கூகுள் காலவரிசை

கூகுள் வரைபட காலவரிசை என்பது உங்கள் பயணங்களைத் தானாகவே பதிவு செய்து வைக்கிறது. இந்த சேவையின் மூலம் நீங்கள் கடந்த காலங்களில் எங்கெல்லாம் சென்றிருந்தீர்கள் என்பதை எளிதாக நினைவுபடுத்திக் கொள்ள முடியும்.

இது நீங்கள் சென்ற இடங்களையும், பயணம் செய்த பாதைகளையும் தானாகவே சேமித்து வைக்கிறது. உங்கள் கூகுள் கணக்கில் உள்நுழைந்திருக்கும் எல்லா கருவிகளிலும் இந்த தகவல்கள் சேமிக்கப்படுகின்றன. உங்கள் தரவு முழுவதும் உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் இதன் சிறப்பம்சம். விரும்பும் நேரத்தில் காலவரிசை தரவுகளைத் திருத்தலாம் அல்லது முற்றிலும் நீக்கலாம். இது பயனர்களுக்கு முழு சுதந்திரத்தை வழங்குகிறது.

கூகுள் முழு சுதந்திரத்தைத் தந்துவிட்டதுதான் ஒரு சிக்கலாகவும் இருக்கிறது. ஒரு விதத்தி​ல் உங்கள் தகவல்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் உங்களிடம்தான் இருக்கிறது. எந்த தரவுகளும் கூகுளின் சேவை வழங்ககங்களில் சேமிக்கப்படுவதில்லை, மாறாக உங்கள் கருவிகளில் மட்டுமே சேமிக்கப்படுகிறது. அதனால் காப்புப்பிரதி செய்துவைத்துக்கொண்டால் மட்டுமே அவற்றைப் பாதுகாக்க முடியும், இல்லையேல் அவற்றை இழக்க நேரிடும். கூகுள் புகைப்படங்கள் செயலியில் உள்ள புகைப்படங்களை காப்புப்பிரதி செய்துவைக்க அடிக்கடி நினைவுபடுத்தும்.

ஆனால் கூகுள் வரைபட காலவரிசையை காப்புபிரதி செய்ய உங்களை நினைவுபடுத்துவதில்லை. இதனை நீங்களே செய்துகொள்ளவேண்டிய நி​லை இருக்கிறது. அதற்குக் கூகுள் வரைபட செயலியைத் திறந்து திரையின் மேல் வலது பக்கத்தில் உள்ள சுயவிவரப் படத்தை அழுத்தவும். அதில் உங்கள் காலவரிசை என்ற பக்கத்தை அழுத்தவும். அதன்பிறகு திரையின் மேல் வலது பக்கத்தில் உள்ள காப்புபிரதிக்கான மேக குறியீட்டை அழுத்தவும். அதில் உள்ள காப்புப்பிரதி என்பதைச் சொடுக்கி இயக்கவும்.

நீங்கள் பல கருவிகளைப் பயன்படுத்தினால், ஒவ்வொரு கருவியிலும் காலவரிசை காப்புப்பிரதியை இயக்க வேண்டும். புதிய கருவியை இயக்கும் முன்பாக பழைய கருவியில் காப்புப்பிரதி செய்யவில்லை எனில் தரவுகள் காணாமல் போய்விடும். அதனால் ஒவ்வொரு முறையையும் காப்புப்பிரதி செய்வது அவசியம். ​

கூகுள் காலவரிசைக்கு மாற்றாக ​ஜிபிஎஸ் டிராக்கர் (GPS Tracker), டவாரிச் (Dawarich) போன்ற கருவிகள் உள்ளன. இந்த கருவிகள் சிறந்த காலவரிசை தரவுகளுக்கான சேவையை வழங்குகின்றன. ஆனால் அவற்றை இயக்குவதற்கு கொஞ்சம் அதிகமான முயற்சிகள் தேவை. ​மூன்றாம் தரப்பு கருவிகளைப் பயன்படுத்த விரும்பாதவர்கள் கூகுளின் காலவரிசையையே கூட கவனமாக காப்புப்பிரதியுடன் எளிதாக பயன்படுத்தலாம்.

  • மு. இசக்கிமுத்து

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now