திறன்பேசி நலம்வாழ!

தொழில்நுட்ப உலகில் நமது அன்றாடத்தின் அங்கமான திறன்பேசியின் நலம் பேணுவது முக்கியமான ஒன்று. பழையதைக் கழித்து புதியதைப் பெற்று, நம்மை நாம் மேம்படுத்திக் கொள்ளுவதும் இன்றியமையாதது. ஆனால், ஆண்டுக்கொரு புதிய திறன்பேசியை வாங்க வேண்டுமா? ஒரு திறன்பேசியை எத்தனை ஆண்டுகள் வைத்துக் கொள்ளலாம்? நம் திறன்பேசியை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதை எப்படித் தெரிந்து கொள்வது? போன்ற பல கேள்விகள் எழலாம். அதைக் அறிந்துகொள்ள இணையதளத்தில் பல அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

திறன்பேசி வெப்பமாதல் – தொடர்ச்சியாகப் பயன்படுத்தாமலேயே திறன்பேசி சூடானால், உள்ளிருக்கும் வன்பொருள்களின் ஆற்றல் குறைந்து வருகிறது என்று பொருள். இதுவே திறன்பேசிகளை மாற்ற வேண்டிய முதல் அறிகுறியாகக் கூறப்படுகிறது.

செயல்திறன் வேகமின்மை – ஏதேனும் செயலியைத் திறக்க அதிக நேரம் எடுத்தல், திரையைத் தொடும் இடங்களில் செயல்பட தாமதம் ஆகுதல் முதலியவை மென்பொருளின் செயல்திறன் வேகமின்மையைக் குறிக்கிறது. இதற்கு வெப்பத் தூண்டுதலே (Thermal throttling) காரணம் என்று கூறப்படுகிறது. 

தன்னிச்சை மீள்தொடக்கம் – பயன்பாட்டுக்கு இடையில் திறன்பேசி நின்றுபோய், தன்னிச்சையாக மீள்தொடக்கம் ஆவது, மென்பொருளுக்கும் வன்பொருளுக்கும் இடையில் இணக்கமற்ற தன்மை என்று கூறப்படுகிறது. இதனால் மின்கல நலன் பாதிக்கப்படுவது மட்டுமன்றி பயன்பாடும் தடைபடுகிறது.

திடீர் மின்கல பாதிப்பு – திறன்பேசியின் மின்கல நலம் திடீரென்று குறையத் தொடங்குவது, மின்கலத்திற்கு ஆற்றலூட்டினால் முழுமை அடைய அதிக நேரம் எடுத்துக் கொள்வது ஆகியவை, மின்கலம் பழுதாகிவிட்டதைக் குறிக்கிறது. இதுவும் பழைய திறன்பேசியை மாற்ற வேண்டிய முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. 

படக்கருவியின் மந்த நிலை – திறன்பேசியின் பின்னும் முன்னும் உள்ள படக்கருவியை நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். அதில் படமெடுக்கும்போது சில நேரங்களில் திறன்பேசி முற்றிலுமாக செயலிழந்து நின்றுபோய், பின் இயங்கும். இந்த மந்த நிலையும் கைப்பேசியை மாற்ற வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. 

மென்பொருள் புதுப்பிப்பின்மை – ஆண்டிராய்டு திறன்பேசிகளில் அடிக்கடி மென்பொருள் புதுப்பிப்புகள் நடக்கும். அவை திறன்பேசிகளில் உள்ள செயலிகளின் செயல்திறனை அகிகப்படுத்தும். அப்படியான மேம்படுத்தல்கள் காட்டவில்லை என்றாலும் திறன்பேசியின் மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் இருப்பதை அறிந்து கொண்டு, பழையதை மாற்றிக் கொள்ளலாம்.

இன்னும், புதிய அருகலைக்குள் இணைய  முடியாமல் போவது, மற்ற கருவிகளுடனான புளூடூத், திரைப் பகிர்வு உள்ளிட்ட அம்சங்கள் முறையாக செயலாற்றாமல் இருப்பது போன்ற பல அறிகுறிகளும் திறன்பேசிகளை மாற்ற வேண்டிய அவசியத்தைக் காட்டுகின்றன. மேலும் திரை முறிவுகள், மின்கல செயலிழப்பு போன்ற சிக்கல்களுக்கு பழுது பார்க்கும் செலவு அதிகமாவதற்குப் பதிலாக புதிய திறன்பேசியை வாங்கிவிடலாம் என்பது பொதுப் பரிந்துரையாக இருக்கிறது. 

உதவிகரமாக இருக்க வேண்டிய திறன்பேசி, அதிக தொந்தரவுகளைத் தரும்போது அதுவே மாற்றத்துக்கான நேரம் என்பதை உணரலாம். அவற்றால் பயன்பாட்டுச் சிக்கல்கள் மட்டுமன்றி பாதுகாப்பின்மையும் வசதிக் குறைபாடும் ஏற்படுகிறது என்பதே தொழில்நுட்ப ஆர்வலர்களின் கருத்து.

  • விவேக்பாரதி

ஆண்டிராய்டு அத்தாரிட்டி கூறும் 9 அறிகுறிகள்

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now