சிறந்த மின்னணு ஓவிய செயலிகள்

மின்னணு ஓவிய செயலிகள் டிஜிட்டல் உலகில் கலைக்கான வாயிலாகத் திகழ்கின்றன. விரல் தொடுதல் அல்லது மின்னணு எழுதுகோல் (stylus pen) மூலம் எளிதாக வரைந்து, ஓவியம், வடிவமைப்புகளை உருவாக்க முடிகிறது. தொழில்முறை கலைஞர்கள், மாணவர்கள், பொழுதுபோக்குக் கலைஞர்கள் என அனைவருக்கும் தங்களின் சிந்தனையை படிமமாக மாற்றி, அதை எங்கு வேண்டுமானாலும் சேமித்து பகிரும் தன்மையை இது வழங்குகிறது. ஆண்டிராய்டு, ஐஓஎஸ் தளங்களில் உள்ள இலவச, கட்டண தொழில்முறை  செயலிகள்  மூலம், கலை அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கக்கூடியதாக மாறியுள்ளது. ஒவ்வொரு செயலியும் குறிப்பிட்ட வகை கலைஞர்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன.

புரோகிரியேட்:

பெரும் தூரிகை நூலகங்களுடன் ஆப்பிள் பென்சில் உடன் இணைந்து செயல்படுவதற்காக உருவாக்கப்பட்டது ‘புரோகிரியேட்’. ஐபேட் கருவிக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட இந்த செயலி அசைவுப்பட அம்சங்களையும் வழங்குகிறது. இது தொழில்முறை கலைஞர்களுக்கும் வடிவமைப்பாளர்களுக்கும் உகந்ததாக கருதப்படுகிறது. மற்ற தொழில்முறை செயலிகளைப் போல அல்லாமல், புரோகிரியேட் சந்தா கட்டணத்தை கட்டாயமாக்கவில்லை. ஒருமுறை வாங்கினால் என்றும் பயன்படுத்தக்கூடிய செயலியாகும்.

ஸ்கெட்ச்புக்:

ஆட்டோடெஸ்க் உருவாக்கிய டிஜிட்டல் வரைவுச் செயலி ‘ஸ்கெட்ச்புக்’ 2009ல் மேசை கணினிக்காக உருவானது; 2010ல் தொடுதிரை கைப்பேசிகள், டேப்லெட்டுகளுக்கு வந்தது. இயல்பான பென்சில், மை, தூரிகை உணர்வை வழங்கும் வகையில் அழுத்த உணர்திறனை பயன்படுத்துகிறது. லேயர்கள், காட்சி கோண வழிகாட்டிகள், போட்டோஷாப் கோப்பு ஆதரவு போன்ற தொழில்முறை அம்சங்களுடன் வளர்ந்து, 2018 முதல் இலவசமாகக் கிடைக்கிறது. பாரம்பரிய கலை அனுபவத்தை கணினியில் கொண்டு வர வடிவமைக்கப்பட்ட இது, இன்று பல தளங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. எளிமையான இடைமுகம், லேயர் ஆதரவு, சமச்சீர்மை, கண்ணோட்ட வரைபடங்களுக்கான வழிகாட்டிகள் போன்ற அம்சங்கள் கொண்ட ஸ்கெட்ச்புக் ஆண்டிராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் போன்ற பல்வேறு தளங்களில் கிடைக்கிறது

கான்சப்ட்ஸ்:

வெக்டர் அடிப்படையிலான வரைபடங்களை உருவாக்கும் செயலி, ‘கான்சப்ட்ஸ்’. முடிவில்லா கேன்வாஸ், தனிப்பயனாக்கப்பட்ட பின்புலங்கள், நவீன இடைமுகத்துடன் இது வடிவமைப்பாளர்கள், கட்டடக் கலைஞர்கள் தங்களின் சிந்தனைகளை துல்லியமாக காட்சிப்படுத்த பயன்படுகிறது. அதே சமயம், அடோப் ஃப்ரெஸ்கோ (Adobe Fresco) இயல்பான நீர்வண்ணம், எண்ணெய் வண்ண விளைவுகளை உருவாக்கும் திறன் கொண்டது. அடோப் க்ரியேட்டிவ் கிளவுட் (Adobe Creative Cloud) உடன் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதால், இயல்பான ஓவிய அனுபவத்தையும் தொழில்முறை வேலைப்பாடுகளையும் விரும்பும் கலைஞர்களுக்கு இது ஏற்றது.

மைக்ரோசாஃப்ட் ஒன்நோட்:

பேனா, ஹைலைட்டர், அழிப்பான் ஆகிய மூன்று கருவிகளை  மட்டுமே கொண்ட  ‘மைக்ரோசாஃப்ட் ஒன்நோட்’ மிகவும் எளிமையான அடிப்படை வரைவு செயலி என்று கூறலாம். இருப்பினும், பேனாவின் நிறம் மற்றும் தடிமனை தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளும் வசதி இருப்பது குறிப்பிடத்தக்கது. கான்சப்ட்ஸ், ஸ்கெட்ச்புக் போன்ற பல்வேறு விருப்பத்தேர்வுகள் கொண்ட செயலிகளுடன் ஒப்பிடும்போது அம்சங்கள் குறைவாகத் தோன்றினாலும், குறிப்புகளை பல்வேறு கருவிகளுடன் எளிதில் ஒத்திசைக்கக் கூடிய திறன் இதனை முன்னிலைப்படுத்துகிறது.

பல்வேறு இயங்குதளங்களில் வேலை செய்யும் பயனர்களுக்கு இந்த அம்சம் மிகுந்த உதவியாக இருக்கிறது. மைக்ரோசாப்ட் 365 செயலிகளுக்கு மாறாக, ஒன்நோட் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆண்டிராய்டு கருவிகளிலிருந்து நேரடியாக பிடிஎப் ஆக பகிர்வதும், கணினி மூலம் பகிரக்கூடிய இணைப்பை உருவாக்குவதும் எளிதானது. இத்தகைய அம்சங்களின் காரணமாக, ஒன்நோட் ஓர் எளிய வரைவு செயலியாக மட்டுமல்லாமல், சிறந்த இலவச வைட்போர்டிங் செயலியாகவும் திகழ்கிறது.

இன்ஃபினிட் பெயிண்டர்:

இன்ஃபினிட் பெயிண்டர் (Infinite Painter) எளிமையான இடைமுகத்துடன் 160-க்கும் மேற்பட்ட தூரிகை வசதிகளை வழங்குகிறது. இது புரோகிரியேட் போன்ற ஓவிய அனுபவத்தையும் எளிமையான வேலைப்பாடுகளையும் இணைக்கும் செயலியாகும். அதேசமயம், மெடிபாங்க் பெயின்ட் (MediBang Paint) மங்கா மற்றும் காமிக் உருவாக்கத்துக்கு ஏற்றதாக உள்ளது. இலவசமாகக் கிடைக்கும் இந்த செயலி கிளவுட் சிங்க் வசதி, குழு ஒருங்கிணைப்பை வழங்குவதால் கூட்டுப் பணிக்குப் பொருத்தமானது.

மின்னணு வரைபடச் செயலிகள் இன்று கலை உலகை புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்றுள்ளன. வழக்கமான காகிதம், பென்சில், தூரிகை போன்ற அனுபவங்களை மின்னணு வடிவில் வழங்குவதோடு, லேயர்கள், கலர் பிளெண்டிங், அனிமேஷன், கிளவுட் ஒத்திசைவு போன்ற வசதிகளால் கலைஞர்களின் படைப்பாற்றலை அதிகரிக்கின்றன. சரியான செயலியைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால், டிஜிட்டல் கலை அனுபவம் மேலும் ஆழமாகவும் பயனுள்ளதாகவும் மாறும்.

  • நவீனா
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now