திறன்பேசிப் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது எப்படி?

அதிகத் திறன்பேசி பயன்பாடு காரணமாக திட்டமிட்ட வேலைகளை தவறவிட்டதுண்டா? திறன்பேசி இல்லாமல் இருந்தால் பதற்றமா? சமூக வலைத்தளங்களை அடிக்கடி பார்ப்பீர்களா? “திறன்பேசி அதிகம் பயன்படுத்துகிறீர்கள்” என்று யாராவது சொன்னதுண்டா? திறன்பேசி எவ்வளவு நேரமாகப் பயன்படுத்தி வருகிறீர்கள் என்பதை நீங்கள் மறந்துவிடுகிறீர்களா?

மேற்கண்ட வினாக்களுக்கு உங்கள் விடை “ஆம்” என்றால் நீங்கள் உங்களுடைய திறன்பேசிக்கு அடிமை என்று பொருள் என்று கூறுகிறது தென் கொரியாவில் உருவாக்கப்பட்ட திறன்பேசி அடிமைத்தனத்தை மதிப்பிடும் அளவுகோல்.

இன்றைய தொழில் நுட்ப உலகில் மனிதனின் ஆறாம் விரலைப் போல மாறி உள்ளன திறன்பேசிகள். வேலை, படிப்பு, தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு என அனைத்திற்கும் நாம் அதனை நம்புகிறோம். ஆனால் அதிகப்படியான, கட்டுப்பாடற்ற பயன்பாடு, உடல், மனநலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தி, திறன்பேசி அடிமைத்தனத்திற்கு வழிகோலுகிறது. இதை வெல்ல சில பழக்க மாற்றங்கள், யுக்திகள் உதவும்.

முதலில், திறன்பேசியைப் பயன்படுத்தும் நேரத்தை வரையறுப்பது முக்கியம். திறன்பேசியில் உள்ள திரை நேரம் (Screen Time) அல்லது டிஜிட்டல் வெல்பீயிங் (Digital Wellbeing) அம்சங்களைப் பயன்படுத்தி அன்றாடப் பயன்பாட்டு வரம்பை அமைக்கலாம். அதேபோல், பேஸ்புக், மின்னஞ்சல், டிக்டாக் போன்றவற்றின் ஒவ்வோர் அறிவிப்பும் உடனடியாக வராதபடி, ஒலி எச்சரிக்கைகளை அணைத்துவிட்டு, அவற்றை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அல்லது அதைவிடக் குறைவாக ஒரே நேரத்தில் பெறும்படி அமைத்துக்கொள்ளலாம். இதனால் மன அழுத்தம் குறையும், கட்டுப்பாடின்றி திரையைத் தடவுவது குறையும்.

திறன்பேசியை உடனே எடுக்க முடியாத இடத்தில் வைப்பதும் பயனுள்ளதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, வீட்டில் பணியிடத்தில் இருக்கும் போது அதை பின்புறத்தில் உள்ள அலமாரியில் வையுங்கள். கவிழ்த்து வையுங்கள் அல்லது தூங்கும்போது வேறு அறையில் வையுங்கள். சிறு தடைகள் கூட, தேவையற்ற பயன்பாட்டை குறைக்கும். சமூக வலைத்தள செயலிகள், மின்னஞ்சல் செயலிகளை ஒரே கோப்புறையில் வைத்து, முகப்புத் திரையில் காட்டாமல் மறைத்துவிடுங்கள். அவற்றை திறன்பேசியிலிருந்து  நீக்கி, மடிக்கணினியில் மட்டும் பயன்படுத்துவது மேலும் சிறந்தது. இதனால் பயன்பாட்டு நேரம் கணிசமாகக் குறையும்.

திறன்பேசி திறப்பதை சிரமமாக்குவதும் ஒரு யுக்தி. பேஸ் ஐடி (Face ID) போன்ற வசதிகளைப் பயன்படுத்தாமல், கடவு எண்ணை உள்ளிடும் முறையைத் தேர்வுசெய்யுங்கள். சிறிய தாமதம் கூட பயன்பாட்டை குறைக்கும். திறன்பேசியை எடுக்கும் முன், அதைப் பயன்படுத்தும் நோக்கங்களை மனத்தில் பட்டியலிடுங்கள் அல்லது எழுதிக் கொள்ளுங்கள் – மின்னஞ்சல் பார்க்க, சமையல் செய்முறை தேட, இரு நண்பர்களுக்கு செய்தி அனுப்ப போன்றவை. பட்டியலில் இல்லாத செயல்களைத் தவிர்க்கவும்.

திறன்பேசி திரையின் நிறங்களை நீக்கி, கருப்பு-சாம்பல் முறையில் மாற்றுவது, திரையின் கவர்ச்சியை குறைக்கும். நிறமில்லாத அறிவிப்புகள், அவற்றைப் பார்க்கும் ஆர்வத்தையும் குறைக்கும். புதிய தொழில்நுட்பங்களை விட, பழைய, சிறிய அளவிலான, குறைவான அம்சங்களைக் கொண்ட திறன்பேசியைப் பயன்படுத்துவதும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் ஒரு வழி. செயலிகள் குறைவாக இருந்தால், இயல்பாகவே தேவையற்ற பயன்பாடு குறையும்.

திறன்பேசி அடிமைத்தனத்தை வெல்லும் பயணம் ஒரே நாளில் முடிவதில்லை. ஆனால் தொடர்ந்து சிறிய மாற்றங்களைச் செய்தால், திறன்பேசி நம் வாழ்க்கையை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, நீங்கள் அதை கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்வீர்கள். தொழில்நுட்பம் நமக்கு உதவும் கருவி; அது நம் வாழ்க்கையை நிர்வகிக்கக் கூடாது.

  • நவீனா
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now