல் தொகுப்பு, பாடல்களை மாற்றுவது, மீண்டும் பாடுவது போன்றவற்றுக்கான நிரல் பலகையைக் கொடுத்துள்ளது. முக்கியமான நேரங்களில் கவனச்சிதறல்களை தவிர்ப்பதற்காக, தேவையான நேரங்களில் மட்டும் இத்தகைய நிரல்பலகை தோன்றும் வகையில் அமைத்து கொள்ள முடி​யும்.

ஆண்டிராய்டு 16, அன்றாட பயன்பாட்டு அனுபவத்தை மாற்றியமைக்கும் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளைக் கொண்டுவந்திருக்கிறது. இது போன்ற பிற அம்சங்களைப் பற்றிய கட்டுரை ஒன்று ஆண்டிராய்டு போலீ​​​ஸ் தளத்தில் வெளியாகியிருக்கிறது. இணைப்பு கீழே உள்ளது.

  • மு. இசக்கிமுத்து

உருமாறும் மின்கலம்

திறக்காத ஆண்டிராய்டு பூட்டு

ஆண்டிராய்டு போ​​லீ​ஸ் கட்டுரை

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now